வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 13ம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்.
கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் கருவறைப் பகுதி மட்டும் எஞ்சியுள்ளது. இக்கோயிலில் மரங்கள் ஊடுருவி வளர்ந்துள்ளதால் கற்சுவர் தற்போது நல்ல நிலையில் இல்லை. ஆலயத்தின் உள்ளே லிங்கம், விநாயகர் சிலை மற்றும் நந்தியின் சிலையும் உள்ளன. இக்கோயிலின் வடக்கு சுவற்றில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுகள் இக்கோயிலின் பெயரை ’இராசேந்திர சோழீசுவரமுடைய நாயனார் ' என்று குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் ’வரலூர் நாட்டு அவியூர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயில் சோழர் பெயரைத் தாங்கியிருந்தபோதிலும் தற்போதுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு பார்க்கும்போது பொது ஆண்டு 13-ஆம் நூற்றாண்டில், இக்கோயில் உகுவாக்கப்பட்டிருக்கலாம் என அறியமுடிகின்றது.
முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் பொது ஆண்டு 1246ஆம் ஆண்டு கல்வெட்டு; ’புறவாயம் மற்றும் ஊராயம்’ என்ற இரு வரிகளை பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ்வரிகள் வணிகம் செய்வோர் மீது விதிக்கப்பட்டவையாகும். இவ்வருவாயிலிருந்து இம்மன்னன் காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பொது ஆண்டு 1250ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், ’செய்துங்க நாடாழ்வான்' என்பவன் சிவன்கோயில் வளாகத்தில் திருக்காமக்கோட்டத்து நாச்சியாரை எழுந்தருளச் செய்திருக்கின்றான். மேலும், ’அருளாளப் பெருமாள் சோழகங்கதேவன்' என்பவன் இறைவிக்கு இறையிலி தேவதானமாக நிலம் வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டின் வாயிலாக அறியமுடிகிறது.
ஊர்
ஆவியூர்
மாவட்டம்
விருதுநகர்