Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of hero stones

அமைவிடம்

கீழக்குயில்குடி மலையடி ஐயனார் கோயிலுக்கு முன்புறம் உள்ளது.


வழிபாடு

இந்நடுகற்கள் ஊரில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினரால் வழிபடப்படுகிறது. முன்னோர் வழிபாட்டிற்குரிய நாட்களில், இவர்கள் நடுகல்லைச் சுற்றி சுத்தம் செய்து மாட்டுச்சாணம் வைத்து தரையில் பூசி மொழுகுகின்றனர். ஆமணக்கு எண்ணையில் விளக்கு ஏற்றுகின்றனர். ஆடி மாதம் குறிப்பிட்ட நாட்களில் வரகுமாவு உருண்டைகள், வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை வைத்து நடுகற்களை வழிபடுகின்றனர்.


கதை

சிற்பம் 1) முற்காலத்தில் கீழக்குயில்குடி ஊர் மந்தையில் கிழக்குப் பக்கம் களஞ்சியம் இருந்தது. களஞ்சியம் என்பது ஊர் மக்கள் தானியங்களை சேமித்து வைக்கும் இடமாகும். இவ்வாறு ஊர் மக்களால் கொடுக்கப்பட்ட நெல்களஞ்சியத்தை ஊரில் உள்ள குறிப்பிட்ட வகையறாக்கள் சுழற்சி முறையில் காவல் காத்து வந்தனர். ஒரு சமயம் நாடோடிப்படைகள் குயில்குடி மலை அருகில் வரப்போகிறது எனத் தெரிந்த காவல்காரர்கள் ஊருக்குள் அவர்களை செல்ல விடாமல் போரிட்டனர். இந்த போரில் இறந்த ஒருவருக்காக இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிற்பம் 2) முற்காலத்தில் இப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு ஊரைக் காவல் காத்து வந்த ஒருவருக்காக இந்நடுக்கல் எடுக்கப்பட்டுள்ளது. இவர் தன் மாடுகளுக்குப் பல பயிற்சிகளை கொடுத்திருந்தார். அவரின் கை அசைவு மற்றும் சைகைகளுக்கு ஏற்ப மாடுகளுக்கு ஓடவும் தாக்கவும் கற்றுக் கொடுத்திருந்தார். படைவெட்டுக் காலத்தில் ஒரு சமயம், ஊருக்குள் பல படைகள் வந்து மாடுகள் அனைத்தையும் கவர்ந்து செல்ல முயன்றனர். இவர்களை மாலிக்காப்பூர் படைகள் என ஊர் மக்கள் கூறுகின்றனர். அப்பொழுது கவர்ந்து செல்லப்படும் மாடுகளில் தான்னால் பயிற்சி அளிக்கப்பட்ட மாடுகளும் இருப்பதை இவர் கண்டார். உடனே அவற்றிற்கு எதிரி படைகளை குத்தி வீசும்படி சைகை செய்தார். மாடுகளின் தாக்குதலால் எதிரி படையினர் பலர் இறந்து விட்டனர். பின் மாடுகளை அழைத்து வரும்வழியில் மரத்தின் மேல் மறைந்து கொண்டிருந்த எதிரி தாக்கியதால் இவர் இறந்துவிடுகிறார்.

சிற்பம் 3) பொதுவாக கிராம மக்கள் குறிப்பிடும் படைவெட்டு காலம் என்பது படையெடுப்புகள் அதிகம் இருந்த காலமாக கருதப்படுகிறது. இது எந்தத் திசையில் இருந்து படைகள் வரும் என்று தெரியாத காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. அச்சமயம், ஒரு தாய் தன் இரண்டு மகன்களையும் ஊர் காவலுக்காக அனுப்பி வைக்கிறார். மறுநாள் மகன்கள் வீடு திரும்பாததால் அவர்களைத் தேடி தாய் செல்கிறார். ஒரு இடத்தில் இரு மகன்களும் இறந்து கிடப்பதைக் கண்டு, தான் கோழைகளை பெற்றெடுத்துவிட்டோம் என்று எண்ணி வருந்துகிறார். ஆனால் தொலை தூரத்தில் பல ஆயிரக் கணக்கில் படைகள் செல்வதைக் கண்டு, தன் மகன்கள் அவர்களுடன் போர் புரிந்து வீரமரணம் அடைந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்கிறார். இரண்டு மகன்களையும் இரண்டு தோள்பட்டையில் தூக்கிக் கொண்டுவந்து, நடந்தவற்றை ஊராரிடம் சொல்லிக் கதருகிறார். தன் கணவனையும் மகன்களையும் படைவெட்டில் இழந்த அந்த தாய், தானும் வீர மரணம் அடையவேண்டும் என்று எண்ணி தன் நாக்கைத் தானே பிடுங்கி இறக்கிறாள். இம்மூவருக்காக நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.


ஊர்

கீழக்குயில்குடி

மாவட்டம்

மதுரை

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 12-13 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
சிற்பம் 1) இடப்புறம் உள்ள நடுகல்லில், ஆண் தன் இடக்கையை, இடுப்பில் உள்ள வளரியை அணைத்தபடியும், வலக்கையில் வாள் ஏந்தியபடியும், முதுகில் கேடயமும் வைத்தபடியும் நிற்கிறார், இவருக்கு வலப்புறம் இவர் மனைவியும் உள்ளார். நடுகல் அமைந்துள்ள பீடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிற்பம் 2) நடுவில் உள்ள நடுகல்லில், ஆண் தன் இடக்கையை, இடுப்பில் உள்ள வளரியை அணைத்தபடியும், வலக்கையில் வாள் ஏந்தியபடியும், முதுகில் கேடயமும் வைத்தபடியும் நிற்கிறார். இவர்க்கு வலப்புறம் இவர் மனைவியும் உள்ளார்.

சிற்பம் 3) வலப்புறம் தனியாக உள்ள கருவறையில் ஒரு பெண் தன் வலக்கையில் பூச்செண்டு பிடித்தபடி நிற்கிறார், அப்பெண்ணின் இடப்புறம் உள்ள நடுகல்லில் ஆண்கள் இருவரும் ஒரே மாதிரி வலக்கையில் வாள் ஏந்தியபடியும், இடக்கையில் வளரி ஏந்திய படியும் காட்சியளிக்கின்றனர்.
அளவு
சிற்பம் 1) உயரம் 4.56 அடி, அகலம் 2.27 அடி

சிற்பம் 2) உயரம் 4 அடி, அகலம் 2.26 அடி

சிற்பம் 3) (அ) உயரம் 3.4 அடி, அகலம் 1.16 அடி

(ஆ) உயரம் 4.55 அடி, அகலம் 3 அடி
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 36-38.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்