Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புடைப்புச் சிற்ப கல்வெட்டு

Inscription with Bas-Relief carving

அமைவிடம்

வீரமுத்துபட்டி செங்குளி வயல் பகுதியில்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

நாயக்கர்


ஊர்

வீரமுத்துப்பட்டி

மாவட்டம்

சிவகங்கை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 17ம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
செங்குளி கிராமத்தில் உள்ள ஒரு வயலில், இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்லின் ஒரு பக்கத்தில் மனித உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவர் முழங்கால் வரையுள்ள கீழாடை அணிந்துள்ளார். மனிதனின் இடது கையில் விரித்த குடை ஒன்றும் வலது கையில் கெண்டி எனப்படும் கமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. இம்மனிதனின் தலையில் கொண்டையும் மார்பில் முப்பிரி நூலும் காணப்படுவதால், இது விஷ்ணுவின் வாமன அவதாரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்களை வழங்கும்போது, ’இது இறைவன் பெயரில் வழங்கப்படுகிறது’ என்பதை அடையாளப்படுத்துவதற்கு இது போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.



இக்கல்லின் இரண்டு பக்கங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் பக்கத்தில் 16 வரி கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில், “ ஸ்வஸ்தி ஸ்ரீ சகாத்தம் 1588 பிங்கள ஆண்டு கார்த்திகை 2-ல் வரணையில் கீழசெங்குளி, மேலசெங்குளி, முனிபட்டையருக்குலடி ஊருணிக்குமேற்கு செவுரிக்கு வடக்கு கண்டி அய்யனுக்கு கிழக்கு பசுகெடைப் பொட்டலுக்குத் தெற்கு (ஸ்ரீ) தி….” என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் 6, 7 மற்றும் 8ம் வரிகளின் இறுதி எழுத்துகள் சிதைந்துள்ளதால் அவற்றைச் சரியாகப் படிக்க முடியவில்லை.



இரண்டாம் பக்கத்தில் உள்ள 6 வரி கல்வெட்டில், ”திருமலை சேதுபதி காத்த தேவர்க்குகானம் காளிசுரர் உடையாருக்கு இட்ட பிரமதாயம். உ” என்று உள்ளது. இக்கல்வெட்டு, ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதி, காளையார்கோயில் இறைவன் காளீஸ்வரருக்கு வழங்கிய பிரமதேய நிலம் குறித்த செய்தியைத் தருவதாக இருக்கலாம். கல்வெட்டில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன- கீழசெங்குளி, மேலசெங்குளி முனிபட்டையருக்கு அடி ஊருணிக்கு மேற்கு, செவுரி கண்மாய்க்கு வடக்குகண்டிப்பட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசுகெடைப் பொட்டலுக்கு தெற்கு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஊருணி தற்போது இப்பகுதியில் காணப்படவில்லை. மற்றவை மாறுபாடில்லாது உள்ளன.



கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டு 1588 என்பது, பொது ஆண்டு 1666 ஆம் ஆண்டைக் குறிக்கும். மன்னர் ரகுநாத சேதுபதி பொது ஆண்டு 1645 முதல் 1676 வரை இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்துள்ளார். இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் புகழ் பெற்ற கிழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். இவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடம் இணக்கமாக இருந்து உதவிகள் புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப் பெற்றுள்ளார்.
தகவல்

முனைவர் முனீஸ்வரன்

புகைப்படங்கள்

து.முனீஸ்வரன்

து.முனீஸ்வரன்

து.முனீஸ்வரன்