Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல் சிற்பம்

Hero stone sculpture

அமைவிடம்

கீரிப்பட்டி கிராமத்தில் வங்காருசாமி கோயிலில் உள்ளது.


அளவு

உயரம் 6 அடி


வழிபாடு

ஆடி, தை, வைகாசி மாதங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கிடாய் வெட்டி, மொட்டை அடித்து வழிபடுகின்றனர்.


ஊர்

கீரிப்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. முற்காலத்தில், உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாரும் கன்னிவாடி ஜமீன்தாரும் உறவினராக இருந்தனர். ஒருநாள் விருந்தின் போது கன்னிவாடி ஜமீன்தார், "எங்கள் ஊரில் சிறந்த வாள் வீச்சாளன் ஒருவன் உள்ளான். அவனை அடக்க உங்களிடம் நல்ல ஆள் உண்டா?" என உத்தப்ப நாயக்கனூர் ஜமீனிடம் கேட்டார். உடனே உத்தப்ப நாயக்கனூர் ஜமீன்தார் தன் ஆட்களை அனுப்பி தங்கள் ஊரில் உள்ள சிறந்த வீரனை அழைத்து வர சொன்னார்.

அப்பொழுது, வங்காரு தேவன் என்பவர் கன்னிவாடி சந்தை பகுதியில் வளரி வீச்சுக்கு பிரபலமாக இருந்ததை அறிந்து அவரை அழைத்து வந்தனர். வங்காரு தேவனின் திறமையை ஜமீன்தார் சோதிக்க எண்ணிய பொழுது வங்காரு தேவன், பனங்காய்க்கு குறிவைப்பது போல் சைகை செய்து ஒரு நொடியில் ஜமீன்தாரின் தலைப்பாகை தாக்கி கீழேத் தள்ளி, சோதனையில் வெற்றி பெற்றார்.

இவர் வளரி வீசுவதில் மிகுந்த வல்லமை படைத்திருந்ததால், உத்தம நாயக்கனூர் ஜமீன்தார் இவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டார். பின்பு வங்காரு தேவனை கன்னிவாடி ஜம்மீனுக்காக வேலைக்கு அனுப்பினார். அப்பொழுது வங்காரு தேவன் ஒரு வீரனின் தலையை வளரியால் தாக்கி வீழ்த்தினார். உயிரிழந்த அந்த நபரின் தாய், ’என் மகனை கொன்ற மாவீரனை நான் பார்க்க வேண்டும்’ என்று எண்ணி வங்காரு தேவனைச் சந்திக்கிறார். அவர் வங்காரு தேவரிடம், “உங்கள் உடலை ஒருமுறைத் தொட்டுப் பார்க்கட்டுமா?” எனக் வஞ்சகமாகப் பேசி, வங்காருத்தேவரின் உடலில் விஷமருந்தைத் தடவுகிறார். இதனால், வங்காருத்தேவன் இறந்து விடுகிறார்.

வளரி வீச்சல் மிகுந்த வல்லமை மிக்கராக இருந்த வங்காரு தேவனே இந்நடுகல் சிற்பத்தில் காணப்படும் நபராகும்.s
கல்வெட்டுகள்
நடுகல்லின் பீடத்தில் தமிழ் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 19 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
நடுகல் சிற்பத்தில் காணப்படும் நபர் வளரி வீசுவதில் வல்லமை மிக்கவராக இருந்துள்ளார். வங்காரு தேவன் என்ற பெயர் பெற்ற இவர், கன்னிவாடி சந்தை பகுதியில் வளரி வீசுக்கு பிரபலமாக இருந்ததாக பல செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன. சிற்பத்தில் காணப்படும் வங்காரு தேவன் தன் வலக்கையில் வளரியை ஏந்தி கம்பிரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இவர் அணிகலன்களும், முழங்கால் வரை நீளும் ஆடையும் அணிந்துள்ளார். இவரது இடது காலின் கீழ் முதலை போன்ற ஒரு விலங்கின் உருவமும் காணப்படுகிறது. இந்த நடுகல்லைச் சுற்றி பொது ஆண்டு 1980 இல் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் தற்போது வங்காருசாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 82.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்