Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

திருமலை மலை

அமைவிடம்

சிவகங்கை வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை மலை


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை மலை. இம்மலையின் மேல் பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டு தமிழிக் கல்வெட்டுகளும், குடைவரைக் கோயிலும், கட்டுமானக் கோயிலும் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் மலையின் மேல் மேற்குப் பக்கத்திலும், மலையின் அடிவாரத்தின் கிழக்கிலும், சிவப்பு வண்ணத்தில் வரலாற்றுக்கு முந்தையகால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியம் ஒன்றில், சில எளிய கோடுகளால் உருவாக்கப்பட்ட மனித உருவம் வரையப்பட்டுள்ளது. மற்றோர் ஓவியத்தில், இரண்டு மனித உருவங்கள் ஒருவர் கையை மேலே தூக்கியும், மற்றவர் பக்கமாக நீட்டியும் நிற்கின்றனர். உடல் அமைப்பின் அடிப்படையில், இவை ஆண், பெண் உருவங்கள் எனக் கருதப்படுகின்றன. அதனருகே வளைந்த கோடுகள் காட்டப்பட்டுள்ளன. அவைமலையிலிருந்து விழும் நீர் வீழ்ச்சியைப் போல தோற்றமளிக்கிறது. மற்றோர் ஓவியத்தில், மனிதன் ஒருவன் விலங்கின் மேல் ஏறியபடி காட்டப்படுகிறான். அது குதிரையாக இருக்க வாய்ப்புண்டு. இரண்டும் கோட்டோவியங்களாக, சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. அதேபோல,மலைக்குத் தெற்கே மற்றொரு பாறையில், கை கோத்தபடி நடந்துவரும் இரண்டு மனித உருவங்கள் ஒருவரை ஒருவர் நோக்கி நிற்பதைப் போல காணப்படுகின்றது. இம்மலையின் அடிப்பகுதியில்,தலையில் மரக்கிளை போன்ற அலங்காரத்துடன், இரண்டு முக்கோண வடிவில் மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இடக் கையில் கயிற்றின் ஒரு முனை இணைக்கப்பட்டுள்ளது அடையாளம் தெரியாத விலங்கின் கழுத்தில். இந்தக் காட்சிகள் அனைத்தும்,மனிதனும் விலங்கும் இணைந்திருந்த வாழ்க்கைச் சூழலை விவரிக்கின்றது. தமிழிக் கல்வெட்டுகள்: இங்குள்ள இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் மலை மேல் கிழக்கு பக்கத்தில் காணப்படுகின்றது. இவை இப்பகுதியில் எழுத்து மரபு கி.மு. முதல் நூற்றாண்டிலேயே வளர்ந்திருந்ததைக் காட்டுகின்றன. முதல் கல்வெட்டில் சில எழுத்துக்கள் சிதைந்திருந்தாலும், அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. அதில் “ …வ கரண்டை” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கல்வெட்டு, “எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்” எனக் குறிப்பிடுகிறது — அதாவது, எருகாடு ஊரைச் சேர்ந்த காவிதி கோன் அமைத்த குகைத் தளம் என்பதைப் பொருள்படுத்துகிறது. குடைவரைக் கோயில் அதே திருமலை மலையின் நடுப்பகுதியில், ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் எனப்படும் குடைவரைக் கோயில் திகழ்கிறது. இது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்திற்குரியது.சிறிய கருவறையுடன் கூடிய இக்கோயிலில்,சிவனும் பார்வதியும் உமாமகேஸ்வரராக அமர்ந்துள்ளனர். பிற்காலத்தில், 13ஆம் நூற்றாண்டில், பெரிய கட்டுமானக் கோயில் இதை மையமாகக் கொண்டு எழுப்பப்பட்டது. இன்று, மலைக்கொழுந்தீஸ்வரர் பாகம்பிரியாள் அம்மனுடன் திகழும் இந்தக் கோயில், பழந்தமிழ்ச் சிற்பக் கலையின் சிறப்பான எடுத்துக்காட்டாகும். முருகனின் பாறைச் சிற்பம், நந்தியும் துர்க்கையும் சேர்ந்து விளங்கும் கோஷ்டங்கள்,அக் காலச் சிற்பிகளின் செய்நேர்த்தியை வெளிப்படுத்துகின்றன. திருமலை மலை காலத்தின் பல அடுக்குகளையும் தாங்கி நிற்கும் வரலாற்று பெட்டகம் என்றால் மிகை ஆகாது. இங்குள்ள ஓவியங்கள், தொன்மையான கலை உணர்வையும் வாழ்வியல் சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன. இங்கு காணப்படும் தமிழிக் கல்வெட்டுகளும், குடைவரைக் கோயிலும், தமிழர் நாகரிகத்தின் தொடர்ச்சிக்குச் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. இது வெறும் பாறை அன்று…இது தமிழின் நினைவும், தொன்மையின் நாதமும், கல் பேசும் வரலாறும் ஆகும்.


ஊர்

திருமலை

மாவட்டம்

சிவகங்கை

தகவல்

திரு. க.த. காந்திராஜன்

மீடியா கோப்புகள் இல்லை