அமைவிடம்
மேற்கு வெளி வீதி, டவுன்ஹால் சாலை
வரலாற்றுக்காலம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
கூடுதல் விவரங்கள்
விக்டோரியா எட்வர்ட் ஹால் என்பது விக்டோரியா மகாராணியின் நினைவை நிலைநிறுத்தவும், அவரது மகனான ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையிலும், ஒரு குழுவினரால் (சொசைட்டி), பொது ஆண்டு 1912இல் 7,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு ஏக்கர் மற்றும் பதினொரு சென்ட் நிலத்தில், ’டவுன்ஹால்’ எனப்படும் இம்மன்றம் கட்டப்பட்டது.
பொது ஆண்டு 1902ஆம் ஆண்டு மதுரையில் தலைசிறந்த ஆளுமையும் வழக்கறிஞருமான ஜி.சீனிவாச ராவ் மற்றும் அவர் நண்பர்கள் ’மதுரை மாவட்ட இலக்கியச் சங்கம்’ என்ற குழுவை உருவாக்கி, வடக்குச் சித்திரைத் தெருவில் இருந்த இ.எம்.கோபால கிருஷ்ணா புத்தகக் கடையின் மேல்மாடியில் ஒரு சிறிய நூலகத்தை நிறுவினர். பின்னர் பொது ஆண்டு 1912இல், அவ்விடத்திலிருந்து புதுக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
விக்டோரியா எட்வர்ட் மன்றத்தின் உள்ள நூலகத்தில் பழைய புத்தகங்கள், அரசு வர்த்தமானிகள் மற்றும் அரிய நாவல்கள் உட்பட 1,00,000 வெளியீடுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. விக்டோரியா எட்வர்ட் மண்டபத்தின் உயரமான சுவர்களும், நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களின் மணமும், ஒருவரை ஆங்கிலேயர் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரிய புத்தகங்கள் அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலக அரங்கில், நாடகத்துறைப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் போன்றோர் அடிக்கடி சந்தித்து உரையாடல் நடத்தினர்.
பொது ஆண்டு 1970களில், இக்கட்டடம் ஹாலிவுட் திரைப்படங்களைக் திரையிடும் ’ரீகல் டாக்கீஸ்’ என்ற சினிமா தியேட்டராக மாற்றப்பட்டது. பின்பு இந்தக் கட்டடம் மதுரையின் மன்றமாகவும், அரசு கூட்டங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் நாடக நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கட்டடம் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கல்லாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான ஒரு முக்கிய நிகழ்வுத் தளமாகவும் விளங்கியுள்ளது.
ஊர்
மதுரை
மாவட்டம்
மதுரை