Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இராணி சோலைத்தேவன் கோயில் நடுகற்கள்

Rani Solaidevan Temple Hero stones

அமைவிடம்

இராணி சோலைதேவன் கோயிலில் இரண்டு நடுகற்கள் உள்ளன.


அளவு

சிற்பம் 2) உயரம் 4.1 அடி, அகலம் 3.7 அடி


வழிபாடு

தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.


ஊர்

உச்சப்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. விஜயநகர மன்னன் மதுரையின் ஆட்சியை பிடித்த போது, தமிழகத்தைக் கைப்பற்ற பல பகுதிகளில் நாயக்கர் படைவீரர்களை அமர்த்தினார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தொட்டிய நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு அமர்த்தப்பட்ட நாயக்க குடிகள் தனக்கென்று கிராமங்களை உருவாக்கினராம். உச்சப்பட்டி அருகிலும் திடியன் மலையைச் சுற்றியும் ஒன்பது புதிய கிராமங்களை உருவாக்கினர். இதைப் பார்த்த அப்பகுதி பூர்வீக குடிமக்களான கழுவத்தேவன், நாகத்தேவன், சின்னக்கண்ணன் மற்றும் அலங்காரம் ஆகியோர் இணைந்து தொட்டிய நாயக்கர்கள் உருவாக்கிய கிராமங்களை தீவைத்து சூரையாடினர்.

ஒருநாள் இரவு முழுவதும் நடைபெற்ற கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நாயக்கப்படைகள் ஊரை விட்டு ஓடி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவ்வூரில் இருந்த ஒரு சிறுமியை இவர்கள் தாக்காமல் சென்று விட்டனர். கலவரம் முடிந்தவுடன் ஊருக்கு திரும்ப வந்த நாயக்க மக்கள் மற்றும் படைகள் அச்சிறுமி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று நாயக்க மன்னனிடம் தெரியப்படுத்தினர். நாயக்க மன்னர் சிறுமியைத் தாக்கியவர்களை கொன்றுவிடுமாறு ஆணையிட்டார்.

நாயக்க வீரர்கள், மலையடிவாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கழுவன் மற்றும் நாகன் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களை யானை காலால் மிதிக்க வைத்து கொன்றனர். இவர்கள் இருவரும் இறந்ததை அறிந்த சின்னக்கண்ணனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். இறந்து போன கழுவன் மற்றும் நாகனுக்காக இந்நடுகல் எடுக்கப்பட்டு உள்ளது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரண்டு நடுகல் புடைப்புச் சிற்பங்கள் வைக்கப்பட்டு 'இராணி சோலைத்தேவன் கோயில்' என்ற பெயரில் வழிபடப்படுகின்றன. இடப்பக்கம் உள்ள நடுகல்லில் உள்ள ஆண் தன் வலக்கையில் வாளும், இடக்கையால் தன் இடுப்பில் உள்ள வளரியை பிடித்தபடியும் காட்சிபடுத்தப்பட்டுள்ளான். இவ்வீரன் தன் இடுப்பில் குறுவாள் வைத்துள்ளான். இவன் இடப்புறம் இவனது மனைவி காணப்படுகிறார். இவர் தன் இடக்கையில் பூச்செண்டும், வலக்கையில் குடுவை போன்ற பொருளையும் ஏந்தியுள்ளார்.

வலப்புறம் உள்ள நடுகல் சிற்பத்தில் காணப்படும் ஆண் தன் வலக்கையில் வாளும் இடக்கையில் ஈட்டி போன்ற ஆயுதத்தையும் ஏந்தியுள்ளான். இம்மூவரும் பல அணிகலன்கள் அணிந்தவாறு, கொண்டையுடனும் நீள் காதுகளுடனும் காட்சிபடுத்தப்பட்டுள்ளனர். இவ்விரு நடுகற்களின் மேல் பகுதியில் கீர்த்தி முகமும் அலங்கார வடிவங்களும் காட்டப்பட்டுள்ளன.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 104-106.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்