Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பஞ்சபாண்டவர் மலை

அமைவிடம்

கீழவளவு என்னும் சிற்றூருக்கு சற்று முன்பாக


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.


கூடுதல் விவரங்கள்

மதுரையிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில், மேலூர் வட்டத்தின் அமைதியான பரப்பில் அமைந்துள்ள சிற்றூர் கீழவளவு. இவ்வூருக்குச் சற்று முன்பாக அமைந்துள்ள மலைக்குன்று, மக்கள் வழக்கில் “பஞ்சபாண்டவர் மலை” அல்லது “பள்ளி” என அழைக்கப்படுகிறது.
இக்குன்றில் அமைந்துள்ள தனிப்பாறை ஒன்றில்,  வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள்  காணப்படுகின்றன. வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவியல் குறியீடுகள், அந்தக் கால மனிதனின் சிந்தனையை... கலை உணர்வை... வெளிப்படுத்துகின்றன.
தமிழிக் கல்வெட்டுக்கள் :
இங்குள்ள இயற்கைக் குகைத் தளம் ஒன்றின் கீழே அழகாகச் செதுக்கப்பட்ட கற்படுக்கைகள் காணப்படுகின்றன. குகையின் முகப்புப் பாறையில் நீர் வடிகட்டும் விளிம்பின் கீழாக, பழமையானதோர் தமிழிக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டை 1903 ஆம் ஆண்டில் அறிஞர் வெங்கோப ராவ் கண்டறிந்தார். அதில் —
 “உபசன் தொண்டி(இல்)லவோன் கொடுத்த பள்ளி”
என்னும் பொருள் தரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின்  எழுத்துகள் ஒரே வரியில் ... ஆனால் வெவ்வேறு திசைகளில் ...சில நேராகவும், சில தலைகீழாகவும், சில இடமிருந்து வலமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இதுவே கல்வெட்டின் சிறப்பாகும்.
இக்கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.
இக்கல்வெட்டின் மூலம், தொண்டியைச் சேர்ந்த இ[ல]வோன் என்பவர்
இந்தப் “பள்ளியை”, அதாவது துறவியர் தங்கும் தலத்தை வழங்கியதாக அறிய முடிகிறது. சங்க காலத்தில் தொண்டிக்கும் இவ்வூருக்குமிடையே தொடர்பிருந்திருப்பதையும் இக்கல்வெட்டில் அறிய முடிகிறது.
மதுரைக்கும் தொண்டிக்கும் இடையிலான பழமையான வர்த்தக நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே கீழவளவு இருந்திருக்கலாம் என்பது
ஆய்வாளர்களின் கருத்து.
சமணச் சிற்பங்கள் :
குகைத் தளத்தின் மேற்புறத்தில்  அமர்ந்த நிலையில் மூன்று தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கீழ்ப்புறக் குகையில் ஆறு தீர்த்தங்கரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இரு சிலைகள்
நின்ற நிலையிலுள்ள பார்சுவநாதர் உருவங்களாக அடையாளம் காணப்படுகின்றன.  இச்சிற்பங்கள் மீது பச்சை, சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. கி.பி. 9–10ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் சமண சமய வழிபாடு சிறப்பாக இருந்ததற்கான சான்றுகள் இவை.
இத்திருமேனிகளில் ஒன்றைச் சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் செய்வித்து, நாள்தோறும், அத்திருமேனிக்கு முன்னாழி அரிசியால் திருவமுது படைத்துவர வழிவகை செய்திருப்பதோடு, திருநந்தா விளக்கெரிப்பதற்காக ஐம்பது ஆடுகளையும், தானமாகத் தந்துள்ளார்
என்ற செய்தி இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இது, அக்கால சமண சமூகத்தின் பொருளாதாரமும் பக்திச் செழிப்பும்
வலுவாக இருந்ததைக் காட்டுகிறது.

கீழவளவு — தொன்மையின் குரலை ஒலிக்கும் இக்குன்றுகள்,
தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுகளைத் தாங்கி நிற்கும்
மௌனச் சாட்சிகளாக விளங்குகின்றன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வெட்டும்,
துறவியர் தங்கிய குகைகளும், தீர்த்தங்கரர் சிற்பங்களும்
மனிதன், மலை, மதம் இணைந்த வாழ்வின் அழியாத சுவடுகளாகின்றன.
இத்தலம், வர்த்தகம், ஆன்மிகம், பண்பாடு ஆகியவை ஒன்றிணைந்த
சங்ககால வாழ்வியலை இன்னும் தன்னுள் வைத்திருக்கிறது.

 


ஊர்

கீழவளவு

மாவட்டம்

மதுரை

தகவல்

க.த. காந்திராஜன்

மீடியா கோப்புகள் இல்லை