அமைவிடம்
மேல்மங்கலம் கிராமத்தின் நடுவில், வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள வேத பாடசாலை அருகே உள்ளது.
வரலாற்றுக்காலம்
நாயக்கர் காலமாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
மேல்மங்கலம் சங்கர மடம், சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளையாக அமைந்துள்ளது. இம்மடத்தில் பெரிய பிரார்த்தனை மண்டபம், மேடை மற்றும் சமையலறை உள்ளன. தினமும் காலையில் குரு பாதுகா பூசையும், சந்திரமௌலீஸ்வரருக்கு ருத்ராபிஷேகமும், சங்கரருக்கு அர்ச்சனையும் செய்யப்படுகிறது. மாலையில் அனைத்து மூர்த்திகளுக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் சண்டி பாராயணம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் பிரதோஷ கால பூஜை வழங்கப்படுகிறது.
நவராத்திரி இங்கு முக்கிய திருவிழாவாகும். சங்கரரின் விக்கிரகமே சாரதாம்பாளாகவும், கடவுள் மற்றும் தெய்வங்களின் பிற வடிவங்களாகவும் அலங்கரிக்கப்படும். அம்பாளின் உற்சவ மூர்த்தியும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டும். லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை எல்லா நவராத்திரி நாட்களிலும் செய்யப்படுகிறது. சிவராத்திரி மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் நான்கு கால பூசையும் சந்திரமௌலீஸ்வரருக்கு ஏகாதசவர ருத்ராபிஷேகமும் செய்யப்படுகிறது.
வர்தந்தி கணபதி ஹோமம் சிறப்பாக செய்யப்படுகிறது. மடத்தின் குரு மற்றும் பரம குருவின் ஜெயந்தி விழாவும், ஆராதனைகளும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. சிருங்கேரி மடத்தின் நாட்காட்டியில் உள்ள மற்ற முக்கிய நாட்களும் எளிமையான முறையில் கொண்டாடப்படுகின்றன. வளாகத்தில் உண்டியல் பெட்டி இல்லை. தனிநபர்களின் நலனுக்காக செய்யப்படுகின்ற பூசைகளுக்கு கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பக்தர்கள் தேவையான பூசை பொருட்களை கொண்டு வருவர்.
மேல்மங்கலம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் வரலாறு:
சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் என்பது, தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம் ஆகும். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர். பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள். பொது ஆண்டு 1336-இல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என சொல்லப்படுகிறது.
மேல்மங்கலம் கிராமத்திற்கும் புகழ்பெற்ற ஸ்ரீ சாரதா பீடத்திற்கும் மிக நீண்ட வரலாறு உள்ளது. சச்சிதானந்த பாரதி மகாசுவாமிகள் (பொ.ஆ. 1622-1663) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அவரது பூர்வாஸ்ரம (துறவறம் ஏற்பதற்கு முந்தைய நிலை) நாட்களில் அவரை ஆதரித்த கிராமங்களில் இதுவும் ஒன்றாகும்.
துவக்க காலத்தில் மடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட எந்த கட்டிடங்களும் இல்லை. பொது ஆண்டு 1987 ஆம் ஆண்டு மேல்மங்கலத்தைச் சேர்ந்த தர்மாதிகாரி எம்.வி.சுப்பிரமணியர் உடனடியாக மடத்திற்கு ஒரு காலியான இடத்தை நன்கொடையாக வழங்கினார், மறுநாளே ஸ்ரீ ஆச்சார்யர் அந்த இடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மற்றொரு பக்தர், அந்த காலியான இடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள தனது வீட்டை, தனது விருப்பப்படி மடத்திற்கு நன்கொடையாக வழங்கினார் என சொல்லப்படுகிறது.
பின்னர் சன்னதிக்கு முன்னால் ஒரு பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டது. 20-3-1995 அன்று ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளால் கோயிலின் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நவராத்திரி கொண்டாட்டங்களுக்காக சாரதாம்பாவின் சிறிய வெண்கல சிலை உர்சவ மூர்த்தியாக சேர்க்கப்பட்டது.
ஊர்
மேல்மங்கலம்
மாவட்டம்
தேனி