மதுரை நகரின் தென்பகுதியில், விருதுநகர் செல்லும் சாலையில், எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடம் திருப்பரங்குன்றம் மலை. இது ஒரு மலை மட்டுமல்ல,இது வரலாற்றின் அடுக்குகளையும், மதத்தின் பரிணாமத்தையும், கலைச் சிற்பங்களின் நுட்பத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் தனித்துவமான சின்னம்.
இம்மலையின் மேற்குப் பகுதியில், இயற்கையாக உருவான குகைத் தளங்கள் காணப்படுகின்றன. அந்தக் குகைகளின் உள்ளே, துறவியர்கள் தங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டவை என்பதை, அங்கு பொறிக்கப்பட்டுள்ள மூன்று தமிழிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
முதல் கல்வெட்டு:
“அந்துவன் கொடுபிதவன்” – எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
அந்துவன் எனும் ஒருவர் இக்கற்படுக்களைத் துறவிகளுக்காகச் செய்து கொடுத்தார் என்பதே அதன் பொருள்.
இதன் காலம் கிமு. முதல் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் கல்வெட்டு:
“மாரயது கயம்” – எனக் குறிப்பிடுகிறது.
இது, மாராயம் என்ற ஒருவர் இங்கு நீர்நிலை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.
இதுவும் கிமு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
மூன்றாம் கல்வெட்டு:
“எருகாடுர் இழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்” – எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ‘எருகாடுர் இழ குடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுசாத்தன் என்பவர் இந்த கற்படுக்கையைச் செய்தார் என்று அறியப்படுகிறது.
இதன் காலம் கிபி. முதல் நூற்றாண்டு.
இந்தப் பழமையான கல்வெட்டுகள் — திருப்பரங்குன்றம் சங்கக் காலத்திலிருந்தே வாழ்வும் வழிபாடும் கலந்த இடமாக இருந்ததைக் காட்டுகின்றன.
இந்தக் குகைகள்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கை, துறவியர்களின் வாழ்வியல், மற்றும் தமிழ் எழுத்து மரபு, ஆகியவற்றின் சாட்சிகளாக விளங்குகின்றன. இவை வெறும் கல்வெட்டுகள் அல்ல தமிழர் தொன்மைச் சிந்தனையின் குரலைக் கல்லில் செதுக்கிய வரலாற்றுச் சான்றுகள்.