Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

கிடாரிப்பட்டி கற்படுக்கை - அழகர்மலை


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டுக்கு முன் 1 ஆம் நூற்றாண்டு


ஊர்

கிடாரிப்பட்டி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
அழகர்மலை எனப்படும் கிடாரிப்பட்டியில் உள்ள கற்படுக்கையின் தரைப்பரப்பில் ஒரு கல்வெட்டும், குகையின் நெற்றிப் பகுதியில் 11 கல்வெட்டுமாக மொத்தம் 12 கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் கூறும் செய்திகள்:

1 ஆம் கல்வெட்டு - மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன் அதன் என்பவனது பெயர் குறிக்கப்படுகிறது.

2 ஆம் கல்வெட்டு - னாகன் (நாகன்) என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது.

3 ஆம் கல்வெட்டு - மத்திரையை (மதுரை)ச் சேர்ந்த உப்பு வணிகன் வியக்கன் கணதிகன் என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது.

4 ஆம் கல்வெட்டு - கணகஅதன் மகன் அதன் அதன் என்பவன் பெயரினைக் குறிக்கிறது. இவர் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடப் பங்களித்தவராக இருக்கலாம்.

5 ஆம் கல்வெட்டு - சபமித்தா (சர்ப்பமித்ரா சமஸ்கிருதம்) என்ற சமணப் பெண் துறவி (பமித்தி) என்று பொருள்படும். சப்மிதா என்பதின் இடையில 'த் ' சேர்த்து சப்மித்தா - சப் மித்ரா என்று பொருள் கொள்ள வேண்டும். இவரும் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடக் கொடை நல்கியுள்ளார்.

6 ஆம் கல்வெட்டு - பணித வணிகனான நெடுமலன் என்பவன் குகைத்தளம் மற்றும் சுனை அமைத்துக்கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இங்கு 'நெடுமலன் ' எனும் சொல்லில் 'ல்' சேர்த்து நெடு மல்லன் என்றும் படிக்கலாம். 'பாணிதம்’ என்பது சக்கரைப் பாகினையும் 'பணிதம்' என்பது பச்சைக் கற்பூரத்தையும் குறிக்கும்.

7 ஆம் கல்வெட்டு - கலப்பையின் கூர் பகுதியான 'கொழு' வணிகம் செய்யும் எள சந்தன் என் வணிகன் கொடுத்த கொடை பற்றிக் கூறுகிறது. எள சந்தன் என்ற சொல்லை இள சந்தன் அல்லது இளைய சந்தன் என்றும் பொருள் கொள்ளலாம்.

8 ஆம் கல்வெட்டு - கழுமாறநதன் தாரணி செய்து கொடுத்தான் என்று பொருள். இவனது ஊர் அல்லது ஏதோ ஒரு சிறப்புப் பெயர் "" ... (ஞ்)சி"" என்று முன்னொட்டுச் சொல்லாக உள்ளது. தாரணி என்பது நீர்வடி விளிம்பை அல்லது நீர்வடிந்து சேரும் சுனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

9 ஆம் கல்வெட்டு - தன்மண், கஸபன் என்பர் கொடை கொடுத்தனர்.

10 ஆம் கல்வெட்டு - வெண்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த துணி (அறுவை) வணிகன் எளஅ அடன் என்பவன் கொடையளித்திருக்கலாம்.

11 ஆம் கல்வெட்டு - தியன் சந்தன் என்பவனது பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் கல்வெட்டு - கணிநாகன், கணிநதன் என்ற இருவர் அமைத்த கற்படுக்கை எனக் குறிப்பிடப்படுகிறது.

இங்கு காணப்படும் 12 கல்வெட்டுக்களில், 8 கல்வெட்டுக்களின் இறுதியில் மூன்று வகைக் குறியீடுகள் காணப்படுகின்றன. இவற்றில் முதல் குறியீடு ஐவரது பெயருக்குப் பின்னர் வருகிறது. 2ஆவது குறியீடு இருவரது பெயருக்குப் பின்னரும், 3ஆவது குறியீடு ஒருவரது பெயருக்குப் பின்னரும் வருகிறது. இக்குறியீடு கொடுமணல் அகழாய்வுக்குழியில் கிடைத்த சங்ககாலப் பானையோட்டில் காணப்படுகிறது. இலங்கையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளிலும் இவை காணப்படுகின்றன. இது பொன்னைக் குறிப்பதாகவோ அல்லது குலக் குறியீடாகவோ இருக்க வாய்ப்புள்ளது. இங்குப் பொன் என்பது காசைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். பானை ஓடுகளிலும் இக்குறியீடு காணப்படுவதால், இது குலக்குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீடுகளிலும் காணப்படுகின்றன. 'இலங்கையில் அனைக்கோட்டையில் கிடைத்தப் பிராமி மற்றும் குறியீடு இணைந்து பதிக்கப்பட்ட முத்திரையில் குறியீடுகளுக்கு ஒலி உச்சரிப்பு இருந்துள்ளது அறியப்பட்டுள்ளது.

இங்குள்ள தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் சிறப்பம்சங்களில் ஒன்று, “மதிரை” என்ற சொல்லால் மதுரையைக் குறிப்பிடுவதாகும். இதன் மூலம் மதுரையின் தொன்மையை அறியமுடிகிறது. இக்கல்வெட்டில் மதிரை பொன் கொல்லன், மதிரை உப்பு வணிகன், பணித வணிகன், கொழு வணிகன், அறுவை வணிகன் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இன்றைய வர்த்தகச் சங்கங்களுக்கு முன்னோடியாக அன்றே வணிகக்குழுக்கள் இருந்து வந்ததை அறிய முடிகிறது. இந்த வணிகர்கள்தான் இவ்விடத்தில் கற்ப் படுக்கைகளையும், மலையின் முகப்பில் புருவம் போன்ற நீர்வடி அமைப்பையும், சுனையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்ற செய்தியை இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் பக்கம்- 46-54
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி