அமைவிடம்
அழகர்கோயில் சாலையிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் பொய்கைக்கரைப்பட்டி ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் உள்ளது.
வரலாற்றுக்காலம்
நாயக்கர்
கூடுதல் விவரங்கள்
கள்ளழகர் கோயில் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இந்த தெப்பக்குளம் பொய்கைக்கரைப்பட்டியில் உள்ளது. திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டது. அழகர் கோயிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம் 600 அடி நீளமும், 600 அடி அகலமும் கொண்டுள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் பதினாறுகால்களுடன், ஒற்றைக் குவிமாடத்துடன் கூடிய மையமண்டபம் அமைந்துள்ளது. இம்மைய மண்டபம் 25 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டுள்ளது.
சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வான அழகர் புறப்பாட்டின்பொழுது அழகர் இக்குளத்தில் எழுந்தருளுவது வழக்கம். அழகர்கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று குளங்கள் இருந்தாலும் அழகர் தெப்பத்திருவிழாவிற்கு மாசி மாதம் பௌர்ணமி அன்று பொய்கைக்கரைப்பட்டிக்கு வருகிறார் என்பது இந்த குளத்தின் சிறப்பு. தெப்பத்தில் தண்ணீர் இல்லாத காலத்தில் தெப்பத்தின் கரையைச் சுற்றி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
தெப்பக்குளத்தின் அருகில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு காணப்படுகிறது. இந்த தமிழ் கல்வெட்டில் தெப்பக்குளத்தை உருவாக்கியது பற்றியும் அதற்காக அங்கு வாழ்ந்த மக்கள் அளித்த நன்கொடைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தெப்பத்தை சுற்றிலும் மரங்கள் நட்டு பாராமரித்ததையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ஊர்
பொய்கைக்கரைப்பட்டி
மாவட்டம்
மதுரை