கதைச் சொல்லியின் விவரம்
ரவிச்சந்திரன்
கதை வடிவம்
வாய்மொழி
கூடுதல் விவரங்கள்
1. "அரிட்டாபட்டியிலே பிறந்துட்டுப் பனிக்கொறைக்கான் பாறைக்குப் பாதை தெரியவில்லை என்கிறாளே"
அரிட்டாபட்டியின் தென்மேற்குப் பகுதியில் ‘பனிக்கொறைக்கான் பாறை’ என்றழைக்கப்படும் பாறை உள்ளது. இப்பாறையில் உறைபானை அமைத்து, இக்கிராமத்தில் பிறந்த பெண்கள் அன்றாடச் சமையலுக்குத் தேவையான அரிசியை நெல் குத்தி எடுத்துள்ளனர். இத்தகு சிறப்பு வாய்ந்த பாறைக்கு, அரிட்டாபட்டியில் பிறந்தவர்களே வழி கேட்டறிந்ததன் தொடர்ச்சியாக இப்பழமொழி வழங்கப்பட்டு வருகிறது.
உடல் உழைப்புக்கும் நலவாழ்வுக்கும் சான்றாக விளங்கும் இப்பண்பாட்டுச் சின்னம் இன்றளவும் அரிட்டாபட்டியில் திருவிழாக் காலங்களில் பயன்பாட்டில் உள்ளது.
2. "சொல்லுப் பொறுக்காத இளமை நாச்சிக்குச் சொந்தக் கிராமம் அரிட்டாபட்டி"
இப்பழமொழி இக்கிராமத் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறது. ‘இளமை நாச்சி’ எனும் கன்னிப் பெண்ணை, அவரது சகோதரி வீட்டினர் திருமணம் ஆகாத காரணத்தினால் வெறுத்துள்ளனர். அவர்களின் குழந்தைகளைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுத்துக் கடுஞ்சொற்களால் புண்படுத்தியுள்ளனர். அதனைப் பொறுக்கமாட்டாத இளமை நாச்சி, தன்னை வசை பாடியவர்களுக்குச் சாபமிட்டுத் தனது சொந்தக் கிராமமான அரிட்டாபட்டிக்கே திரும்பி வந்து கன்னியாகவே மறைந்துள்ளார் என்ற செய்தியை இப்பழமொழி விளக்குகிறது. கிராமத் தேவதையாக, இளமைத் தோற்றத்துடன் கன்னிப் பெண்ணாகவே ‘இளமை நாயகி’ எனும் பெயரில் இளமை நாச்சி இன்றளவும் இக்கிராம மக்களால் வணங்கப்படுகிறார்.
3. "பொழுது முகம் தெரியாத ஊத்து"
மலைகளால் சூழப்பட்ட அரிட்டாபட்டி பல இயற்கை நீர் ஊற்றுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் சிறப்பான ஒன்றே ‘பொழுது முகம் தெரியாத ஊத்து’. சூரிய ஒளி படாதவாறு பாறைகளுக்கு அடியில் இருப்பதால் இந்நீருற்றில் எல்லாப் பருவத்திலும் நீர் இருக்கும். இவ்வூற்று இரு மலைகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளதால் ‘பொழுது முகம் தெரியாத ஊத்து’ என இக்கிராம மக்களால் பெயரிடப்பட்டுள்ளது. இப்பழமொழி இக்கிராமத்தின் மலை அமைவைச் சிறப்புற எடுத்துரைக்கிறது.
ஊர்
அரிட்டாபட்டி
மாவட்டம்
மதுரை