Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

உச்சப்பட்டி கருப்பசாமி கோயிலில் நடுகல் உள்ளது.


அளவு

உயரம் 5.3 அடி, அகலம் 3.10 அடி.


வழிபாடு

தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.


ஊர்

உச்சப்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. உச்சப்படி முற்காலத்தில் உச்சி விருமன்பட்டி என்றழைக்கப் பட்டதாம். அக்காலத்தில், நாயக்கர்கள் ஆட்சியின் போது, பிக்சத்தேவன் என்பவர் இப்பகுதியில் காவல் காரநாக வேலை செய்து வந்தார். அச்சமயம் திருட்டு அதிகமாக இருந்ததால், திருடனை பிடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று மன்னர் அறிவித்தார். பிச்சத்தேவன் பத்து நாட்களில் திருடனை பிடித்து அவனது கையையும் வெட்டிவிட்டார்.

பிச்சத்தேவனின் செயலை பாராட்டி, அவ்வூரில் எந்த பெண்ணை அவன் விரும்புகிறானோ அவரை அவன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மன்னர் கூறினார். பிச்சத்தேவன் செவ்வந்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.

அதன் பின்பு பலநாள் திருடர்களை பிடித்து மன்னரிடம் ஒப்படைத்தார் பிச்சத்தேவன். ’இவர்களின் ஒரு கை என்ன ஆயிற்று?’ என்றும் மன்னர் வினவினார். அதற்கு அந்தத் திருடர்கள், ’பிச்சத்தேவன் எங்கள் கையை வெட்டி விட்டார்’ என்று கூறினர். பிச்சத்தேவன் தன் ஆணையை மீறி நடந்துகொண்டான் என்று கோபமுற்ற அந்த மன்னன், "பிச்சத்தேவனை கொன்றுவிடுங்கள்!" என்று ஆணையிட்டார். வீரர்களும் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் வைத்து பிச்சத்தேவனைக் கொன்று தீயிட்டு எரித்துவிட்டனர்.

ஊரை காவல் காத்து வந்த பிச்சத்தேவனின் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நடுகல்லில் காணப்படும் மற்றொரு நபர் பற்றிய குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை.
காலம் / அரசன்
பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
நடுகல் புடைப்பு சிற்பத்தில் இரு ஆண்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இருவரும் ஒரே மாதிரியான உருவ அமைப்பை கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் வலக்கையில் வாளையும் இடக்கையில் ஈட்டியையும் ஏந்தியுள்ளனர். தங்கள் இடையில் குறுவாள் வைத்துள்ளனர். அணிகலன்கள் மற்றும் கொண்டை அணிந்துள்ள இவர்களுக்கு நீள் காதுகள் உள்ளன.

நடுகல் வழிபாட்டின்போது பிச்சத்தேவன் மனைவி செவ்வந்தி, ஒரு பெண்ணை கோடாங்கி பிடித்து வெறியாட்டம் ஆடுவதாக ஊர் மக்களால் நம்பப்படுகிறது.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 68.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்