Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சித்திர புத்திர நாயனார் கோயில்

Chithiraputhra Nayanar Temple

கோயிலின் வேறு பெயர்

.


அமைவிடம்

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

சித்திரபுத்திர நாயனாருக்கு, தமிழகத்தில் காஞ்சிபுரத்தை அடுத்து தேனி மாவட்டம் கோடங்கிபட்டிக்கு அருகே உள்ள இந்த தீர்த்த தொட்டியில் தான் கோயில் உள்ளதாக கருதப்படுகிறது.


ஊர்

தீர்த்த தொட்டி

மாவட்டம்

தேனி

மூலவர் பெயர்
சித்திர புத்திர நாயனார்
கோயில் குளம்/ஆறு
கொட்டக்குடி ஆறு
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர நாளிலும், சித்திரை மாதத்தில் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியன்று, இக்கோயிலின் முதன்மை தெய்வமான சித்திர புத்திரருக்குச் சிறப்புப் பூசைகளுடன் சித்ரா பௌர்ணமி விழாயும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, சித்திர புத்திர நாயனார் தோற்றம் குறித்த வரலாற்றுக் கதைகள் படிக்கப்படுகின்றன. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சித்திரைக் கஞ்சி வழங்கப்படுகின்றது.
கோயில் அமைப்பு
இக்கோயில் கருவறையில் கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்த நிலையில் சித்திர புத்திர நாயனார் சிலை அமைந்துள்ளது. கருவறையை ஒட்டிய முன் சுவற்றில் விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்பகுதியில் சீலைக்காரியம்மன் சிலை ஒன்று உள்ளது.
கூடுதல் விவரங்கள்
புராணக் கதைகளின் அடிப்படையில், சித்திர புத்திரன்/ சித்திர குப்தன் என்பர், நீதிதேவனிடம் கணக்கு எழுதும் பணியை செய்துவருபவராகவும் பூமியில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்களை எழுதி வைக்கும் பணியைச் செய்பவராகவும் அறியப்படுகிறார்.

சிவ பெருமான், பூமியில் உயிரினங்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கு எழுதி பராமரிக்கும் வேலையை செய்வதற்கு சரியான நபரை தேடிக் கொண்டிருந்த பொழுது, சக்தி ஒரு சித்திரம் வரைகிறார். அந்த சித்திரத்திற்கு சிவன் மற்றும் சக்தி இருவரும் சேர்ந்து உயிர் அளிக்கின்றனர். அந்த சித்திரத்தில் இருந்து தோன்றியவர் சத்திர குப்தன் என்று அழைக்கப்பட்டார். இவர் தேவலோகத்தின் தலைவன் இந்திரனின் மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்டார். பின்பு உயிரினங்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கு எழுதி பராமரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டார் என சொல்லப்படுகிறது. ஒருவர் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளின் அடிப்படையில், ஒருவரின் இறப்பிற்குப் பிறகு சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்வதை நிர்ணயிப்பவர் இவர் என்று நம்பப்படுகிறது. சித்திர புத்திரன் என்கிற பெயரை விட சித்திர குப்தன் என்கிற பெயரே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. "குப்தம்" என்றால் "ரகசியம்" என்று பொருள் சொல்லப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி நாளில் சித்ரகுப்தனை வழிபடுவது பாவங்களைக் குறைத்து, நற்காரியங்களை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்து, விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களது பாவங்களை குறைந்து வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் முன்னோர் கனவில் தோன்றிய சித்திர புத்திரன் தனக்கென்று தனியாக கோயில் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அளிப்பதாகவும், தன்னுடைய கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்த தீயசெயல்களின் பாவத்தை நீக்கி, நற்பலன்களை அடைந்திட தான் உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பேச்சிமுத்துவின் முன்னோர், சித்திர புத்திரர் கனவில் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில் சித்திர புத்திரருக்காகத் தனியாகக் கோயில் ஒன்றைக் கட்டினர். இந்தக் குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக சித்திர புத்திரரைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோயில், வீரபாண்டியில் கண்ணீஸ்வரம் உடையார் கோயில் மற்றும் கௌமாரியம்மன் கோயில் உள்ளன.
செல்லும் வழி
தேனியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேனி போடிநாயக்கனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
தேனி போடிநாயக்கனூர்
புகைப்படங்கள்

மு.அகிலன்

மு.அகிலன்