Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

உசிலம்பட்டியிலிருந்து புத்தூர் செல்லும் வழியில் உள்ள புத்தூர் மலையில் அமைந்துள்ளது.


அளவு

சிற்பம் 1. உயரம் 3.9 அடி, அகலம் 2.2 அடியாக உள்ளது.

சிற்பம் 2. உயரம் 3.2 அடி. அகலம் 2.8 அடியாக உள்ளது.

சிற்பம் 3. உயரம் 1.7 அடி. அகலம் 2 அடியாக உள்ளது.

சிற்பம் 4. உயரம் 3.5 அடி அகலம் 2.3 அடியாக உள்ளது.

சிற்பம் 5. உயரம் 2.11 அடி. அகலம் 2.7 அடியாக உள்ளது.


வழிபாடு

ஆம்


ஊர்

புத்தூர்

மாவட்டம்

மதுரை

கதை
இந்த நடுகற்கள் புத்தூர் அருகில் உள்ள வடுகப்பட்டியைச் சார்ந்த பெரும்புலித்தேவன் கூட்டத்தால் வழிபடப்படுகின்றன. இவ்விடத்தில் அமைந்துள்ள ஒரு நடுகல்லில் காணப்படும் ஆண், முற்காலத்தில் அரண்மனையில் காவலராக வேலை செய்துள்ளார். அங்கு அவர் மன்னனின் மகளைக் காதலித்ததாகவும், இத்தகவல் அறிந்த மன்னன் அவரைக் கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இறந்த காவல்காரனுக்கு ஒரு தங்கை இருந்தார். அண்ணன் இறந்த செய்தியறிந்து அவரும் இறந்துவிடுகிறார். எனவே, இவர்களுக்காக ஒரு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. பிற நடுகற்களில் காணப்படும் வீரர்கள் எந்தப் போரில் இறந்தனர் என்பது தெரியவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கல்வெட்டுகள்
தெளிவாக இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 15-16ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் 5 நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நடுகற்களை மக்கள் வாழைப்பழம், பத்தி, சூடம் வைத்து வழிபடுகின்றனர். மரத்தை ஒட்டியுள்ள முதல் நடுகல்லின் இடது கீழ்ப் பகுதியில் ஒரு யானை தாக்க வருவது போலும்; குதிரையும், குதிரை மேல் உள்ள வாளேந்திய வீரனும் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராக உள்ளது போலும் இந்நடுகல் அமைந்துள்ளது. குதிரையின் கீழ்ப் பணிவிடை செய்யும் ஆண் குடை பிடித்தபடி உள்ளான்.

இரண்டாவது நடுகல்லில் உள்ள வீரன் தன் வலக்கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வலப்புறம் வீரனின் மனைவியும் காணப்படுகிறார். நடுகல் பாதியளவு மண்ணுக்குள் புதைந்துள்ளது.

மூன்றாவதாக உள்ள சிறு நடுகல்லில் காணப்படும் வீரன் வாளும் கேடயமும் பிடித்துள்ளான். இந்நடுகல்லில் காணப்படும் கல்வெட்டு தெளிவாக இல்லை.

நான்காவது நடுகல்லில் உள்ள வீரன் தன் வலக்கையில் வாளும், இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வலப்புறம் வீரனின் மனைவியும் காணப்படுகிறார்.

ஐந்தாவது நடுகல்லில் உள்ள வீரன் தன் வலக்கையில் வாளும், இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாறு குதிரைமேல் அமர்ந்துள்ளான். இவனுக்குக் கீழ் இவன் மனைவியும், குடை பிடித்தபடி பணிவிடைப் பெண்ணும் உள்ளனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேய்க்காமன்- தென்கல்லக நாட்டில் நடுகற்கள்
புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்