Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாட்டையா நடுகல்

Paattaiya hero stone

அமைவிடம்

கிராமத்தின் வடக்குப் பக்கம் உள்ள பாட்டையா கோயிலில் அமைந்துள்ளது.


வழிபாடு

தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர். இந்நடுகல்லுக்கு திருவிழாவும் நடத்தப்படுவது சிறப்பாகும்.


கதை

இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. உரப்பனூர் பகுதியில் அக்காலத்தில் கடும் வறட்சி நிலவியதால் சுந்தன் என்ற 13 வயது சிறுவனின் பெற்றோர் அவனை சேத்தூர் பாளையத்திற்கு அனுப்பி வைத்தனர். இவன் வளர்ந்து 24 வயது ஆனபோது சேத்தூரில் ஒரு புலி வந்து கிராம மக்களைத் துன்புறுத்தியது. எனவே சேத்தூர் ஜமீன்தார் புலியைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். சேத்தூர் ஊரணிக்கு அருகில் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த புலியை ஏமாற்றி ஊரணிக்குள் விழச் செய்தான் சுந்தன். புலியை ஈட்டியால் குத்தி கொன்ற பிறகு அதன் இரு காதுகளையும் அறுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

வேறு சிலர், 'புலியை நான்தான் கொன்றேன்' என்று கூறி ஜமீன்தாரிடம் சன்மானம் பெற முயன்றனர். ஆனால் சுந்தன் புலியின் இரண்டு காதுகளையும் காண்பித்து தானே புலியைக் கொன்றவன் என நிரூபித்தான். ஜமீன்தார், 'சன்மானமாக என்ன வேண்டும்?' என்று கேட்ட போது, சுந்தன், 'என் அப்பாவின் நிலங்களை என் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை மீட்க உங்கள் படைகளை எனக்கு தாருங்கள்' என்றான். ஜமீன்தாரும் ஏற்றுக் கொண்டார். சுந்தன் படைகளுடன் உரப்பனூருக்குள் வந்து தன் பூர்வீக நிலங்களுக்கு உரிமை கோரினான். அன்று ஊரில் கடும் சண்டை நடைபெற்றது. இச்சண்டை நடைபெற்ற இடத்தை இன்றும் நத்த பேய்காடு என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர்.

'நான் பிறந்த ஊரை இனி நானே ஆள்வேன்!' என்று சபதம் எடுத்த சுந்தன், திருமலை நாயக்கரிடம் உரிமை கோருவதற்காக சென்றான். திருமலை நாயக்கரும் அவன் கோரிக்கையை ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. சுந்தன் தன் முன்னோர்கள் கட்டிய கோட்டைக் கிடங்கில் தங்கி ஆட்சி செய்து வந்தான். சுந்தன் சொக்கம்மா என்ற பெண்ணை மணந்து நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததாக இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பின்பு ஒரு நாள், சுந்தன் எதிரி குழுவால் தாக்கப்பட்டான். அவன் எப்படியோ குதிரையில் தப்பித்து திருமலை நாயக்கர் அரண்மனைக்குள் சென்றவுடன் இறந்து விட்டான். அவனைக் கண்டு வருத்தமடைந்த மன்னர், நாகமலை அருகில் அதலை ஊரில் கல் எடுத்து அவன் பிறந்த ஊரான உரப்பனூரில் இந்நடுகல்லை அமைத்ததாக செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.


ஊர்

ஊராண்ட உரப்பனூர்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
நடுகல் புடைப்புச் சிற்பத்தின் நடுப்பகுதியில் காணப்படும் ஆண், தன் இடது பக்கம் குதிரையின் மேல் வாள் ஓங்கியபடி முன்னேறி வரும் எதிரியை தன் வலக்கையில் உள்ள கட்டாரி போன்ற ஆயுதத்தால் தாக்குவது போல காட்சி அமைந்துள்ளது. இவன் தன் இடக்கையில் கேடயம் ஏந்தியுள்ளான். இவனது வலப்பக்கம் கையில் குடுவை பிடித்தபடி இவன் மனைவி நின்றுள்ளார். மனைவியின் வலப்புறம் குடை பிடித்தபடி சேவகன் ஒருவனும் நின்றுள்ளான்.

குதிரையின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இந்நடுகல் புடைப்புச் சிற்பத்தைச் சுற்றி அலங்கார வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல் தற்போது பாட்டையா என்ற பெயரில் கோயில் கட்டி வழிபடப்படுகிறது.
அளவு
உயரம் 5 அடி, அகலம் 4.9 அடி
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 88-90.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்