Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அரிட்டாபட்டி இயற்கைக் குகைத்தளம்

அமைவிடம்

கழிஞ்சமலை அடிவாரத்தில்‌ இயற்கையாக அமைந்த குகைத்தளம்


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

மதுரையிலிருந்து மேலூர்‌ செல்லும்‌ சாலையில்‌ சுமார்‌ 20 கி.மீ. தொலைவில்‌, அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இவ்வூரில்‌ உள்ள ‌ கழிஞ்சமலை அடிவாரத்தில்‌ இயற்கையாக அமைந்த குகைத்தலம் ஒன்று உள்ளது. இக்குகைத் தலத்தில் துறவியர்‌ தங்குவதற்கு ஏற்பச்‌ செதுக்கிய கற்படுக்கைகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர்‌ உட்புகா வண்ணம்‌ நெற்றிப்‌ பகுதியில்‌ நீர்வடிவிளிம்பு வெட்டப்பட்டுள்ளது. அதற்குக் கீழாக ஒரு கல்வெட்டும்‌ மேலாக ஒரு கல்வெட்டும்‌ பொறிக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டு :

நீர்வடி விளிம்பிற்குக்‌ கீழாக உள்ள ‌ கல்வெட்டைத் தொல்லியல்‌ துறைப் பேராசிரியர்கள்‌ கே.வி. இராமனும்‌,‌ ௭. சுப்பராயலுவும்‌ 1971 இல்‌ கண்டறிந்தனர்‌.

இக்கல்வெட்டு ஏறத்தாழ கி.மு. இரண்டாம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்ததாகும்‌. நீண்ட - ஒருவரியில்‌ உள்ள முதல்‌ கல்வெட்டின்‌ பார்வைப்படியும்‌ வாசகமும்‌ பின்வருமாறு:

“நெல்வெளிஇய்‌ சிழிவன்‌ அதினன்‌ வெளியன்‌ முழாகை கொடுபிதோன்‌” நெல்வேலியைச்‌ சேர்ந்த சிழிவன்‌ அதினன்‌ வெளியன்‌ என்பவன்‌ இக்குகைத்‌ தளத்தை அமைத்துக்‌ கொடுத்தான்‌ என்பது இக்கல்வெட்டின்‌ பொருள்‌.

இரண்டாம் கல்வெட்டு:

_நீர்வடி விளிம்புக்கு மேலாக இக்கல்வெட்டு ஒரே வரியில்‌ வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு எழுத்துக்கள்‌ மிகவும்‌ மங்கலாகவும்‌ தேய்வுக்குட்பட்டும்‌ உள்ளன. இதனை 2003ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை அலுவலர்கள்‌ கள ஆய்வின்‌ போது கண்டறிந்தனர்‌. இதன்‌ காலம்‌ ஏறத்தாழ கி.மு. இரண்டாம்‌ நூற்றாண்டாகும்‌.

“இலஞ்சிய்‌ எளம்‌ பேரா அதன்‌ மகன்‌ எமயவன்‌ இவ்முழ உகைய்‌ கொடுபிதவன்‌”

இலஞ்சி என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்த எளம்பேராதன்‌ மகன்‌ எமயவன்‌ இந்தக்‌ குகைத்‌ தளத்தை உருவாக்கிக்‌ கொடுத்தான்‌ என்பது இதன்‌ பொருள்‌.

இரண்டு கல்வெட்டுகளும்‌ இக்குகையைச்‌ செய்து கொடுத்த ஒரே செய்தியைத்‌ தருகின்றன. இரண்டிலும்‌ இடம்பெறும்‌ நெல்வெளி, இலஞ்சி என்னும்‌ ஊர்கள்‌ தென்பாண்டி மண்டலத்து ஊர்களே. சங்ககாலப்‌ பாண்டியர்‌ குடியைச்‌ சேர்ந்த தென்பாண்டி நாட்டுத்‌ தலைவர்கள்‌ இக்குகைத்‌ தளத்தையும்‌ கற்படுக்கைகளையும்‌ அமைத்துக்‌ கொடுத்தனர்‌ எனக்‌ கருதப்படுகிறது.

இக்‌குகைத்‌ தளத்தின்‌ அருகில்‌ தாமரை மலரின் மேல் அர்த்தபரியங்காசன ஆசனத்தில் முக்குடைதரித்த மகாவீரர் சிற்பம்‌ செதுக்கப்பட்டு அதன்‌ கீழாக வட்டெழுத்தில்‌ செதுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 9-10 ஆம்‌ நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. அவருக்குப் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள்,தலைப்பகுதியில் பூ வேலைப்பாடுகள் அவற்றில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதனில்‌ இம்மலை பொற்கோட்டுப்‌ பிணையன்‌ மலை என்று சொல்லப்பட்டுள்ளது.

“ஸ்ரீ திருப்பிணையன் மலைப் பொற் கோட்டுக் கரணத்தார் பேரால் அச்சணந்தி செயவித்த தி ருமேனி பாதிரிக் குடியார் ரக்ஷை”

என்பதே இக்கல்வெட்டின் வாசகம். இக்கல்வெட்டின் மூலம் இவ்வூரின் பெயர் “பாதிரிக்குடி” என்பதையும் இம்மலை திருப்பிணையன் மலை என்பதையும் அறியமுடிகிறது. இங்குப் பொற்கோட்டுக்கரணத்தார் என்னும் குழுவினரின் பெயரில் அச்சணந்தி என்னும் சமணத் துறவி இத்திருமேனியைச் செய்துள்ளார். இவ்வூரின் பழைய பெயர் “பாதிரிக்குடி” என இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.


ஊர்

அரிட்டாபட்டி

மாவட்டம்

மதுரை

தகவல்

திரு. க.த. காந்திராஜன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டியில் கழிஞ்சமலை பகுதியில்‌ கி.பி. எட்டாம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த குடைவரைக்‌ கோயில்‌ ஒன்று அமைந்துள்ளது. இன்று இப்பகுதி மக்களால்‌ இடைச்சி மண்டபம்‌ என்று அழைக்கப்படுகிறது. ‌இக்குடைவரை ஒரு சிறிய சதுரமான கருவறையுடனும்‌ சிறிய முன்மண்டபத்துடனும்‌ அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடைவரையின் கருவறையில் லிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. இக்கருவறை வாயிலில் இரண்டு பக்கமும் நேர்த்தியான வடிவமைப்பில் வாயில் காவலர்களின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மாடங்களில்‌ வலப்புறம்‌ லகுலீசர் சிற்பமும்‌ இடப்புறம்‌ விநாயகர்‌ சிற்பமும்‌ செதுக்கப்பட்டுள்ளன.§ இக்கோயிலின்‌ கட்டடக்‌ கலை அமைப்பாலும்‌ சிற்ப உருவ அமைதிகளாலும்‌ இது கி.பி 7-8 ஆம்‌ நூற்றாண்டில்‌ முற்காலப் பாண்டியர்களால்‌ அமைக்கப்பட்டது எனக்‌ கருதப்படுகிறது. இங்குள்ள லகுலீசர்‌ சிற்பம்‌ தமிழகத்திலேயே அரிய சிற்பமாகும். சுகாசனத்தில்‌ அமர்ந்து ஒரு கரத்தை தொடை மீது வைத்தும்‌ ஒரு கரத்தில்‌ தண்டம்‌ ஒன்றைத்‌ தாங்கியும்‌ உள்ளார்‌.§ லகுலீசர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் குஜராத்தில் உள்ள காயோவரோகன் (கார்வான்) என்ற இடத்தில் பிறந்தவர். சைவ சமயத்தின் ஒரு பிரிவான பாசுபதம் என்ற சமயப்பிரிவை இந்தியா முழுவதும் பரவச்செய்ய முன்னெடுத்தவர். லகுலீச பாசுபதம்‌ என்னும்‌ சைவ சமயப்‌ பிரிவு கி.பி. 7-8 ஆம்‌ நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டிற்கு‌ வந்துள்ளதற்கு இது சான்றாகும்‌.§ இச்சின்னங்களின்‌ மூலம்‌ இவ்வூரின்‌ வரலாறு கி.மு. 2 ஆம்‌ நூற்றாண்டு முதலே தொடங்குகிறது என்பதையும்‌, சைவமும்‌, சமணமும்‌ தழைத்திருந்தன என்பதும்‌ உணரப்படுகிறது. சமய வரலாற்றிலும்‌ கோயில்‌ கலை வரலாற்றிலும்‌ இவ்வூருக்கு முக்கியப்‌ பங்கு உள்ளது.
செல்லும் வழி
மதுரையிலிருந்து மேலூர்‌ செல்லும்‌ சாலையில்‌ சுமார்‌ 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

மீடியா கோப்புகள் இல்லை