அமைவிடம்
ஆத்தங்குடி கிராமத்தில் உள்ளது.
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 1929-1932
கூடுதல் விவரங்கள்
”லட்சுமி விலாஸ்” என்று பெயரிடப்பட்ட இந்தக் கட்டடம், இப்போது “ஆத்தங்குடி அரண்மனை” என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. இது ஏ.ஆர். நாச்சியப்ப செட்டியாரால், பொது ஆண்டு 1929-1932க்கிடையில், அவரது தாயின் நினைவாகக் கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் கட்டுமானத்தில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள், குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களிலிருந்து தச்சர்கள், ஓவியர்கள், இரும்பு வேலை வல்லுநர்கள் உட்படப் பலர் ஈடுபட்டனர். தலைமைக் கொத்தனாராகப் பணிபுரிந்த வீராச்சாமி நாயக்கர் மற்றும் அவருடைய குழுவினர் ஆகியோரின் முயற்சியால் இவ்வரண்மனை சிறப்பாகக் கட்டப்பட்டது.
அரண்மனையின் சுவர்கள் சுண்ணாம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, பனை வெல்லம் மற்றும் கடுக்காய் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூரையின் அமைப்புக்கு மரம், கல் மற்றும் உருக்கு இரும்புக் கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரண்மனையின் கட்டுமானம் மற்றும் அலங்காரங்களைச் செய்யத் தேவையான பொருட்கள் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஐக்கிய இராச்சியத்தில் (U.K.) இருந்து இரும்பு உத்தரங்கள், இரும்புத் தடிகள் மற்றும் வண்ண மூலப்பொருட்கள்; போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து கையால் செய்யப்பட்ட தரை ஓடுகள்; மியான்மரில் இருந்து தேக்கு; பெல்ஜியத்திலிருந்து கண்ணாடி; இத்தாலியிலிருந்து பளிங்குக் கற்கள்; எகிப்திலிருந்து விளக்குத்திரை; பிரான்ஸ் நாட்டிலிருந்து வண்ணக் கண்ணாடிகள்; உறையூர் மற்றும் திருச்சியிலிருந்து கருப்புக் கல் தூண்கள்; மற்றும் ஜப்பான் மற்றும் இத்தாலியில் இருந்து சிறப்புப் பொருட்களும் கொண்டுவரப்பட்டன.
இந்த அரண்மனையில் பல வண்ண ஓவியங்கள் மரச்சட்டங்களில் வரையப்பட்டுக் கதவுகள் மற்றும் சாளரங்களின் மேலே பொருத்தப்பட்டுள்ளன. இதில் கிருஷ்ணன், முருகன், பக்த ராமதாஸ், நந்தனார் போன்ற பக்திக் கதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து இரும்பு கிரில் வேலைகளும் ரிவெட்டிங் (Riveting) மூலம் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் அந்தக் காலக்கட்டத்தில் வெல்டிங் நடைமுறையில் இல்லை. இவ்வரண்மனையை வடிவமைத்த காலக்கட்டத்தில் சிமெண்ட், பிளாஸ்டிக் மற்றும் மின்சாரம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்
ஆத்தங்குடி
மாவட்டம்
சிவகங்கை