அமைவிடம்
மதுரை
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
மதுரை நகரத்தின் மையத்தில் எழுந்திருக்கும் பிரம்மாண்டக் கட்டடம் திருமலை நாயக்கர் அரண்மனை. நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் சின்னமாகவும், தென்னிந்தியாவின் கட்டட மரபின் சிறந்த அடையாளமாகவும் இது விளங்குகிறது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை நாயக்கர் இந்த அரண்மனையைக் கட்டத் தொடங்கினார். கோட்டைச் சுவர் சுமார் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரம் இருந்துள்ளது. இந்த மாளிகை வடிவமைப்பில் இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரும் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிக அழகானது இதுவே. திருமலை நாயக்கர் 75 வயது வரை மனைவியருடன் இவ்வரண்மனையில் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வரண்மனை இன்று காணப்படுவதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இருந்தது. இது இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டது — ஒன்று சொர்க்கவிலாசம் மற்றொன்று ரங்கவிலாசம். இவை தவிர, இசைக்கருவிகள் இசைக்கும் மண்டபங்கள், பல்லக்கு வைக்கும் இடங்கள், பூஜை செய்யும் தளங்கள், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குமிடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள், மதில் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன. அரண்மனையின் உள் நுழைவு, உயரமான தூண்கள் தாங்கிய பெரும் முற்றவெளியுடன் தொடங்குகிறது. கிழக்கு-மேற்குத் திசைகளில் 160 அடி நீளமும், வடக்கு-தெற்கு திசைகளில் 100 அடி அகலமும் கொண்ட திறந்த வெளி மைதானம். இதைச் சூழ்ந்துள்ள வளைந்த அரங்குகள், கல்லால் செய்யப்பட்ட 40 அடி உயரமுள்ள தூண்களால்தாங்கப்பட்டுள்ளன. அவற்றின் மேல், சுதை அலங்காரங்களும், இணைந்து சுமார் 60 அடி உயரத்தை அடைகின்றன. இந்த நுணுக்கமான சுதை வேலைப்பாடுகள், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநயத்தைக் காட்டும் சிறந்த உதாரணங்கள். இரண்டு குதிரைச் சிற்பங்களால் அலங்கரிக்கும் படிகளின் வழியே சென்றால் மேற்குப் பகுதியில் உள்ள எழில் வாய்ந்த பகுதியை அடையலாம். இதுவே சொர்க்கவிலாசம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் அக்காலக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டுகளான விளங்குகின்றன. இங்குள்ள கல் பீடத்தின் மேல், யானைத் தந்தத்தாலான அழகிய மண்டபமும்; அதன் நடுவில் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அரியணையும் இருந்துள்ளன. அதன் மேல் அமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினார் எனக் கூறப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள், ஓர் அரச மரபு தொடர்கிறது. அன்றைய நாளில் திருமலை மன்னன், அங்கயற்கண்ணி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று இங்கு கொண்டுவந்து அரியணையில் அமர்த்துவார். அன்று முழுவதும் வழிபாடு நடைபெறும். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். மறுநாள், மன்னன் செங்கோலை மீண்டும் கோயிலுக்குக் கொண்டுசென்று, அம்மனின் காலடியில் வைப்பார். இது, “அம்மனின் அடியானாக நாட்டை ஆளும்” அரச மரபைக் காட்டுகிறது. அதேபோல், புரட்டாசி மாத நவராத்திரி விழாவும் மிகுந்த கோலாகலத்துடன் சொர்க்கவிலாச மண்டபத்தில் நடத்தப்படும். ஒன்பது நாள்களும் திருமலை நாயக்கர் தங்க ஆடை, நகைகள் அணிந்து அரியணையில் அமர்ந்திருப்பார். சொர்க்கவிலாசத்தின் மேற்கில் அரச மாதேவியரின் அந்தப்புரம் உள்ளது. இங்கு அரச பெண்கள் இசை, இலக்கியம் கேட்டு மகிழ்ந்திருந்தனர். அந்தப்புரத்தின் மேற்குப் பகுதியில் ஆயுதசாலை இருந்துள்ளது. வடமேற்கில் எழில் மிகுந்த நாடகசாலை உள்ளது. மாலை நேரங்களில் தீவட்டி வெளிச்சத்தில் நாட்டியமகளிர் ஆடும் கூத்துகளை மன்னனும் அவர் உறவினர்களும் ரசித்துள்ளனர். நாடகசாலையின் மேற்கில் வசந்தவாவியும் அதன் வடக்கில் மல்யுத்தம், ஆட்டுக்கிடாய் சண்டை போன்ற விளையாட்டுகளுக்கான இடங்கள் என அனைத்தும் சீரக அமைக்கப்பட்டிருந்தன. நாடகசாலையின் வடகிழக்கில், இராஜராஜேஸ்வரி அம்மனுக்காக ஒரு கோயிலும் இருந்தது. இங்கு திருமலை நாயக்கர் அன்றாடம் வழிபாடு செய்து வந்துள்ளார். 1857 ஆம் ஆண்டு பெயத கடும் மழையின் காரணமாக மேற்குச் சுவர் இடிந்தது. சொர்க்கவிலாசத்தின் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டன. 1868 ஆம் ஆண்டில் சென்னை கவர்னராக இருந்த லார்டு நேப்பியர் இவ்வரண்மனையைப் பாதுகாக்க முனைந்தார். 1872ஆம் ஆண்டிற்குள் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்டு, சுதை வேலைகள் திருத்தப்பட்டு, வண்ணங்கள் புதுப்பிக்கப்பட்டன. திருமலை நாயக்கர் அரண்மனை என்பது காலத்தை வென்ற கலைச் சின்னம். இது ஒரு கட்டடம் மட்டுமன்று, மதுரையின் பெருமையையும், தமிழரின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் உயிருள்ள வரலாறு.
ஊர்
மதுரை
மாவட்டம்
மதுரை