Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கைத்தறி நெசவு

Handloom weaving

வகை

கைத்தறி நெசவு


கைவினைப் பொருளின் பெயர்

கைத்தறித் துணிகள்


கைவினைக் கலைஞர் பெயர்

திரு.ராஜேந்திரன், 40 ஆண்டுகளுக்கு மேல் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.


பயன்பாடுகள்

ஆடைகள், பட்டு புடவைகள்.


ஊர்

சின்னாளப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
இப்பகுதியைச் சேர்ந்த சில நெசவாளர்களுக்கு கர்நாடகாவை சேர்ந்த ஹம்பி என்ற இடம் பூர்வீகம் என்றும், சவுடாம்மன் என்ற தெய்வமே அவர்களது குலதெய்வம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இன்றளவும் இவர்கள் சவுடாம்மன் தெய்வம் பிறந்தநாளாக கருதப்படும் அம்மாவாசை நாளன்று நெசவுத்தொழில் செய்ய மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. பல ஆண்டுகள் முன்பு கதர் துணிகள் தயாரிக்கப்பட்டு வந்தபோது, நெசவாளர்களே பஞ்சை எடுத்து வந்த, பதப்படுத்தி, நூல் நூற்று, அதை வேண்டிய சிட்டமாக்கி, அதற்கு பசை போட்டு நெசவு செய்து வந்தனர். பின்னர் விசை தறிகள் வந்ததன் காரணமாக இவர்களின் தொழில் நலிவடைந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இவர்கள் மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் 'ஆர்ட் சில்க்' (art silk) எனப்படும் புது வகை பட்டு தயாரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக திண்டுக்கல் மற்றும் அருப்புக்கோட்டை பகுதியில் இருந்த நெசவாளர்களுக்கு இது உதவிகரமாக இருந்தது. பின்னர் அதுவும் விசைத்தறியில் விஸ்கோ ரகமாக தயாரிக்கப்பட்டதன் காரணத்தினால், கைத்தறி நெசவாளர்கள் அதை விட்டு வேறு ரக பட்டு தயாரிப்பில் செல்ல வேண்டி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போது சின்னாளப்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படுவது கோரா ரக பட்டாகும். மேலும் தற்போது சுங்குடி சேலைகளும் (Tie-dye) இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளையாக நெய்யப்பட்ட துணிகளில் பல்வேறு முடிச்சுகளைப் போட்டு, தேவையான நிறங்களைச் சாயமேற்றி, வெயிலில் உலர வைக்கின்றனர். துணிகள் உலர்ந்த பின்பு, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. முடிச்சுகள் இருந்த இடங்களில் வெள்ளை நிறத்தில், முன்பேத் திட்டமிடப்பட்ட வடிவங்கள் தோன்றுகின்றன. இதுவே சுங்குடி எனப்படுகிறது.

பல ஆண்டுகள் முன்பு இங்கு 5000க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இயங்கி வந்ததாகவும், தற்போது தொழில் மிகவும் நலிவடைந்து 1000க்கும் குறைந்த கைத்தறிகளே இயங்கி வருவதாக இப்பகுதி நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சுமார் 60 சதவீத மக்கள் ஜவுளி உற்பத்தி, சாயப்பட்டறைகள், அச்சு சட்டங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் இன்றும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ப. ஸ்வேதாஸ்ரீ

ப. ஸ்வேதாஸ்ரீ

காணொலி

ப. ஸ்வேதாஸ்ரீ

கேட்பொலி

ப. ஸ்வேதாஸ்ரீ