வண்ணங்கள்
சிவப்பு நிறம்
காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலம்
ஓவியத்தில் குறிப்புகள்
| குகையின் கூரைப்பகுதியில் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியங்கள், மொத்தம் பதினைந்து மனித உருவங்களும் மான், நாய், மாடு போன்ற விலங்கு உருவங்களும் ஒரே தாளில் இணைந்தது போல் வரையப்பட்டுள்ளன. இவற்றின் கோடு, வண்ணம், வடிவமைப்பு ஆகியவை பெரும்பாலும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே கலைஞரின் கைரேகை போல் காட்சியளிக்கின்றன. இருப்பினும், சில இடங்களில் வேறு கைகளின் பங்களிப்பும் தெரியவருவதால், இது ஒரு குறிப்பிட்ட காலத்தின் கதை மட்டுமல்ல, பல தலைமுறைகளின் கலை மரபுத் தொடர்ச்சி என்பது தெளிவாகிறது. இக்குகையின் முதன்மைக் காட்சியாக ஒரு ஆண், ஒரு பெண், அவர்களுக்கிடையில் ஒரு குழந்தை என ஒரு குடும்பக் கட்டமைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அருகே மானும், ஆணின் முன்னே நாயும் நின்றுகொண்டிருக்கின்றன. அவர்களுக்குப் பின்புறம் நான்கு ஆண்கள் ஆயுதங்களின்றி வேட்டைக்குச் செல்வது போலவும், அவர்களுக்கு மேலே கொறடு போன்ற கருவிகளும் வரையப்பட்டுள்ளன. இவை யாவும் சேர்ந்து "இது ஒரு கூட்டத்தின், ஒரு வேட்டையின் கதை" என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இதற்கு கீழே மற்றொரு காட்சியில், இரண்டு மனித உருவங்கள், நாய்கள் மற்றும் திமிளுடன் கூடிய மாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதன் அருகே வில்லுடன் நின்று அம்பு எய்யும் ஒரு ஆண் உருவமும், அருகில் சிறிய அளவிலான ஆண், பெண் உருவங்களும் காணப்படுகின்றன. காலப்போக்கில் சில உருவங்கள் அழிந்துவிட்ட போதிலும், எஞ்சியிருக்கும் கோடுகள் இன்றும் பழங்கால வாழ்வியலின் குரலாய் ஒலிக்கின்றன. பொதுவாகப் பாறை ஓவியங்களில் ஆண், பெண் வேறுபாடுகளைத் தெளிவாகக் காண்பது அரிது. ஆனால், புலிப்பட்டி பாறை ஓவியங்கள் அந்த விதியை முறியடிக்கின்றன. இங்கு ஆணும், பெண்ணும், குழந்தையும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் பரந்த மார்பும், நீண்ட கால்களும், பக்கவாட்டில் திரும்பிய தலையுடனும் உயிரோட்டமாகத் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கோட்டோவிய வடிவில், மார்பைக் குறிக்கும் கோடுகளுடன் அழகாகக் காட்டப்பட்டுள்ளனர்.சிறுவர்கள்: அவர்களின் வளராத உடலமைப்பை ஒட்டியவாறு சிறிய அளவில் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளனர். |
ஊர்
புலிப்பட்டி
மாவட்டம்
மதுரை