Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்

Thenparankundram Umaiyandavar Rock-cut Temple

அமைவிடம்

திருப்பரங்குன்றம் மலையின் தெற்கே தென்பரங்குன்றம் அமைந்துள்ளது.


வரலாற்றுக்காலம்

பாண்டியர் காலம்


கூடுதல் விவரங்கள்

மதுரையின் தென்மேற்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் திருப்பரங்குன்றம் மலை.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இத்தலம், பன்முக வரலாறும், மதச் சிறப்பும் நிறைந்த புனிதத் தலம்.
ந்த மலையின் தெற்குப் பகுதியில்  தென்பரங்குன்றத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோயில் இன்று உமையாண்டார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.தெற்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் குடைவரைக் கோயில், கிழக்குமேற்குத் திசைகளில் பரந்து விரிந்த செவ்வக மண்டபத்தைக் கொண்டுள்ளது.இரண்டு வரிசைத் தூண்களால் தாங்கப்பட்ட இம்மண்டபம், பாண்டியர் காலக் கட்டடக்கலைக்கு அழகிய சான்றாக விளங்குகிறது.

கருவறை, மண்டபத்தின் மேற்குச் சுவரில் செதுக்கப்பட்டிருக்கிறது.அதன் பின் சுவரில், ஆனந்த தாண்டவ நிலையில் சிவபெருமான்  நடராஜர் வடிவில் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளார்.நடராஜர், தீவட்ட வடிவில் அமைந்த திருவாசியுடன், ஆடும் நிலையில் காட்சியளிக்கிறார்.அவரின் வலப்புறம் கீழே, நந்திகேஸ்வரர் இசைக் கருவியுடன் அமர்ந்திருக்கிறார்.அதேபோல், காரைக்கால் அம்மையார் தமது ஆழ்ந்த பக்தியுடன், நடராஜரின் தாண்டவத்தைப் பார்த்துப் பரவசத்துடன் ரசிக்கும் நிலையில் காணப்படுகிறார்.நடராஜரின் இடப்புறத்தில், திரிபங்க நிலையில் பார்வதி தனி மேடையில் நிற்கிறார்.நடராஜரின் வலப்புறத்திற்கு மேலே, பஞ்சமுகக் கணபதி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.அங்குசம், அக்ஷமாலை, மோதகம், உடைந்த தந்தம் போன்றவற்றைத் தாங்கிய இச்சிற்பம், சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் கணபதியை அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. நடராஜரின் இடப்புறத்திற்கு மேலே, ஆறு முகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட சண்முகர் தமது மயிலில் பயணிப்பது  போன்று காட்சியளிக்கிறார்.அவரின் அருகே, வள்ளி தேவசேனையுடன் முருகப்பெருமான் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையின் பின்சுவரில் அர்த்தநாரீஸ்வரர்  புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். இந்த மாதொருபாகன் சிற்பத்தின் ஆண் பெண் உருவச் சேர்க்கை நுட்பம், அக் காலக் கலைஞர்களின் ஆழ்ந்த கலையுணர்வையும் ஆன்மிக உணர்வையும் காட்டுகிறது.

குகையின் முகப்பில் இருபுறச் சுவர்களிலும் பல உருவச்சிற்பங்கள் ஆழமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை 12 - 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக அறியப்படுகின்றன. குடைவரை முகப்பின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் தலா மூன்று சிற்பத் தொகுதிகள் உள்ளன.

குடைவரை முகப்பின் கிழக்குப்பக்கம் மூன்று சிற்பத் தொகுதிகள் உள்ளன. முதலில் பைரவர் சிற்பமும், அதனையடுத்து மத்தியில் திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர், சுந்தரர் சிற்பங்களும்,  அவற்றின் அருகே மாணிக்கவாசகர்  சிலை தனியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சமயக் குரவர்கள் நால்வரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

குடைவரை முகப்பின் மேற்குப் பக்கமும் மூன்று சிற்பத் தொகுதிகள் உள்ளன.
முதலில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது.அடுத்ததாக, இரண்டு சிவயோகிகள் தனித்தனியே செதுக்கப்பட்டுள்ளனர்.

கட்டடக்கலை அமைப்பியல் அடிப்படையில், இக்குடைவரைக் கோயில் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இதில் காணப்படும் சிற்பங்களின் பாணி பிற்காலக் கலைமுறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலில் குகை வெட்டப்பட்டு, பின்னர் சிற்பங்கள் செதுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

13ஆம் நூற்றாண்டில் பிரசன்னதேவர் தலைமையில் இச்சிற்பங்கள் உருவாயின என்றும் கூறப்படுகிறது. மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நினைவாக, இக்கோயிலுக்கு சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில்எனப் பெயரிடப்பட்டது என இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பாறையில் பொ
றிக்கப்பட்ட சிற்பங்களின் மொழி.காலத்தை வென்று நிற்கும் கலைஞர்களின் கைவண்ணம். இங்கே காணப்படும் உயிரோட்டமுள்ள சிற்பங்கள் வரலாற்றைத்தாங்கி நிற்கும் கல்வெட்டுக்கள் ஆகியன பாண்டியர் காலக் கலை நயத்தையும், வரலாற்றையும் வெளிப்படுத்துகின்றன.


ஊர்

தென்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்

மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 100-102.

புகைப்படங்கள்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்