Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

செப்பேடு

Copper Plate Inscription

அமைவிடம்

அரிய நாயகி அம்மன் கோயில்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

சேதுபதி மன்னர் காலம்


ஊர்

கண்டவராயன்பட்டி

மாவட்டம்

சிவகங்கை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1653
கூடுதல் விவரங்கள்
கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோயில் பொறுப்பாளர்களின் பாதுகாப்பில் உள்ள இந்த செப்பேடு, ஒரே ஊரில் உள்ள இரண்டு தெருவினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் இறந்து போன 150 பேருக்காக பலிக் காணி வழங்கப்பட்டதை கூறுகிறது.



சதுர வடிவில் உள்ள இந்த செப்பேட்டின் இரண்டு பக்கங்களிலும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டையில் மொத்தம் 128 வரிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் முதல் 19 வரிகள் சேதுபதி மன்னரை புகழ்ந்து கூறும் மெய்கீர்த்தியாக உள்ளன. செப்பேட்டில் உள்ள தகவல்களின் படி வேலங்குடி என்ற கிராமத்தில் தெற்குத் தெருவை சேர்ந்தவர்களுக்கும் வடக்குத் தெருவை சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில், வடக்குத் தெருவார் பொன்னமராவதில் இருந்து ஆட்களைக் கூட்டி வந்து தெற்கு தெருவை சேர்ந்தவர்களின் நில புலங்களை பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர் என்பது தெரிய வருகிறது. இதனால், தெற்குத் தெருவை சேர்ந்தவர்கள் வன்னியன் சூரக்குடிக்கு சென்று அன்றைய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரச பிரதிநிதியாக இருந்த வன்னியனாரிடம் இது குறித்து முறையிட்டு, தங்களுக்கு உட்பட்ட 24 கிராமத்தையும் மீட்டு தந்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு தருவதாக சத்திய பிரமாணம் செய்து கொடுத்தனராம். இதனைத் தொடர்ந்து வன்னியனார், எட்டு சேருவையும் 500 இளவட்டங்களையும் வடக்கு தெருவினருடன் சண்டையிடுவதற்காக அனுப்பி வைத்தார்.



வன்னியனார் அனுப்பிய படையினர் கண்டவராயன்பட்டியில் தங்கி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்களிடம் சண்டையைத் தொடங்கினர். செப்பேட்டில் உள்ள தகவலின்படி இந்த சண்டை விஜய வருடத்தில் தொடங்கி, ஜெயவருடத்தில் நீடித்து, மன்மத வருடத்தில் நிறைவு அடைந்ததாக கூறப்படுகிறது. மூன்றாண்டுகள் நடைபெற்ற இந்தச் சண்டையில் 150 இளவட்டங்கள் பலியாகினர். சண்டையில் வெற்றி பெற்ற தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் சூரக்குடி வன்னியனாரிடம் சென்று இது பற்றி தெரிவித்தனர். வன்னியனார் அவர்களை ராமநாதபுரம் கூட்டிச்சென்று நடந்தவற்றை அரசருக்கு தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வந்ததை அறிந்த அரசர் மகிழ்ச்சியுற்று வன்னியனார் சொல்லும் படி நடந்து கொள்ள அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.தெற்கு தெருவினர் வாக்குறுதி அளித்தபடி வன்னியனாருக்கு சில பகுதிகளை எழுதிக் கொடுத்தனர். அதன்படி எட்டு சேருவைக்கும் நெய்க்குப்பைபட்டி, மஞ்சினிப்பட்டி, இராசகண்டியநல்லூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி, எல்லைகளை குறிப்பிட்டு கல்நட்டு உள்ளனர்.



செப்பேட்டில் ’திருமலை நாயக்கர் தொண்டன், ரகுநாத சேதுபதி’ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால், இது திருமலை காத்த சேதுபதி காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இந்த தகவல்கள் அடங்கிய செப்பேட்டிற்கு தீங்கு செய்பவர்கள் முடிநாகத்தைக் கொண்ற தோஷத்திலும், பிராமணரை கொன்ற தோஷத்திலும் போகக் கடவதாக என சாபம் இடப்பட்டுள்ளது. செப்பேட்டை முறையாகப் பராமரித்து வருவோர் சிவ விஷ்ணு பிரதிஷ்டை செய்த புண்ணியத்தை அடைவர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. செப்பேட்டின் இறுதியில் தெற்குத் தெருவை சேர்ந்தோர் கையெழுத்திட்டுள்ளனர். செப்பேட்டின் இறுதியில் தெற்கு தெருவார் உடன்பட்டு கையெழுத்திட்டுள்ளனர். செப்பேட்டில் எழுத்துப் பிழைகள் உள்ளன. கடைசி பகுதியில் இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.



தகவல்

முனைவர் முனீஸ்வரன்

புகைப்படங்கள்

வேலாயுதராஜா,புலவர் கா.காளிராசா

வேலாயுதராஜா,புலவர் கா.காளிராசா