அமைவிடம்
உதயகிரி என்ற சுப்பிரமண்ய மலையில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன.
மொழியும் எழுத்தும்
தமிழி/தமிழ் பிராமி
காலம் / அரசன்
சங்கக் காலப் பாண்டியர்கள்
ஊர்
வரிச்சியூர்
மாவட்டம்
மதுரை
இவ்வூரிலுள்ள சுப்பிரமண்ய மலையில் மூன்று தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூன்றும், பொது ஆண்டு 1908 இல் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன. குகைத்தளத்தில் கற்படுக்கைகளும் வெட்டப்பட்டுள்ளன.
1ஆம் கல்வெட்டு- வடக்கு நோக்கி அமைந்துள்ள சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில், 'ப[ளி]ய் கொடுபி....' என்று எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, இப்பள்ளியை அமைத்தவரின் பெயரைக் குறிப்பிடுவது போல் தெரிகிறது. ஆனால் கல்வெட்டின் இறுதி பகுதி சிதைந்துள்ளதால் அவரின் பெயரை தெரிந்து கொள்ள இயலவில்லை.
2ஆம் கல்வெட்டு - கிழக்கு நோக்கி அமைந்துள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் உள்ள நீர்வடி விளிம்பின் மேலாக வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில், 'அடா...றை ஈதா வைக ... ஓன் நூறு கலநெல்...' என்று எழுதப்பட்டுள்ளது. இது நூறு கலம் நெல் (இப்பள்ளிக்கு) வழங்கப்பட்டதை தெரிவிக்கும் கல்வெட்டாக இருக்கலாம். கொடை வழங்கியவரின் பெயர் சிதைந்துள்ளது.
3ஆம் கல்வெட்டு -கிழக்கு நோக்கி அமைந்துள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் உள்ள நீர்வடி விளிம்பின் கீழாக வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில், 'இளநதன் கருஇய நல் முழஉகை’ என்று எழுதப்பட்டுள்ளது. இளநதன் என்பவரால் இச்சிறந்த குகை குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகக் கருதப்படுகிறது. பொதுவாக தமிழ் பிராமி கல்வெட்டுகளில் கற்படுக்கைகள் மற்றும் குகை அமைப்புகள் ஆகியவை கொடையாக கொடுக்கப்படும். ஆனால் நெல் குடையாக கொடுக்கப்பட்டத்தை தெரிவிக்கும் பழமையான கல்வெட்டு இதுவாகும். ’முழஉகை’ என்ற சொல் ’முழாகை’ என்று அரிட்டாபட்டி கல்வெட்டிலும் காணப்படுகிறது.
இம்மலையில் பொது ஆண்டு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயகிரீஸ்வரம் மற்றும் அஸ்தகிரீஸ்வரம் என்ற இரண்டு சிவன் குடைவரைக் கோயில்கள் உள்ளன. இம்மலையின் மேல் பகுதியில் உள்ள பாழடைந்த கோயில் வளாகத்தில் ஒரு கற்சிற்பமும் தமிழ் கல்வெட்டும் காணப்படுகின்றன. இங்குள்ள குகைத்தள கல்வெட்டுகள் மற்றும் குடைவரைக் கோயில்களை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
க.த. காந்திராஜன்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 119.§ தமிழ் பிராமி கல்வெட்டுகள், பக்கம் 32-34.
உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோவில்
தமிழிக்கல்வெட்டு குகைத் தளத்திற்கு வடக்கில்,பாறையை வெட்டி உருவாக்கப்பட்ட சிறிய குடைவரைக் கோவில் ஒன்று உள்ளது. காலைச் சூரியன் உதிக்கும் போது,அதன் ஒளி நேராக கருவறை மீது விழுவதால் இது உதயகிரீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஓங்கிய கட்டிடக்கலையோ, அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களோ இல்லை. எளிய குடைவரைக் கட்டமைப்பு, ஒரு கருவறை, அதன் முன் சிறிய புறமண்டபம். தெற்குச் சுவரில் அழகான விநாயகர் சிற்பம்:
வலம்புரி வடிவம், நேரான நிறைவு, கரண்ட மகுடம், அலங்காரங்கள்—
பழங்காலச் சிற்பக் கலையின் நுணுக்கம் அனைத்தும் இதில் பிரதிபலிக்கின்றன.
நுழைவாயிலின் இருபுறச் சுவர்களிலும் வாயிற்காவலர்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளனர். கருவறையின் மையத்தில், பாறையிலிருந்து வெட்டிய சதுர ஆவுடையாரின் மேல் லிங்கம் எழுப்பப்பட்டுள்ளது. வடக்கு கதவுச்சட்டத்தில், 8–9 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டின் சுவடு மங்கலாக தெரிகின்றது. கோவிலின் முன்னால் பிற்கால நந்தி ஒரு காவலனாய் நிற்கிறது.
அஷ்டகிரீஸ்வரர் குகைக்கோவில் — குன்னத்தூர்
தமிழிக்கல்வெட்டு குகைத்தலத்தின் தென்மேற்கில், மற்றொரு குடைவரை அஷ்டகிரீஸ்வரர் கோவில். சூரியன் மறையும் வேளையில்,
அதன் ஒளிக்கதிர்கள் கருவறை உள்ளே விழுவதால் இக்கோவிலுக்கு இந்த பெயர் வந்துள்ளது. ஒரு கருவறை மற்றும் அரைமண்டபத்துடன் கூடிய முகப்பு, எளிமை, அழகு, செம்மை இவற்றின் சங்கமம். இதிலும் பாறையை வெட்டி உருவாக்கப்பட்ட ஆவுடையாரும் லிங்கமும் காணப்படுகின்றன.
இவ்விருக் குடைவரைக்கோவில்களும் கிபி 8–9 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனக் கருதப்படுகின்றன.