Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குருநாதசாமி கோயில்

Gurunathaswami Temple

கோயிலின் வேறு பெயர்

அங்காள ஈசுவரி கோயில்


அமைவிடம்

கீழரத வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் நடைபெறும் மாசி மாதப் பாரிவேட்டை குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் உத்சவமூர்த்தியான அங்காள ஈசுவரி முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திருவிழாவின் போது இம்மூர்த்தி எடுத்து வரப்பட்டு, திருவிழா முடிந்ததும் கொண்டு வைக்கப்படுகிறது.


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
அங்காள ஈசுவரி
கோயில் குளம்/ஆறு
கோயில் குளம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டுத் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து இக்கோயிலுக்கு மேளதாளம் முழங்கத் தாயார் அங்காள பரமேஸ்வரி புறப்பட்டு வருவார். இதன்பின் அங்காள பரமேஸ்வரி மற்றும் குருநாத சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் மற்றும் அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பாரிவேட்டை நடைபெறும். இந்த வேட்டைக்காக மலைவலப்பாதையில் உள்ள காட்டுப் பேச்சியம்மன் கோயிலுக்குப் பூப்பல்லக்கில் தாயார் அங்காளபரமேஸ்வரி புறப்பட்டுச் செல்வார். இங்கு நடைபெறும் ‘கப்பரை' திருவிழாவில் கருப்பண்ணசாமி, சப்பாணி சாமிக்கு ஊனும் சோறும் வைத்துப் படைக்கப்படுகின்றன. பொதுவாக அம்மன் கோயில்களில் கொண்டாடப்படும் கப்பரை திருவிழா என்பது ஒரு பெரிய பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்பதாகும். பலி கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தாமசம், இராஜசம், சாத்துவிகம் என்று மூன்று வகை வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன. மதுவும் மாமிசமும் படைப்பது தாமசம் என்றும், பலி கொடுப்பது இராஜசம் என்றும், மந்திரம் சொல்லி வழிபடுவது சாத்துவிகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. காடுகிழாள், கொற்றவை, பேய் மகளிர் ஆகிய பழந்தமிழ்த் தெய்வங்கள் அங்காள ஈசுவரி, இராக்காயி அம்மன், பேச்சியம்மன் என்ற நாட்டுப்புறத் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சிற்பங்கள்
விநாயகர், முருகன், நந்தி, அக்னிவீரபத்திரர், சப்த கன்னியர், கிராமத் தேவதைகளான இருளப்ப சுவாமி, சங்கிலி கருப்பண்ணசாமி, பெரிய கருப்பண்ணசாமி, மாயாண்டி சுவாமி, சப்பாணி சுவாமி, பேச்சியம்மன், இராக்காயி அம்மன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு / கதைகள்
அங்காள ஈசுவரி என்பது பழந்தமிழரின் வெற்றித் தெய்வமாகவும், வேட்டைத் தெய்வமாகவும், போர்த் தெய்வமாகவும் கருதப்படுகிறது. பிற்காலத்தில் இத்தெய்வத்தை கங்காளநாதர் என்ற சிவனின் உருவத்துடன் தொடர்புபடுத்தி அங்காள ஈசுவரி என்று பெருவழக்குப் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
கோயில் அமைப்பு
மூலவர் சந்நிதியும், பரிவாரத் தெய்வ சந்நிதிகளும் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
திருப்பரங்குன்றம் கீழரத வீதியில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணைக்கோயிலாகும். இக்கோயிலில் மூலவர் குருநாத சுவாமி மற்றும் தாயார் அங்காள பரமேசுவரி இருவரும் ஆவர். முற்காலத்தில் இக்கோயிலுக்கு அரசர் மானியமாக நன்செய் மூன்றே முக்கால் ஏக்கரும் (செவந்திக்குளம், தெங்கால்) புன்செய் ஆறு ஏக்கரும் கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெண் தெய்வமான அங்காள ஈசுவரி கோயிலுக்கு இடப்புறம் பேச்சியம்மன் கோயிலும், வலப்புறம் சப்பாணி கோயில் மற்றும் கருப்பண்ண சுவாமி கோயிலும் உள்ளன. இங்குள்ள பேய்ச்சியம்மன் கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பேய்ச்சியம்மன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, அதன் குடலை உருவிக் கடிக்கும் கோலத்தில் அம்மன் வடிவமைக்கப்பட்டுள்ளார்.
செல்லும் வழி
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லலாம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் தங்குமிடங்கள் நிறைய உள்ளன
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்