Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

காஜிமார் பெரிய பள்ளிவாசல்

Kazimar Big Mosque

அமைவிடம்

காஜிமார் தெருவில், பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.


வகை

மசூதி மற்றும் தர்கா


தலத்தின் சிறப்பு

பிற்காலபாண்டியர் காலகட்டத்தில் இருந்தே காஜிமார் பள்ளிவாசல், மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்குகிறது. ஏனெனில் இந்த மசூதி கட்டுவதற்கான நிலம் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த குலசேகர பாண்டியனால் தானமாக வழங்கப்பட்டது.


ஊர்

பெரியார் பேருந்து நிலையம்

மாவட்டம்

மதுரை

வழிபாட்டு முறை
குரான் வார்த்தைகளின் படி இங்கு தொழுகை நடைபெறுகிறது. பாங்கு என்னும் தொழுகையை, அறிக்கையின் மூலம் அறிவித்தபின் தொழுகை தொடங்கப்படுகிறது.‌ தொழுகை அரபு மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெறுகிறது. இமாம் என்பவரின் தலைமையில் தொழுகைகள் நடத்தப்படுகின்றன. இங்கு வழிபடுவோர் எளிமையான முறையில் தங்கள் முகம், கைகள் மற்றும் கால்களை பள்ளிவாசலின் முன்பு இருக்கும் தடாகத்தில் சுத்தம் செய்துவிட்டு தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழிபாட்டுக் காலம்
காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை பள்ளி வாசல் திறக்கப்பட்டிருக்கும். இதற்கு இடையில் தொழுகை ஐந்து முறை நடைபெறுகிறது. ஒவ்வொரு தொழுகையும் சுமார் பத்து நிமிடம் வரை கடைபிடிக்கப்படுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
காலம் காலமாக காஜி சையத் தாஜுதீன் அவர்களின் ஊரூஸ் தினமான ரஜப் 15 அன்று காஜிமார் பெரிய பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் குரான் ஷரீப் தமாம் மஸ்லீஸ் நடைபெற்று வருகின்றது. அத்துடனே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகைக்குப் பின் காஜி சையத் தாஜுதீன் அவர்களின் அரபி கஸீதை மஸ்லீசும், காஜி சையத் தாஜுதீன் ஷாதி மஹாலில் பெண்களின் குரான் தாமம் மஷ்லிஸும் நடைபெற்று வருகிறது. ரிஜப் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று விமர்சையாக கந்தூரி பாத்திஹா நடைபெற்று வருகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1284
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டில் காஜிமார் பள்ளிவாசல் தொடர்பான செய்திகளை சொல்லும் ஐந்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கல்வெட்டு :

ரான் திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகர பாண்டிய தேவற்கு யாண்டு எட்டாவது இருநூற்றி (நாவினால்) மதுரோதை வளநாட் டாவதின் எதிராமாண்டு சொற்கள் பள்ளி சந்தி இறையிலி யாயிருப்பாதாகப் (பெ) வேண்டுமென்று அயன் மழவராயன் நமக்கு சொன்ன (மயில்) சொற்கள் பள்ளி சந்தி இறையிலிய யிருப்பாதாக மிட்டு வரியிலார் எழுதிட்ட உள் வரியும் நம் ஓலை தர சொன்னோம் கை கொண்டு இப்படி சந்திராதித்ய செல்வதாக செம்பிலும் கல்லிலும் வெட்டிவிச்சு (கொ பாடுவான்) வீரசோழ தேவன் குறுகுலத்தரையை னெத்து இவை செல் …….. மாக குடுத்தபடி அயலானூர் நாங்கெல்லைக் குட்பட்ட நிலமும் (கருஞ்செய்) புன்செயும் நத்த தோட்டமும் குளமும் (குளப் பருப்பு) முட்பட நிலத்திலுள் உள்ள தெவதானம் பள்ளி சந்தம் நீக்கி.

இக்கல்வெட்டில், சோனகன் அரபு நாட்டான் இப்பள்ளிவாசல் இறையிலியாக இருக்க வேண்டும் என்று மழவராயன் என்னும் பாண்டிய நாட்டு அதிகாரியின் மூலம் மன்னனிடம் வேண்டிக் கொண்டான் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், மன்னனும் அன்றைய வரியை ஓலையில் எழுதித்தரச் சொல்லி பள்ளி பரிபாலனம் செய்தவரிடம் வாங்கி அதை கைக்கொண்ட பின் அவ்விடத்தை வரியிலியாக மாற்றி, செம்பு பட்டயத்திலும் கல்வெட்டிலும் வெட்டுவித்து பதிவு செய்து கொடுத்தான் என்ற செய்தியும் உள்ளது. இக்கல்வெட்டை வெட்டியவன் வீரச்சோழ தேவன் குருகுலத்திரையன் என்பவனாகும். மானியமாக அயலான் ஊர், ஐரவதம் நல்லூர், வீரகனூர் என்று நான்கு எல்லைக்கு உட்பட்ட நன்செய் மற்றும் புன்செய் நிலங்களும் தோட்டமும் குளமும் இன்ன பிற யாவும் பள்ளி வரி நீக்கி தரப்பட்டது என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
வரலாறு / கதை
இந்த மசூதியை முஹம்மது நபியின் வழித்தோன்றல் என்று அறியப்படும் ஹஸ்ரத் காசி சையத் தாஜுதீன் என்பவர் பொது ஆண்டு 1284 இல் கட்டினார். அவர் பொது ஆண்டு 1240 ஆம் நூற்றாண்டில் ஓமானில் இருந்து, மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில், இஸ்லாமிய சமய கருத்துக்களை பரப்ப மதுரை நகரத்திற்கு வந்தார். காஜி தாஜுதீன், சுல்தான் அலாவுதீன் அரசவையில் காஜியாக சேவை செய்தவர். இவர் நபி வம்சத்தை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இந்த வம்சத்தினர் மார்க்க ஆசிரியர்களாகவும், முஃப்திகளாகவும், இமாம்களகாவும், கதீப்களாகவும் பலகாலமாக சேவையாற்றி வருகிறார்கள். காஜிமார் வீதியில் வாழ்பவர்கள் காஜிதாஜுத்தின் வழிவந்தவர்கள் என சொல்லப்படுகிறது. தாஜுதீன் என்ற இந்த இஸ்லாமியப் பெரியாருக்கு மன்னன் மாறவர்மன் குலசேகரபாண்டியன், வசந்த மண்டபமாக இருந்த இடத்தைக் கொடையாகக் கொடுத்துள்ளார் என்றும், அதனைப் பராமரிக்க- விரகனூர் கிராமத்தை நிலக்கடையாக கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது. குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் காஜி தாஜுதீன் காஜியாக நியமனம் பெற்றார்.

இந்த காஜிமார் பெரிய பள்ளிவாசலில் முன்பு மத நல்லிணக்கணம் பேணும்படி, மதுரை கூடல் அழகர் திருக்கோயிலில் இருந்து காஜிதாஜுதின் மரபை சேர்ந்தவர் அங்கு இருந்த இரண்டு வட்ட கற்களை எடுத்து வந்ததாகவும் கதை சொல்லப்படுகிறது. அந்த இரண்டு வட்டக்கற்களின் மேலே உட்கார்ந்து மந்திரிப்பவர்கள் சக்தி பெருவர் என்று சொல்லப்படுகிறது.
அமைப்பு
காஜிமார் பெரிய பள்ளிவாசல் நீண்ட சதுர வடிவில், கல்தூங்கலுடன் காட்சியளிக்கிறது. முதலில் அமைக்கப்பட்ட பள்ளி சிதைவுற்றதால், நாயக்கர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
சுருக்கம்
மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் வசந்த மண்டபமாக இருந்ததை பள்ளிவாசல் அமைப்பதற்காக அவர் கொடையாக கொடுத்தார் என்றும் பள்ளிவாசலை பாராமரிப்பதற்காக விரகனூர், குலமங்கலம், ஐராவதம் நல்லூர் ஆகிய கிராமங்களையும் நிலக்கொடையாக கொடுத்துள்ளார் என்ற செய்தி இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இப்பள்ளியின் உள்ளே ’காசி சையத் தாஜுதீன் அரபி மத்ராசா’ என்ற பெயரில் இஸ்லாமிய கல்வி கற்பிக்கும் மையம் உள்ளது. இப்பள்ளி வாசலில் உள்ள தர்காவில் மீர் அஹ்மது இப்றாஹீம், மீர் அம்ஜது இப்றாஹீம், மற்றும் ஜையத் அப்துஸ்ஸலாம் இப்றாஹீம், ஆகிய வலியுல்லாஹ்க்கள் அடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகில் அமைந்துள்ளது.
செல்லும் வழி
தெற்குவாசி, மேலமாசி, ஆவணி மூல வீதி தெரு மற்றும் மேல சித்திரை தெரு வழியாக செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்.
தங்கும் வசதி
புகைப்படங்கள்

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி