கதைச் சொல்லியின் விவரம்
இந்த வாய்மொழிக் கதையை கூறுபவர் ரத்தினம் என்ற 85 வயது பெண் ஆவார்.
கதை வடிவம்
வாய்மொழி
கூடுதல் விவரங்கள்
நாட்டுப்புறக் கதைகள் என்பவை வாய்வழியாக பல தலைமுறைகளாக மக்களால் சொல்லப்பட்டு வரும் மரபுக் கதைகள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது சமூகத்தால் பகிரப்படும் இலக்கிய வடிவங்கள், அவற்றில் பழமொழிகள், புராணங்கள், நகைச்சுவைகள், கவிதைகள் மற்றும் இதர வாய்மொழிக் கதைகளும் அடங்கும்.
கேட்பொலி கோப்பில் சொல்லப்பட்டுள்ள கதை பின்வருமாறு:
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில், ஒரு தந்தை மற்றும் நான்கு மகன்கள் வாழ்ந்து வந்தனர். தந்தைக்கு மிகவும் வயதாகிவிட்டது. தன் இறப்புக்கு பின்பு தன் மகன்கள் எவ்வாறு குடும்பத்தை காப்பாற்றுவார்கள் என்று கவலை கொண்ட அந்த தந்தை, மகன்கள் நால்வரையும் அழைத்து "நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று, ஒரு வருட காலத்திற்குள் ஏதேனும் ஒரு தொழிலை கற்று வர வேண்டும். " என்று கூறினார். அவ்வாறே அந்த நான்கு மகன்களும் தனித்தனியாக ஒவ்வொரு திசையில் சென்றனர்.
முதலாமவன் ஒரு வேடனை சந்தித்தான். அவ்வேடன் வில்லால் வேட்டையாடும் வித்தையை அவனுக்கு கற்றுக் கொடுத்தான். இரண்டாமவன் ஒரு கள்ளனை சந்தித்தான். அந்தக் கள்ளன் அவனுக்கு திருட்டுத் தொழில் கற்றுக் கொடுத்தான். மூன்றாமவன் ஒரு சாமியாரை சந்தித்தான். அந்த சாமியார் அவனுக்கு ஞான திருஷ்டி மூலம் தொலைவிலுள்ள பொருட்களை அறிந்து கொள்ளும் வித்தையை கற்றுக் கொடுத்தார். நான்காம் அவன் ஒரு தையல்காரர்கள் சந்தித்து அவரிடம் தையல் கற்றுக் கொண்டான்.
ஒரு வருட காலத்திற்குப் பிறகு நான்கு மகன்களும் வீடு திரும்பினர். தந்தை அவர்களிடம், 'நீங்கள் அனைவரும் என்ன தொழில் கற்று வந்தீர்கள்?' என கேட்டார். சாமியாரிடம் சென்று பயின்ற மகன், தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் உள்ள ஒரு கூட்டில் எவ்வளவு முட்டைககளும், எவ்வளவு குருவிகளும் உள்ளன என்று அங்கிருந்தே ஞான தர்ஷியால் பார்த்து சரியாக சொன்னான். மற்றொரு மகன் 'அக்குருவிகளுக்கு தெரியாமலேயே அனைத்து முட்டைகளையும் என்னால் எடுத்து வர முடியும்' என்று சொன்னான். அவ்வாறே அவன் அக்கூட்டில் இருந்த ஐந்து முட்டைகளையும் எடுத்து வந்து விட்டான்.
மற்றொரு மகன் 'ஒரே அம்பால் என்னால் இந்த ஐந்து முட்டைகளையும் உடைக்க முடியும்' என்று சொல்லி அவ்வாறே செய்து காட்டினான். நான்காம் மகன், 'என்னால் ஊசி நூலை கொண்டு இந்த ஐந்து முட்டைகளையும் ஒழுகாமல் தைத்து விட முடியும்' என்று கூறி அவ்வாறே செய்து காட்டினான். இவர்கள் நால்வரின் அபாரமான திறமையைக் கண்ட தந்தை, 'இனி என் மகன்களால் தங்களைப் பார்த்துக் கொள்ள முடியும்' என்று சொல்லி நிம்மதி அடைந்தார்.
இதுவே தந்தையின் சொல்லை மறுக்காத மகன்களின் கதையாகும். முழுமையான கதை கேட்பொலி கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது (kindly refer the audio file).
ஊர்
வடிவேல்கரை
மாவட்டம்
மதுரை