Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அடைக்கலம் காத்த அய்யனார் கோயில்

Adaikkalam Kāththa Ayyanar Temple

கோயிலின் வேறு பெயர்

ஊர்க்காவலன், பெரியசுவாமி


பிற தெய்வத்தின் பெயர்கள்

பூர்ண கலை, புஷ்கலை.


அமைவிடம்

தோப்பூர் கிராமத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.


ஊர்

தோப்பூர்

மாவட்டம்

விருதுநகர்

தலத்தின் சிறப்பு
பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கும், நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கும் மற்ற வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலை வழிபடக்கூடிய தோப்பூர், செம்பட்டி, பொய்யாங்குளம், கழுவனசேரி, சீமநத்தம், தர்மம், முள்ளிக்குடி, இருஞ்சிறை, பிடாரிசேரி, மினாக்குளம் போன்ற ஊர்களைச் சேர்ந்த மக்கள் நம்புகின்றனர்.
மூலவர் பெயர்
அய்யனார்
தல மரம்
வன்னி மரம்
கோயில் குளம்/ஆறு
காட்டாறு
பூசைக்காலம்
குறிப்பிட்டு பூசை காலம் கிடையாது. பக்தர்கள் விரும்பிய நேரம் பூசாரிகள் பூசை செய்கின்றனர்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் மூன்று நாட்கள் (பகல்-இரவு), சிவராத்திரிக்கு அடுத்த நாளான பாட்டுமன் தினத்தன்று மாசி களரித் திருவிழா நடைபெறும். (பாட்டுமன் என்பது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதம திதி நாளை குறிக்கும் சொல்லாகும். கிராமங்களில் இச்சொல்லை பாட்டிமை, பாட்டுமன், பாட்டிமுகம் போன்ற பெயர்களில் அழைப்பதுண்டு). புரட்டாசி மாதம் ஒரு நாள் குதிரை எடுப்புத் திருவிழாவும் பகல் நேரத்தில் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயில் வழிபாட்டில் வாழை இலை பயன்படுத்துவதில்லை. குறிப்பாக எருக்க இலையை பயன்படுத்துகின்றனர். மாசி மாதம் பிறந்தவுடன் செம்பட்டி, பொய்யான்குளம், சீமநத்தம், கழுவனசேரி ஆகிய நான்கு கிராமத்திலும் உள்ள பூசாரிகள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து தோப்பூர், முள்ளிக்குடி, தர்மம், மினாக்குளம், இருஞ்சிறை போன்ற ஊர்களில், இக்கோயிலை குலதெய்வமாக வழிபடக்கூடிய கிராமத்தினரும் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்குகின்றனர். இறைச்சி உண்ணாமல், இருவேளை உணவு மட்டும் உண்டு விரதம் கடைபிடிக்கின்றனர்.



பிள்ளை பேரு வேண்டுபவர்கள் இக்கோயில் தல மரமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணமாகாதவர்கள் மஞ்சள் கயிறையும், மஞ்சளையும் இம்மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பிறகு வரும் மாசி களரியில் இக்கோயிலில் கிடாயினை (ஆடு) பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இரவில் பலியிடப்பட்ட ஆட்டு ஈரல்கள் அனைத்தையும் எடுத்து உப்பில்லாமல் சமைத்து அதனை பரிவார தெய்வங்களுக்கும் நடுகற்களூக்கும் படைக்கின்றனர். பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியை ஊர் பொதுமக்களுக்கு அன்னதானமாக சமைத்து வழங்குகிறார்கள். இந்த கோயிலில் அய்யனாருக்கு பலி கொடுப்பதில்லை. ஆனால் இங்கு காணப்படும் பரிவார தெய்வங்களான இருளாயி இருளப்பன் போன்ற தெய்வங்களுக்கு கிடாவையும், சேவலையும் பலி கொடுக்கின்றனர். இதை திரை மறைவில் நிகழ்த்துகின்றனர். இப்பலியில், நரிக்குடி அருகே உள்ள தர்மம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் சார்பாக முதல் மரியாதையாக முதலில் பலியிடுவர். இரண்டாவது கிடாவை பிடாரிசேரி அருகே உள்ள முள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலி கொடுக்கின்றனர். அதன் பிறகு மற்ற ஊர் மக்களின் கிடாய்களை பலியிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இக்கோயில் களரி செலவுகள் அனைத்தும் செம்பட்டியை சேர்ந்த பெரிய பூசாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். பலியிடும் கிடாய்களின் தலைகள், கால்கள் இக்கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பலியிடப்படும் கிடாய்கள் தனிநபரின் கிடாய்களாக இருப்பின் அவற்றின் எலும்புடன் கூடிய இடது பின்னங்கால் தசைப்பகுதி பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இங்குள்ள விளக்குத்தூணில் மூன்று வரி தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டில் :

1. மாயாண்டி

2. மூப்பன் மகன்

3. கட்டைக் காத்தான்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிற்பங்கள்
அடைக்கலம் காத்த அய்யனார், பூர்ணகலை புஷ்கலை, பார்வதி பரமசிவன், நடுகல் சிற்பங்கள், பாவை விளக்கு, தவழும் குழந்தை, விநாயகர், யானை, முருகன், திருமால், பெரிய கருப்பு, சின்ன கருப்பு, நந்தி, முனீஸ்வரர், ராமநாதபுரம் ராஜா, மதுரை வீரன், ஆண்டாள் அழகர், இருளாகி இருளப்பன், சோனை கருப்பு போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி மன்னர் இப்பகுதியில் வேட்டைக்கு வந்த சமயம் இப்பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் மன்னரை வழிமறித்தனர். அவர் அங்கிருந்த அய்யனார் சிலை அருகே இருந்த ஆவாரம் செடி மறைவில் ஒளிந்து கொண்டு அய்யனார் சுவாமியை வேண்டினார். கொள்ளையர்களும் மன்னரை கண்டுபிடிக்க இயலாமல் சென்றுவிட்டனர். தன்னை அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதனால் அன்று முதல் அந்த அய்யனார் ‘அடைக்கலம் காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டு பூஜிக்கப்பட வேண்டும் என்று மன்னர் முடிவு செய்தார். இப்பணிக்காக தோப்பூரை சேர்ந்த சடைக்கிழவன் என்பவரை நியமனம் செய்தார்.

அந்நாள் முதல் வருடம் தோறும் மாசி மாதம் 101 கிடாய்களை பலியிட்டு வந்துள்ளார் ராமநாதபுரம் மன்னர். பின்னர் அவை 101 இளநீர் காய்களாக கொடுத்து வழிபட்டு வந்துள்ளார். சிறிது காலம் கழித்து சேதுபதி மன்னர் இங்குள்ள கருப்பசாமி சிலையை ராமநாதபுரம் கோட்டையில் வைத்து வழிபட கேட்டுள்ளார். அதற்கு செவி சாய்த்து கோட்டைக்கு ஒரு கருப்புசாமி சிலையை கொடுத்துள்ளனர் இக்கோயில் பக்தர்கள். அதற்கு மாறாக ராஜாவின் சிலையைக் பெற்றுக்கொண்டனர். இச்சிலை தற்போது இங்கு வழிபாட்டில் உள்ளது. இவ்வாறு இங்கு உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலானது சேதுபதி மன்னர் காலத்திற்கு முன்பிருந்தே வழிபடப்பட்டு வந்திருகிறது என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில். இவ்வளாகத்தில் பல பீடங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் வளாகத்தில் பல நடுகல் சிற்பங்கள் காணப்படுவது சிறப்பாகும். தற்போது செம்பட்டியைச் சேர்ந்த சடைக்கிழவன் வழி வந்தவர்கள் (பெரிய பூசாரிகள்), கழுவனசேரி, பொய்யாங்குளம், சீமநத்தம் என்ற நான்கு கிராமத்தைச் சேர்ந்த மக்களால் இங்கு பூசை செய்துவரப்படுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அய்யனார் கோயில்
செல்லும் வழி
காரியாபட்டியில் இருந்து திருச்சுழிக்கு செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் தோப்பூர் கிராமத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.