Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாறைக் கல்வெட்டு

Solitary Rock Inscription

அமைவிடம்

பூலாங்குறிச்சி, கண்மாய் மதகையொட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதி


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து


காலம் / அரசன்

களப்பிரர் / சேந்தன் கூற்றன்


ஊர்

பூலாங்குறிச்சி

மாவட்டம்

சிவகங்கை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 4-5ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் நிலம் தொடர்பான செய்திகளைக் கொண்ட தொன்மையான கல்வெட்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டாகும். தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் பழைமையான கல்வெட்டுகளிலேயே பெரிய கல்வெட்டும் இது தான். இக்கல்வெட்டு 45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்டுள்ளது. பூலாங்குறிச்சி மதகுமலைச் சரிவின் தென்புறப் பகுதியில் பொது ஆண்டு 400ஐச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று முழுமையாகச் சிதைந்து விட்டது. மற்ற இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன் என்ற மன்னனுக்கு உரியதாகும். மற்றொன்று அவனது மகனான சேந்தன் கூற்றனுக்கு உரியதாகும்.

வடக்குப் பகுதியில் உள்ள முதல் கல்வெட்டு தொடக்கத்திலும் நடுவிலும் சேதுமடைந்துள்ளது. இது மன்னன் சேந்தன் காலத்தைச் சேர்ந்த நிலத்தானக் கல்வெட்டாகும். இதில் கடலூர் நாட்டைச் சேர்ந்த வெள்ளேற்றான் மங்கலம் என்ற பிரம்மதேயம் குறிப்பிடப்படுகின்றது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் பிரம்மதேயத்தைப் பற்றிக் குறிப்பிடப்படும் பழைமையான குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும். மலையின் தென் பக்கம் காணப்படும் இரண்டாவது கல்வெட்டு நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது மன்னன் சேந்தன் கூற்றன் காலக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் மூன்று செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. வேள்கூரில் இருந்து பச்செறிச்சின் மலையில் தேவகுலம் (வழிபாட்டுத் தலம்) அமைக்கப்பட்டதையும், முத்தூற்றுக் கூற்றத்தில் விளமர் என்ற ஊரில் தேவகுலம் அமைக்கப்பட்டதையும், மதுரையில் உளிவயத்தன் குளத்தின் கரையில் வசிதேவனார் கோட்டம் அமைத்ததையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இச்செயல்களைச் சேந்தன் கூற்றனின் கடற்படைத் தலைவன், வேள் மருகண் மகனான எங்குமான் என்பவன் செய்திருக்கின்றான். இக்கல்வெட்டு நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டதாக கல்வெட்டிலேயே குறிப்பு உள்ளது. இக்கல்வெட்டில் அத்திகோயத்தார், உள்மனையார், நாற்பற்றிணைகள் (நான்கு வகைத் திணைகள்) ஆகிய இம்மூன்று பிரிவினரும் இப்பகுதியில் அமைக்கப்பட்ட சமணக் கோயில்களுக்குப் (கோட்டம்) பாதுகாவல் ஏற்றுக்கொண்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் காணப்படும் மன்னர்களின் பெயர்களான சேந்தன், கூற்றன் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் களப்பிரர் அரசர்களாக இருக்கக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் இரு தேவகுலங்கள் மற்றும் வசிதேவனார் கோட்டம் ஆகிய மூன்றுமே சமண சமயஞ் சார்ந்தன எனக்கொள்வதோடு இவற்றைக் கட்டிய அதிகாரிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசனும் சமண சமயஞ் சார்ந்தவனாக இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

இக்கல்வெட்டின் அருகில் பராந்தகச் சோழன் காலத்தில் செய்து வைக்கப்பட்ட தலையிழந்த ஐயனாரின் உருவம் ஒன்று காணப்படுகிறது. இதனைச் சூரன்நாகை என்பவன் செய்திருக்கின்றான். இதற்குக் காவலாகத் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகர் குழு இருந்திருக்கிறது. இச்செய்திகளை இச்சிலையருகில் காணப்படும் பராந்தகச் சோழன் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இதுதவிர இம்மலையில் சமணர்கள் வாழ்ந்த பழைமையான குகைத்தளம் ஒன்றும் உள்ளது.

பூலாங்குறிச்சி மதகுமலைச் சரிவின் வடபுறம் உள்ள கல்வெட்டு:

1. . . . . .ந்தற்கு யாண்டு நூற்றுத் . . . . .

2. . . . . . நூ . . . . . . . .

3. . . . . நா . . . .லுள்ள. . . . தா. . . . . ம . . .

4. . . . . மருகண் மகன் (க்)டலகப் பெ. . . . . . .

5. . . .ல். . . . . ன் (ஒ)ல்லையூருக்கூற்(ற)

6. . . . . . செ. . . மான்ச. . . . ப. . . . த்

7. . . . .ய. . . . ப். . . . . .

8. . . . . . . கூரங்குள . . வயல்லை . . . . . . . .

9. . . . ப . . . . நில. . . ரு நிலனும் புன்செஇ நிலனும் வெள்ளேற்றான் மங்கலமென் . . . . . . .

10. . . . . . . . .ழவரும் (இரு கரையும்) கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயக்கி

11. . . . . ங்க. . . . யும் (மீயா) ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங் கடைய வயலென்னும்

12. . . . . . . . புலத்தவன் விற்றுக் கொண்டு கொடுத்த புன்செ நிலனு(ம்)

13. . . . . . . . த்துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரான

14. . . . . . . . றராலும் பிரம. . . . யுங் காராண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்

15. . . நிலனும் பெற்றுஞ். . . . . பாண்டிநாட்டுங் கொங்க நாட்டும் மவருகாராண்சிழமையுங் கல

16. க்கிழமையுந் மேல்லா(ண்)மையுங் கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம

17. வரு குடிகளையும். . . ச. . . . ம் உடையாரும் பிரம்மதாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்

18. பாரும் முப்பூரு காப்பார். . . . (தாயந்) நெறி அறஞ் செஇதாரு தத்தமானும் வேறுவேறு ஆஇரத்தறுநூ

19. று காணத். . . . வேன். . .ன்ற . . ரு கேட்டாருலவியப் பெருந்திணை நல்லாங்கிழான் இனங்கு

20. மானும் முலவியப் (பெருந்திணை ) . . ங்கிழான் . . ளங் கூற்றனும் . . . முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி . . .

21. . . . . . . பெ . லை . . துவான் மன்றாடுகங் குமான் யா . .

22. . . . .கள்ளுக்கு . . . .

பூலாங்குறிச்சி மதகுமலைச் சரிவின் தென்புறம் உள்ள கல்வெட்டு:

1. கோச் சேந்தங் கூற்றற்கு யாண்டு நூற்றுத் தொண்ணூற்றி

2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்)ன . . ள மருகண் மகன் கடலகப் பெரும் படைத்

3. தலைவன் . . (எ)ங்கமான் னொ(ல்)(லை)யூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலைமேற் செஇவித்த தேவகுலமும்

4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி

5. த்த தாபதப்பள்ளியுள் (வ)சிதேவனாரு கோட்டமும் மவை அத்திகோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக

6. அவற்றுக்குற்றது செயக்கொண்டமையால் லவற்றை வ . . றுத்தும் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறநடையாட்டுவதூஞ் செயும்

7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் விரும்மச்சாறிகள்(ளுந்) தருமிகளு மூ(ரு)காவல் கொண்டாரு

8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சில் மலைமேற் செஇவி(த்ததேவகு) லத்துக்குக்குக் குடும்பியராவாரு குழ

9. லூருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர்) வழி(ய)ல்லது வேறூரு குடும் பாடப் பெறாமையும்

10. மத்தேவகுலத்துக்குற்றதூ(ஞ்செ)ய்து வல்லது குற்றந் தொழில் செயு(வார்)கள்ளு(த்தண்டஞ்)செயவும் மெழுதி வைக்கென்றருள்ளித்தாரு

11. கேட்டா ருலவியப் பெருந்திணை நல்லங்கிழான் இனங்குமானு முலவியப் பெருந்திணைப். . . . அறுகிழான் கீரங்காரி

12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டுவந்து கூறி(ன)ன் னோலை எழுதுவான் றாமன்காரி

13. கண்ணன் இது கடைப்பி ஓலைக் காற்கண்டெழுதிக் கொடுத்தேன் (வெ)ண்ணாட்டன்ந(ரியங்) நரியங்காரி
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
சிவங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு pg- 40§ Select inscriptions of Tamilnadu page- 4§ https://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்