Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பூமிநாதர் கோயில் (திருமேனிநாதர் கோயில்)

Boominathar Temple (Thirumeninathar Temple)

கோயிலின் வேறு பெயர்

திருமேனிநாதர்/ பிரளயவிடங்கர் கோயில்.


பிற தெய்வத்தின் பெயர்கள்

மாலையம்மன் (சகாய அம்மன்)


தலத்தின் சிறப்பு

இது சுந்தரரால் பாடல் பெற்ற தலம். இக்கோயில் இறைவனைச், சேக்கிழாரும் புகழ்ந்து பாடியுள்ளனர். பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் பதினான்கினுள் இது ஒன்றாகக் கருதப்பட்டு, சைவர்களால் போற்றி வழிபடப்படுகின்றது.


ஊர்

திருச்சுழி

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
திருமேனிநாதர்
தல மரம்
அரசமரம், புன்னை மரம்.
கோயில் குளம்/ஆறு
கவ்வைக் கடல்/ ஒலிப்புணரி திருக்குளம் உள்ளது.
ஆகமம்
சிவாகமம்
பூசைக்காலம்
காலை 8.00, மதியம் 12.00 மற்றும் மாலை 6.00 அளவில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
முக்கிய திருவிழாவான பிரம்மோத்ஸவம் தமிழ் மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகிறது. ஆடியில் அம்மன் தபசு விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் வில்வ மாலை, தேங்காய், பழம், பால், திரவிய பொடி, இளநீர், நெய், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய்வேத்தியம் போன்ற 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 8ம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலின் அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று, அம்மன் சன்னிதி திருசுற்று ஆகிய பகுதிகளில் பல துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள பழமையான பாண்டியர் கல்வெட்டில் “அரிகேசரி ஈஸ்வரம்” என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாண்டியரின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதனைத் திருமூலஸ்தானம் என்றும் அழைக்கின்றன. இவற்றுள் பழமையானது மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இதைத் தவிர இராசராசனின் 10 மற்றும் 18ஆம் ஆட்சியொண்டுக் கல்வெட்டுகள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு விளக்குகள் மற்றும் விளக்கு எரிப்பதற்காகத் தானம் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. பிற கல்வெட்டுகள் கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நில தானம், ஆடுகள் தானம் (விளக்கு எரிப்பதற்காக), திருவமுது செய்வதற்காக நெற்கொடை அளித்தது ஆகியவற்றை கூறுகின்றன. மேலும் நாயக்கர் கல்வெட்டொன்று வெங்கடபதி நாயக்கர் என்பவர் விசையமுத்து சொக்கனாதநாயக்கர் அவர்களுக்குப் புண்ணியமாகத் திருச்சுழியல்த் திருமேனிநாத சுவாமி கோயிலுக்கு சூச்சநேரி, வடபாலை, நாடாகுளம் , பாதிவூர் முதலிய ஊர்களைத் தானமாக அளித்ததைத் தெரிவிக்கிறது.
சுவரோவியம்
முதல் சுற்றுப்பிகாரத்தில் தூண்களிலும் மேற்கூரையிலும் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
நடராஜர், துவாரபாலகர்கள்,விநாயகர், பெருமாள்,முருகன்- வள்ளி -தெய்வானை சிற்பங்கள், சண்டிகேஸ்வரர், நந்தி, 63 நாயன்மார்கள் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
இவ்வூரில் பிரளயம் ஏற்பட்டபோது, பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் தோன்றி பிரளயத்தை இவ்விடத்தில் அடக்கியதால் (மண்ணில் சுழித்ததால்) இவ்வூருக்கு திருசுழியல்/ திருசுழி என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதனால் இக்கோயில் சிவபெருமானுக்கு பிரளைய விடங்கர் என்ற பெயரில் ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், சுற்றுப்பிரகாரம், சுற்றுச்சுவர், அம்மன் சந்நிதி மற்றும் பிற சந்நிதிகளும் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
சிவன் கோயிலுக்குத் தெற்கில், கிழக்கு நோக்கிய நிலையில், அம்மன் கோயில் அமைந்துள்ளது. இவ்வம்மன் சகாயவல்லியம்மன்/ மூத்து மாலையம்மன் என்றழைக்கப்படுகின்றாள். கோயிலின் கிழக்கில் ஐந்து நிலைக்கோபுரம் அமைந்துள்ளது. மேலும் கோபுரத்தின் கிழக்கில் பெரிய திருக்குளமும், மைய மண்டபமும் இக்கோயிலுக்குச் சிறப்பான தோற்றத்தை அளிக்கின்றன. இங்கு காணப்படும் தூண்களும் தூண் சிற்பங்களும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தலமானது சைவ குறவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற தலமாக இருப்பதால் இக்கோயில் சுந்தரர் காலத்திற்கு முன்பிருந்தே வணங்கப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகிறது. மேலும் இக்கோயில் வளாகத்தில் சில உதிரிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றைக் கொண்டு, இந்த சிவன் கோயில் சுமார் பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டு அளவில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. முற்கால பாண்டிய மன்னர்கள் முதல் சோழர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள் வரை பல்வேறு வம்சங்கள் தொடர்ந்து இக்கோயிலைச் சீரமைத்து வந்துள்ளனர். முத்துராமலிங்க சேதுபதி இக்கோயில் திருச்சுற்று மதிலை எழுப்பி இக்கோயில் பெருந்திருப் பணியினை மேற்கொண்டார். இன்றளவும் இக்கோயில் இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்ததாக உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு காணப்படும் திருமால் மற்றும் ஸ்ரீதேவி-பூதேவி சிலைகள் அக்காலகட்டத்தில் இப்பகுதியில் விஷ்ணு கோயில் ஒன்று இங்கிருந்ததற்கு ஆதாரமாக விளங்குகின்றன.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1 மற்றும் விருதுநகர் மாவட்ட வரலாறு (பக்கம் 59-62)
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கருப்பசாமி கோயில்
செல்லும் வழி
அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் பிரதான சாலையில் 15-வது கிலோ மீட்டரில் திருச்சுழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருச்சுழி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.