Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கீழக்குயில்குடி சமணர் குன்று

Keelakuyilkudi Jain Hillock

அமைவிடம்

இது நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும்.


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

எண்பெருங்குன்றம் எனப் பெயர் பெற்ற மாமதுரையின் கூவாத மலையெனச் சொல்லப்படும் கீழக்குயில்குடி சமணர் மலையின் தென்மேற்கே செட்டிப்புடவு என்றழைக்கப்படும் பகுதி இருக்கிறது. இங்கிருந்த சமணப்பள்ளி ’மாதேவிப் பெரும்பள்ளி’ என்ற பெயரில் இருந்துள்ளது. மாதேவிப் பெரும்பள்ளி பொது ஆண்டு 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சமணத் துறவிகளும் அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணக் கல்லூரியாகவும் இருந்துள்ளது.

இவ்விடத்தில் தமிழிக் கல்வெட்டுக்களும், கற்படுக்கைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இச்செட்டிப்புடவில் கீழ்நிலையில் சிற்பங்களுடன் கூடிய குகையும், குகையின் இடப்புறப் பாறை முகப்பில் புடைச்சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அழகிய காதுநீண்ட மகாவீரரின் உருவமும் காணப்படுகின்றன. இச்சிற்பத்தில் மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ் மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். இச்சிற்பத்தின் கீழ் இதைச் செய்தவர்கள் பற்றிய வட்டெழுத்துச் செய்தியும் இருக்கிறது.

குகையின் உள்ளே 5 சிற்பங்களைப் பார்க்கலாம். முதலிலும் கடைசியிலும் உள்ள இயக்கியர் சிற்பங்களைக் கொற்றாகிரியா மற்றும் அம்பியா என்ற பெயரால் அழைக்கின்றனர். இச்சிற்பங்களை, மலையின் மேல் இருக்கும் மாதேவி பெரும்பள்ளியை நெடுங்காலம் பொறுப்பாய்க் கவனித்து வந்த குணசேனத்தேவர் மற்றும் அவரின் மாணாக்கர்கள் செதுக்கியுள்ளனர் என்ற செய்தி, சிற்பத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும். "வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்படாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி" என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சமணர் குன்றின் மேல் இயற்கையாக அமைந்த வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. இப்பகுதியைப் பேச்சிப்பள்ளம் என்று கூறுவர். பேச்சிப்பள்ளத்தில் 7 தீர்த்தகங்கரர் சிற்பங்களும், செதுக்கியவர் பெயர்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளாகவும் உள்ளன. தென்கிழக்குச் சரிவில் சமண சமயத் தளமான 'பேச்சிப்பள்ளம்' உயர்ந்த மட்டத்தில் உள்ளது. இது பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான சமண நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.

சுமார் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில தொடக்கக்காலத் தமிழ் பிராமி கல்வெட்டுகள் சமணர் மலையின் உச்சியிலும், அடிவாரத்திற்கு அருகிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலே ஏறிப் பேச்சிப்பள்ளம் தளத்தை நெருங்கும் போது, 7 சமணச் சிற்பங்கள் வரிசையாகக் காட்சியளிக்கின்றன. இவை பொது ஆண்டு 860 முதல் 900 வரை ஆண்ட பராந்தக வீர நாராயண பாண்டியன் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள். ரிஷபநாத் அல்லது ஆதிநாதர், அவரின் மகள்களான பிராமி மற்றும் சுந்தரி, மகாவீரர், பார்சுவநாத், பாகுபலி ஆகியோர் இங்குக் காணப்படுகின்றனர். பார்சுவநாதரின் யக்ஷ தரணேந்திரன், பார்சுவநாதரின் தலைக்கு மேல் சாமரங்களை வைத்திருப்பதால் பாதிப் பாம்பு மற்றும் பாதி மனிதனாகக் காட்டப்படுகிறார். கழுகுமலை சமணப்படுக்கைகளுக்கு அருகில் இதே போன்ற ஓர் உருவப்படம் காணப்படுகிறது.

இந்த 7 சிற்பங்களுக்குக் கீழே, நன்கொடையாளர்களிடமிருந்து வட்டெழுத்துக்களில் 6 தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பொது ஆண்டு 9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டவை. மற்றவை பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.


ஊர்

கீழக்குயில்குடி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 1908 மற்றும் 1910 / 1950--1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. § மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 103-106
புகைப்படங்கள்

முனைவர் பா.ஆத்மநாதன், திரு. அழகுமலைக்கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், திரு. அழகுமலைக்கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், திரு. அழகுமலைக்கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், திரு. அழகுமலைக்கண்ணன்