Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

யானைமலை-இயற்கைக் குகைத்தளம்

அமைவிடம்

ஒத்தைக்கடை


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டு முதல் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

மதுரை–மேலூர் சாலையில் ஒத்தைக்கடை அருகில், யானை படுத்திருப்பது போல் இயற்கையாகவே தோற்றமளிக்கும் மலை “யானைமலை” எனப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ந்த வரலாற்றைக் கொண்டது இந்த மலை.

1. தமிழிக் கல்வெட்டு

இம்மலையின் மேல் முகட்டில் ஓர் இயற்கையான குகைத் தளம் உள்ளது. அதனைத் துறவியர் தங்குவதற்கு ஏற்ப வடிவமைத்துக் கற்படுக்கைகள் வெட்டியுள்ளனர்.

குகையின் நெற்றிப் பகுதியில் மழை நீர் குகைக்குள் புகாதவாறு வழிந்தோட காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழாக கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.

’இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்’

என்பது இக்கல்வெட்டின் வாசகம்.

இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரி ஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள். இக்கல்வெட்டு 1906 ஆம் ஆண்டு கே.வி. சுப்பிரமணியர் என்பவரால் கண்டறியப்பட்டது.

2. நரசிங்கப் பெருமாள் கோயில்

ஆனைமலையின் வடக்குப் பக்கத்தில் உள்ள நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோயில் ஒரு சிறிய கருவறையும் முன் மண்டபமும் மட்டும் கொண்டுள்ளது. பிற்காலப் பாண்டியர், விசயநகர அரசர் காலத்தில் சில மண்டபங்கள் கட்டப்பட்டுக் கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட யோக நரசிம்மர், ஆறு அடி உயரமும், கைகளில் சக்கரம் மற்றும் சங்குவுடன் அமர்ந்து தியான நிலையில் காணப்படுகிறார். இங்கு நரசிங்கவல்லி தாயார், ஆஞ்சநேயர் மற்றும் கருடன் ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கருவறை வெளிச் சுவரில் 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் வடமொழியிலும் தமிழிலும் உள்ளன. வடமொழிக் கல்வெட்டு கிரந்த எழுத்திலும் தமிழ்க் கல்வெட்டு வட்டெழுத்திலும் அமைந்துள்ளன.

மாறஞ்சடையனின் அமைச்சன் மாறங்காரி இக்கற்றளியைச் செய்வித்துக் கொண்டிருக்கும்போது மரணித்ததால் அவன் தம்பி மாறன் எயினன் என்பவன் நிறைவு செய்து குடமுழுக்கு செய்தான் என்று குடைவரைக் கோயிலின் உட்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. அதே குடைவரைக் கோயில் உட்புறச் சுவரில் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு உள்ளது. அந்தக் கல்வெட்டும், மாறங்காரி இக்கோயிலை எழுப்பியது மட்டுமன்றி பிராமணர்களுக்கு அக்கிரஹாரம் ஒன்றையும் அமைத்தான் என்ற செய்தியைக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் 10 ஆம் நூற்றாண்டு தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று சோழன் பராந்தகனின் அலுவலர் அருள்நிதிகலியன் என்பவன் ஓர் ஏரி வெட்டியும், கோயில் திருவமுதுக்கும் பிராமணர் உண்ணவும் காசுகள் தானம் அளித்தான் என்ற செய்தி கூறப்படுகிறது. இவ்வூர் நரசிங்கமங்கலம் என்றும் இது கீழ் இரணிய முட்டத்துள் அடங்கிய ஒரு பிரமதேயம் என்றும் கூறப்பட்டுள்ளது. முற் சோழர் காலத்திற்குப் பின் வந்த பிற்பாண்டியர்களும் நாயக்க மன்னர்களும் இக்கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். இங்குள்ள பல துண்டுக் கல்வெட்டுகள் அவர்கள் காலக் கோயில் பணிகளைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன.

3. லாடன் கோயில்

பாண்டியர் கலைப் பாணியில் முருகனுக்கென அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் லாடன் கோயில் என அழைக்கப்படுகிறது. ஒரு சிறிய கருவறையும், முன்மண்டபமும் உடைய எழில் வாய்ந்த குடைவரைக் கோயில் இது. கருவறையில் முருகனும் தேவசேனையும் ஒரு பீடத்தின் மீது புடைப்புச் சிற்பமாக அமர்ந்திருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. கண்ணி மாலையும் சன்னவீரமும் இவ்வுருவை முருகன் என அடையாளம் காட்டுகின்றன. முன்மண்டபத்தில் சேவலும், மயிலும் தனித்தனியே அரைத்தூண்களின் மேல் அமர்ந்திருப்பது போலவும், அரசன், முனிவர் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கூரையைக் குள்ள பூதகணங்கள் தாங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. களிற்றுமுகப்படி இரண்டு புறமுமாக ஏறிச்செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்சுவரில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. அதில்

'புல்லாரி வட்டக்குறிச்சி நம்பிரான் பட்ட சோமாஜி பரிவிராஜகர் புதுக்கு'

என எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒரு பணியை வட்டக்குறிச்சி நம்பிரான் நிறைவு செய்துள்ளார் என்கின்றனர். முருகனுக்காக எழுப்பப்பட்ட தொன்மையான குடைவரைக் கோயில்களில் ஒன்றான கல் காவியம் எனலாம்.

4.சமணச் சிற்பங்கள்

ஆனைமலையின் வடமேற்கில் பாறை ஒன்றில், மகாவீரர், பார்சுவநாதர், இயக்கி, அம்பிகா பத்மாவதி இயக்கி ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டாகும். ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செய்யக் காரணமாயிருந்தவர் அல்லது பாதுகாப்பவர் பெயர்கள் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளன. களவழிநாட்டு ஏனாதி நாடி, அச்சணந்தி, பெரு வேம்பத்தூர் செழியபாண்டி, வெண்புரையைச் சேர்ந்த சாத்தன் அரையன், வேட்டஞ்சேரி புதுமை எலியம்பூதி ஆகியோர் திருமேனிகளைச் செய்துள்ளனர் என்ற தகவலும், இவற்றை திணைக்களத் தாரும், பொற்கோட்டுக் கரணத்தாரும் இக்கிராமத்துச் சபையாரும் காத்துள்ளனர் என்ற செய்திகளும் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. இத்திருமேனிகள் வெண்சுதை பூசப்பட்டு அதன் மீது பல வண்ணங்களைக் கொண்டு அழகிய ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில் குத்துவிளக்குகள், சாமரங்கள், திருவாச்சிகள் ஆகியவை காணப்படுகின்றன. தமிழகத்தின் தொடக்க கால ஓவியக் கலை ஆய்வாளர்க்கு இவை நல்ல சான்றுகளாகும். தொடக்கத்தில் உருவ வழிபாட்டையும், பெண் தெய்வங்களையும் ஏற்காத சமணம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் தமது சிந்தனைப் போக்கை மாற்றிக் கொண்டது என்பதற்கு யானைமலை சமணச் சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறாக, வரலாற்றுத் தொடக்க காலம் முதல் இன்று வரை யானைமலை பாண்டிய நாட்டின் அரசியல் வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் கலை வரலாற்றிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது தெளிவாகிறது.


ஊர்

ஒத்தைக்கடை

மாவட்டம்

மதுரை

தகவல்

திரு. க.த. காந்திராஜன்

செல்லும் வழி
மதுரை–மேலூர் சாலையில் ஒத்தைக்கடை அருகில்

மீடியா கோப்புகள் இல்லை