அமைவிடம்
பெரியகுளம் ஊருக்கு மேற்கு பக்கமாக உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பின்புறம் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 1932 ஆம் ஆண்டு முதல் கல் கட்டடமாக உள்ளது.
கூடுதல் விவரங்கள்
பொது ஆண்டு 1840 ஆம் ஆண்டளவில் வராக நதியின் ஆற்றுப் படுக்கையில் ஒரு சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. அப்பள்ளத்தில் இருந்த தண்ணியில் நிரம்பி இருந்த மீன்களைப் பிடிக்கச் சென்றவர்களின் வலையில் செப்புத் திருமணி ஒன்று கிடைத்ததாம். அதை அவர்கள் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். சிற்பம் கண்டறியப்பட்ட இடத்திலிருந்து நீர் பொங்கி வழிந்ததாம். பின்னர் அப்பகுதி மக்கள் இணைந்து அவ்விடத்தில் பாண்டியர் கோயில் கட்டட பாணியில் தீர்த்தக் குளம் ஒன்றை கட்டினர். அந்த தீர்த்த குளத்திற்கு சிதம்பர தீர்த்த குளம் என்று பெயரிட்டனர்.
இத்தீர்த்த குளத்திற்கு நீர் வரும் பாதை, கலை அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. யாளி முகம் கொண்ட அமைப்பிலிருந்து நீர் வருவது போல இது அமைக்கப்பட்டுள்ளது. இத்தீர்த்த குளத்திற்கு அருகில் உள்ள கைலாசநாதர் மலைக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் இருந்து இந்த நீர் வருவதாக மக்கள் நம்புகின்றனர். இப்பகுதியில் உள்ள கோயில்களின் வழிபாட்டிற்கு இக்குளத்தின் நீரை புனித தீர்த்தமாக எடுத்துக் கொள்கின்றனர். அம்மன் வழிபாட்டிற்கும் பால்குடங்கள் எடுப்பதற்கும் பக்தர்கள் நீராடுவதற்கும் இந்த சிதம்பர தீர்த்த நீர் பயன்படுத்தப்படுகிறது. தீர்த்த குளத்தின் மேற்கு பக்க உள்பகுதியில் 8 தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. குளத்திற்கு முன்பு கன்னிமார் சிற்பம் ஒன்றும் உள்ளது. சிதம்பர தீர்த்த குளம் 34 அடி அகலமும் 61 அடி நீளமும் சுமார் 13 அடிக்கு மேல் ஆழமும் கொண்டுள்ளது.
ஊர்
பெரியகுளம்
மாவட்டம்
தேனி