அமைவிடம்
சிவகங்கை பேருந்து நிலையம் அருகில்
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 1730
கூடுதல் விவரங்கள்
சிவகங்கை அரண்மனை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற வரலாற்றுத் தலமாகும். இது அரசர்கள் மற்றும் அரசியர்களின் வாழிடமாக இருந்துள்ளது. மற்றும் பல குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமான பங்காற்றியுள்ளது. பொது ஆண்டு 1730இல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடுவதற்குப் பேச்சு நடத்தினர்.
சிவகங்கை அரண்மனை, பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டுப் பின் பொது ஆண்டு 1762 -1789ஆம் ஆண்டுகளுக்கிடையே பல முறை ஆங்கிலேயர் படைகளால் தாக்கப்பட்டது. பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டில், படமாத்தூர் கௌரி வல்லப தேவர் (1801-1829) என்ற மன்னர் இங்குப் புதிய அரண்மனை ஒன்றை உருவாக்கினார், இது கௌரி விலாசம் எனப் பெயரிடப்பட்டது. இப்போது சற்றுப் பாழடைந்த நிலையில் உள்ள போதிலும், இந்த அரண்மனை, அதன் கட்டடக்கலையின் மாட்சிமையால் புகழ்பெற்று விளங்குகிறது.
கௌரி விலாசத்தில், திருமலை நாயக்கர் காலக் கட்டடக்கலைப் பாணியும், ராஜபுத்திரர்களின் கட்டடக்கலை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அரண்மனைக்கு முன்னர் உள்ள நுழைவு வாயிலில் ஒரு பழைய கடிகாரம் காணக்கிடைக்கிறது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயில், மன்னர்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்ட தலமாகும். அதுமட்டுமல்லாமல், புகழ்பெற்ற கர்நாடக இசையமைப்பாளர் பாபநாசம் சிவன், இத்தலத்தைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றியிருக்கிறார். இக்கோயில் மாலை நேரம் மற்றும் சிறப்பு நாட்களில் மட்டும் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது.
சிவகங்கை அரண்மனைக்கு உள்ளே காணப்படும் அரச சபை நீதி வழங்கும் அவையாகவும், புதிய அரசர்களுக்கு முடிசூட்டு விழா நடத்தும் இடமாகவும், பல புலவர்களைக் கௌரவித்த இடமாகவும் இருந்துள்ளது. இங்குக் கருப்புச் சலவைக்கல்லால் செய்யப்பட்ட சதுக்கம் உள்ளது. அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள ’நடை கிணறு’ என்பது, ஒரு சிறிய நீச்சல் குளமாகும். இது அரச குடும்பப் பெண்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரண்மனையின் முன்புறம் அமைந்துள்ள கல் கட்டுமானத்துடன் கூடிய தெப்பக்குளம், அரண்மனைக்கு அழகூட்டும் ஒரு முக்கிய நீர்த்தேக்கம் ஆகும். சிவகங்கை அரண்மனை, தமிழக மன்னர் மரபுகளையும், கட்டடக்கலை வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
தமிழ்நாட்டில் எத்தனையோ அரண்மனைகள் இருந்துள்ளன. ஆனால் தற்சமயம் வெகு சிலவே பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில் சிவகங்கை அரண்மனைக் கட்டடம் முழுமையாக இல்லாவிடிலும், அதன் ஒரு பகுதி இன்றளவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஊர்
அரண்மனை வாசல்
மாவட்டம்
சிவகங்கை