Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

விட்டி ஐயர் கதை

Vitti Aiyar Story

கதைச் சொல்லியின் விவரம்

பரிமளம், பெண், 68


கதை வடிவம்

வாய்மொழி


கூடுதல் விவரங்கள்

கேட்பொலி கோப்பில் சொல்லப்பட்டுள்ள கதை பின்வருமாறு (refer audio file):

முன்னொரு காலத்தில், விட்டி ஐயர் என்பவரும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்துள்ளனர். விட்டி ஐயருக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினால் அவர் மனைவி அவரை வேலை தேடி வருமாறு கேட்டுள்ளார். விட்டி ஐயரும், தான் சென்று ஜோசியம் கற்று வருவதாகவும் அதற்காக மனைவியிடம் மதிய உணவு கட்டித் தருமாறும் கேட்டுள்ளார். மனைவியும் அவ்வாறே உணவு கட்டிக் கொடுத்துள்ளார். விட்டி ஐயரோ தன் வீட்டை விட்டு கிளம்பி, ஆற்றங்கரையில் உள்ள புங்கை மரத்தடியில் படுத்து உறங்கி விட்டு, மதிய உணவையும் உண்டு விட்டு திரும்பிவிட்டார்.

அவர் வீட்டை அடையும் பொழுது மனைவி தண்ணீர் எடுத்து வர சென்றுள்ளார். விட்டி ஐயர் சமையலறையில் சென்று மனைவி தனக்காக மூன்று தோசைகளை சுட்டு வைத்திருப்பதை கண்டார். மனைவி வீடு திரும்பியதும் அவரிடம், 'ஜோசியம் கற்றுக் கொண்டீர்களா?' என்று கேட்டார். அதற்கு விட்டி ஐயர், 'புங்கை மரமே, புது நிலவே, சங்கு வாத்தியமே, மூலை அடுக்கில் மூன்று தோசையை கண்டேன்' என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட மனைவியும், விட்டி ஐயர் உண்மையிலேயே ஜோசியம் கற்றுக் கொண்டார் என்று நம்பிவிட்டார்.

அப்பொழுது வண்ணாத்தி இவர்கள் வீட்டிற்கு வந்து, தன் கழுதை காணாமல் போனதால் துவைத்து துணிகளை திரும்பத் தர முடியவில்லை என்று கூறியுள்ளார். உடனே விட்டி ஐயரின் மனைவி, தன் கணவருக்கு ஜோசியம் தெரியும் என்றும், அவர் அந்தக் கழுதையை கண்டுபிடித்து கொடுப்பார் என்றும் கூறினார். வீட்டிற்கு வரும் வழியில் விட்டி ஐயர் அந்தக் கழுதையை ஒரு குட்டி சுவற்றின் கீழ் கட்டி வைத்துவிட்டு வந்துள்ளார். எனவே அவர், 'புங்கை மரமே, புது நிலவே, சங்கு வாத்தியமே, மூலை அடுக்கில் மூன்று தோசையை கண்டேன், காணாமல் போன கழுதையை குட்டி சுவற்றின் கீழ் இருக்கக் கண்டேன்' என்று பதில் அளித்துள்ளார்.

அவ்வாறே குட்டி சுவற்றின் கீழ் வண்ணாத்தி, தன் கழுதையை கண்டுபிடித்தார். அவர் துணிகளை எடுத்துக்கொண்டு ராஜாவின் வீட்டிற்கு செல்லும் பொழுது, ராஜா வீட்டில் தங்கக் கிண்ணம் ஒன்று காணாமல் போனது தெரிய வந்தது. உடனே வண்ணாத்தி, 'விட்டி ஐயருக்கு ஜோசியம் தெரியும் அவர் கண்டுபிடித்து கொடுப்பார்', என்று கூறியுள்ளார். ராஜாவும் விட்டி ஐயரை அழைத்து, 'உங்கள் ஜோசிய திறமையால் காணாமல் போன தங்கக் கிண்ணத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் கண்ணையும் மூக்கையும் பறித்து விடுவேன்' என்று கூறினார்.

விட்டி ஐயர், என்ன செய்வது என்று தெரியாமல், பயத்தில், 'கண்ணுக்கும் மூக்குக்கும் ஆபத்து வந்துருச்சு. கண்ணுக்கும் மூக்குக்கும் ஆபத்து வந்துருச்சு' , என்று புலம்பிக் கொண்டே ஆற்றங்கரை வழியாக சென்றுள்ளார். அப்பொழுது ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்த கண்ணாயி மற்றும் மூக்காயி என்ற இரு பெண்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவர்கள் தான் தங்க கிண்ணத்தை திருடி ஒளித்து வைத்திருந்தனர்.

இவர்கள் இருவர்தான் தங்கக் கிண்ணத்தை ஒளித்து வைத்திருந்தனர் என்ற உண்மையை விட்டி ஐயர் கண்டுபிடித்து விட்டார் என்று நம்பி, அவரிடம் தங்கக் கிண்ணம் இருக்கும் இடத்தை அவர்கள் இருவரும் சொல்லிவிட்டனர். விட்டி ஐயரும் மறுநாள் ராஜாவிடம் சென்று, 'புங்க மரமே, புது நிலவே, சங்கு வாத்தியமே, மூலை அடுக்கில் மூன்று தோசையை கண்டேன், காணாமல் போனக் கழுதையை குட்டி சுவற்றின் கீழ் இருக்கக் கண்டேன், ராஜா வீட்டுத் தங்கக் கிண்ணம் தலசாரிக்கடியில் புதைந்திருக்க கண்டேன்' என்று கூறினார். அவ்விடத்தில் சென்று தோண்டிய போது தங்க கிண்ணம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ராஜா, அவருக்கு தேவையான பொருள் உதவிகளைச் செய்து தன்னுடைய ஆலோசகராக வைத்துக் கொண்டார்.

இதுவே விட்டி ஐயர் கதை.


ஊர்

ஆலமரத்துப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

வெ.நாகஜோதிகா

கேட்பொலி

வெ.நாகஜோதிகா