அமைவிடம்
காளீஸ்வரர் கோவில் எதிரில்
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 1801
கூடுதல் விவரங்கள்
மருது சகோதரர்களில் மூத்தவரான பெரிய மருதுக்குக் காளீஸ்வரர் கோவில் எதிரில், ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடத்தில் காணப்படும் மண்டபம் போன்ற அமைப்பினுள் மன்னர் பெரிய மருதின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் மருது சகோதரர்களின் தாயாரான பொன்னாத்தாள் என்பவரின் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருது சகோதரர்களின் பிரகடனமும் இங்குக் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் மருது பாண்டியர் அல்லது மருது சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெரிய மருது மற்றும் சின்ன மருது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய முக்கிய வீரர்களாவர். 1748 டிசம்பர் 15 அன்று பெரிய மருதும், 1753 ஏப்ரல் 20 அன்று சின்ன மருதும், விருதுநகர் மாவட்டம் முக்குளத்தில் வாழ்ந்த மொக்கைப் பழநியப்பன் மற்றும் அவரது மனைவி பொன்னாத்தாள் ஆகியோருக்கு மகன்களாகப் பிறந்தனர். இளம் வயதிலேயே சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரின் படையில் சேர்ந்து முக்கியப் பொறுப்புகளை ஏற்றனர். பொது ஆண்டு 1772இல் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காட்டு நவாப் படைகள் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய உடனே சிவகங்கை மீதும் திடீரெனப் போர் தொடுத்தனர். இப்போரில் அரசர் முத்து வடுகநாதர் காளையார்கோவில் என்ற இடத்தில் பலியானார். அவருடைய மனைவி இராணி வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள காட்டுக்குத் தப்பிச் சென்றனர். பின்பு பொது ஆண்டு 1780இல் மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை மீட்டு ராணி வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தினர்.
பொது ஆண்டு 1785 முதல் 1801 வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முனைந்த மருது சகோதரர்கள், தமிழர்களை மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் உள்ள போராளிகளை ஒன்றிணைத்தனர். இதனால், ஆங்கிலேயரின் கவனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகினர். இவர்களின் தலைமைச் சின்னமாக விளங்கிய காளையார்கோவில், இவ்விடுதலைப் போராட்டத்தின் நடுக்களமாக இருந்தது.
பொது மக்களின் உதவியுடன் நடந்த பல போர்களில் வெற்றியடைந்தனர். ஐதர் அலி தலைமையிலான திண்டுக்கல் படையும் இப்போரில் உதவியாக இருந்தது. ஆனால் ஒரு சமயம், இவர்களின் தலைமை இடமாக விளங்கிய காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து, மருது சகோதரர்கள், காட்டுவழியே தப்பி ஓடும்போது கைது செய்யப்பட்டனர். 1801 அக்டோபர் 24ஆம் நாளில் அவர்கள் கைது செய்யப்பட்டுத் திருப்பத்தூர்க் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் இணைந்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றித் தூக்கிலிடப்பட்டனர். பெரிய மருதின் தலை காளையார்கோவிலின் முன்பு புதைக்கப்பட்டதாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
மருது சகோதரர்களின் வீரமும் தியாகமும் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் முக்கிய இடம் பெற்றிருக்கும்; சிவகங்கைச் சரித்திரக் கும்மி, அம்மானைப் பாடல்கள், மற்றும் பல நாட்டுப்புறக் கலைகளின் வழியாகத் தமிழர் மனங்களில் இன்றும் அவர்கள் வீரத்தின் சின்னமாகத் திகழ்கின்றனர்.
ஊர்
காளையார்கோவில்
மாவட்டம்
சிவகங்கை