Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

காசிவிசுவநாதர் கோயில்

Kasi Viswanathar Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

விசாலாட்சி


அமைவிடம்

குன்றின் உச்சியில் தென்மேற்குத் திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் வடமேற்கு மூலையில் பழனியாண்டவர் கோயிலுக்கு எதிரேயமைந்துள்ள பாதை இக்கோயிலுக்கு வரும் மலைப்பாதையாக உள்ளது.


மூலவர் பெயர்

காசி விசுவநாதர்


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
காசிச்சுனை
பூசைக்காலம்
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
அருகில் உள்ள குடைவரைக் கோயிலில் உள்ள முருகனின் திருக்கைவேல் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இவ்வூர் மக்களால் இங்குக் கொண்டு வரப்பட்டு. இச்சுனையில் நீராட்டப்படுகிறது. இது வேல் திருவிழா (மலைமேல் குமரன்) என்று அழைக்கப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயிலுக்கு வரும் வழியில் பாதி மலைத்தொலைவில் ‘தீபத்தூண்' ஒன்றுள்ளது. இத்தீபத்தூணில் திருக்கார்த்திகையன்று தேவஸ்தானத்திலிருந்து பெரிய தீபம் ஒன்று ஏற்றி வைக்கப்படுகிறது. பிற கார்த்திகை நாட்கள் தோறும் மக்கள் விளக்கேற்றி வருகிறார்கள்.
கல்வெட்டு / செப்பேடு
நாயக்கர் காலத்துக் கல்வெட்டு ஒன்று இக்கோயில் அருகில் உள்ள தீபத்தூணில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேல் அனுமன் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
சிற்பங்கள்
இக்கோயிலில் காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி சந்நிதிக்கு எதிரே நந்தி சிற்பமும், அருகே விநாயகர் சிற்பமும் உள்ளன. இக்கோயிலுக்கு எதிரேயமைந்துள்ள சிறிய கோயிலில் நின்ற கோலத்தில் முருகன் சிற்பமும், நக்கீரர் மற்றும் விநாயகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலை ஒட்டியமைந்துள்ள பெரும்பாழியின் (காசிச்சுனை) முகப்புப் பாறையில் மாடங்களும், விமான அமைப்பும், சிவலிங்க வடிவமும், அதன் இடப்புறம் பைரவர், அடியில் சண்டேசுவரருடன் கூடிய நந்தி, வலப்புறம் அம்பிகை, முருகன், விநாயகர் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து சிவபெருமானின் அமர்ந்த கோலமும், அருகே நான்கு சிவலிங்க வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு
பொதுவாக கட்டடக் கோயில்களில் மூலவர் கருவறையின் உச்சியில் விமான அடுக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். இது குடைவரைக் கோயில் என்பதால், இங்கு மூலவர் கருவறையின் நேர் மேற்பகுதியில் தீபத்தூண் அமைந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து இக்கோயிலுக்குக் காசி விசுவநாதர், அம்மன், நந்தி, முருகன், விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு இக்கோயில் திருத்தியமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குன்றின் உச்சியில் உள்ள இஸ்லாமியர்களின் தர்க்காவிற்கும் இச்சுனை நீரே பயன் படுத்தப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16 - 18ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
ஒரு தடாகத்தின் அருகில் சிவபெருமான் பார்வதி தேவியிடம், உலகின் பிறப்பு இறப்பு குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது பார்வதி தேவி உறக்கம் ஏற்பட்டுக் கண் அயர்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சிவபெருமானின் பேச்சைத் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த மீனும் அதன் வயிற்றில் இருந்த மீன் குஞ்சும் கேட்டுக் கொண்டிருக்க, மீன் குஞ்சு பாலகனாய் உருமாறி எழுந்து சிவ பார்வதியின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக கதை வரலாறு கூறுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இக்கோயிலுக்கு அருகில் சிக்கந்தர் தர்க்கா, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் மற்றும் மச்சமுனி ஆலயம் அமைந்திருக்கிறது. மச்சமுனி சித்தர் ஐயாவின் பார்வை ஒருவர் மீது விழுந்தால் அவருக்குத் தீராத வினை நிலை உடனே சரியாகும் என்பது நம்பிக்கை.
செல்லும் வழி
குன்றின் அடிவாரத்தில் வடமேற்கு மூலையில் பழனியாண்டவர் கோயிலுக்கு எதிரேயமைந்துள்ள பாதை இக்கோயிலுக்கு வரும் மலைப்பாதையாக உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
மலைக்குக் கீழே விடுதிகள் நிறைய உள்ளன
புகைப்படங்கள்

சுந்தரவேல்