Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாயா பாண்டீஸ்வரர் கோயில்

Māyā Pandeeswarar Temple

கோயிலின் வேறு பெயர்

சிவன் கோயில், மாயமான் மறீசுவரம்


அமைவிடம்

பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

இத்தலம் ராமாயண கதையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.


ஊர்

மேல்மங்கலம்

மாவட்டம்

தேனி

மூலவர் பெயர்
மாயா பாண்டீஸ்வரர்
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
வராக நதி
ஆகமம்
சிவபோத ஆகமம், ருத்திர போத ஆகமம் பின்பற்றப்படுகிறது.
பூசைக்காலம்
இரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சனிப்பிரதோஷம், பௌர்ணமி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம், கார்த்திகை, கோகுலாஷ்டமி,தேய்பிறை அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, சுக்ல சஷ்டி, ஆவணி மூலம் புட்டு திருநாள், பிரதோஷம், ஐப்பசி மாதம் கார்த்திகை, தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி, சூரசம்காரம், திருக்கல்யாணம், நவராத்திரி, போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12 -13 ஆம் நூற்றாண்டு,முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டி
கல்வெட்டு / செப்பேடு
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (பொ.ஆ. 1216-1244) ஐந்து கல்வெட்டுக்கள் இக்கோயில் மண்டபத்தில் உள்ள தூண்களிலும் கருவறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் கோயிலுக்கு இறையிலியாக நிலக்கொடையும் பொன்னும் கொடுக்கப்பட்ட செய்திகள் வெட்டப்பட்டுள்ளன. கொடை கொடுத்தவர் பெயர் மற்றும் ஊர் போன்ற செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியனுடைய கல்வெட்டுக்கள் இக்கோயில் இருப்பதால் இம்மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிற்பங்கள்
கோயிலின் முன்புறம் பிற்கால பாண்டியர் கால கலை அம்சத்துடன் கூடிய விநாயகர் சிற்பம் ஒன்று உள்ளது. கருவறையின் தெற்கு பக்கம் தக்ஷிணாமூர்த்தியும், தெற்கு மூலையில் ஒரு விநாயகர் சிற்பமும், வடக்கு பக்கம் சண்டிகேஸ்வரரும், வடக்கு மூலையில் முருகன்- வள்ளி –தெய்வானை சிற்பமும் உள்ளன. இதைத் தவிர துர்க்கை அம்மன், பெருமாள், நவகிரக சிற்பங்கள், நடராஜர்- சிவகாமி சிற்பம், பைரவர் சிற்பம் போன்ற சிற்பங்கள் பிற்கால பாண்டிய சிற்பக்கலை வடிவமைப்பில் காணப்படுகிறன. மேலும் ஜெயன் விஜயன் என்ற துவாரபாலகர்களும் மிக அழகான கற்சிப்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
தல வரலாறு / கதைகள்
முற்காலத்தில் பொதிகை மலையில் வராக நதி கரையில் மாபெரும் தபஸ்வியான பிருகு மகரிஷி தமது பத்தினியுடன் வசித்து வந்தார். இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் இல்லாததால் பிருகு மகரிஷி பொதிகை மலைக்கு தவம் செய்ய புறப்பட்டார். வெகுகாலமாக தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவத்தை அரக்கர்கள் கூட்டம் இடையூறு செய்த வண்ணம் இருந்தது. இதை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் திருமாலிடம் போய் முறையிட்டு அடைக்கலம் புகுந்தனர். திருமால் அரக்கர்களை அழித்து உங்களை பாதுகாப்பேன் என்றார். திருமால் தன்னுடைய ஆயுதங்களுடன் குதிரை மீது ஏறி அரக்கர்கள் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டு சென்றார். அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே ஆயுதப்போர் நடைபெற்றது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு தன்னுடைய கையில் இருந்த சக்கராயுதத்தை ஏவினார். சக்ராயுதம் சத்துருக்கள் இருக்கும் திசை நோக்கி சென்றது. சத்ருக்களான அரக்கர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். அப்பொழுது பிருகு மகரிஷியின் மனைவி பர்ணக சாலை (குடில்) வாயிலை திறந்து வைத்துக்கொண்டு தன் கணவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அரக்கர்கள் கூட்டம் பர்ணக சாலையின் உள்ளே ஓடி ஒளிந்து கொண்டது. சக்ராயுதமானது தொடர்ந்து அவர்களை விரட்டிக் கொண்டு உள்ளே நுழைந்து, பிருகு மகரிஷி மனைவி உட்பட அனைவரையும் அழித்துவிட்டு மீண்டும் திருமாலிடம் போய்ச் சேர்ந்தது.

பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு முனிவருக்கு சந்தான பலன் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் இல்லத்திற்கு திரும்பினார். அப்போது தன் மனைவி இறந்து சாம்பலாகக் கிடப்பதை பார்த்து வேதனை உற்றார். தன்னுடைய ஞானக்கண்ணால் இதற்கு காரணமானவர் திருமால் என்பதை உணர்ந்து அதி பயங்கர கோவத்துடன். ‘விஷ்ணுவே ! நான் என் மனைவி இல்லாமல் எவ்வாறு துன்பப்படுகிறேனோ அதேபோல் நீயும் நரஜென்மம் எடுத்து துன்பப்படுவாய்’, என சாபம் அளிக்கிறார். பிருகு முனிவரின் சாபப்படி திருமால் நர வடிவம் எடுத்தபின் மகாலட்சுமி குழந்தை வடிவமெடுத்து சிவனை சேர்கிறார். இதே போல் கற்பகம் மற்றும் காமதேனுவும் சர்வேஸ்வரனிடம் (சிவன்) போய் சேருகின்றன.

நர வடிவம் பெற்று மனம் வருந்தி, என்ன செய்வது என்று அறியாமல் அலைந்து திரிந்த திருமால் பிருகு மகரிஷி வாழும் வராக மலைக்கு ஓரமாக ஓடும் வராக நதிக்கரைக்கு வந்து, அங்குள்ள மாயா பாண்டீஸ்வரரை வணங்கி வழிபட்டார். அவர் படும் துன்பத்திலிருந்து விடுபட, ’பிருகு ரிஷியின் சாபத்தின் படி பல அவதாரங்கள் எடுக்க வேண்டும். அதில் ராம அவதாரத்தில் உன் மனைவியைப் பிரிந்து துன்பப்படுவாய். அப்பொழுது நாமே அங்கு வந்து சாபத்தை போக்கி ஸ்ரீதேவியை உம்முடன் சேர்த்து விடுவோம்’, என்றார் மாயா பாண்டீஸ்வரர் (சிவன்). திருமாலும் மாயா பாண்டீஸ்வரருடைய சொல்படியே மீன், ஆமை, பன்றி, நரசிம்மர், வாமணர், பரசுராமர் மற்றும் ராமர் அவதாரங்களை எடுக்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் உலகில் உள்ள அசுரர்களை அழித்து மக்களை பாதுகாக்கிறார்.

மாயா பாண்டீஸ்வரர் பிருகு முனியின் முன் தோன்றி, மிகுந்த மகிழ்வுடன் தன்னிடம் குழந்தையாய் வந்தடைந்த ஸ்ரீதேவியை ஒப்படைத்து விட்டு மறைகிறார். முனிவர் ’பார்கவி’ என்ற பெயருடன் ஸ்ரீதேவியை வளர்த்து வருகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் முடிந்த பின்பு மாயா பாண்டீஸ்வரர், பிருகு முனிவர் வளர்த்து வந்த பார்கவியை திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்களுடைய திருமணம் மிக சிறப்பாக நடந்தது. அன்று முதல் இன்று வரை பார்க்கவியானவள் தை மாதப் பிறப்பிற்கு மறுநாள், வராக நதிக்கரையிலுள்ள தன் தந்தையான பிருகு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, பிறந்த வீட்டில் செய்யும் வளமைகளை பெற்றுக் கொண்டு, அன்றிரவு பிருகு முனிவரால் கொடுக்கப்பட்ட யானை மீது ஏறி சகல சௌபாக்கியங்களுடன் தான் புகுந்த வீடாகிய விஷ்ணுலோகம் வந்தடைவதாகச் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று போன்ற அமைப்புடன் இக்கோயில் காணப்படுகிறது. சிவன் சன்னதியின் வெளிப்புறம் பலிபீடம், நந்தி மண்டபம் மற்றும் காலியான மற்றொரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இத்திருதலத்தில் மாயா பாண்டீஸ்வரரான சிவன், லிங்க வடிவில் காட்சி தருகிறார். மாயா பாண்டீஸ்வரர் கோயிலுக்கு வடக்கில் தாயார் பெரியநாயகி என்ற ஸ்ரீ பிருகன் நாயகிக்கு தனி சன்னதி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. நாயக்கர் காலத்தில் இவ்வம்மன் சன்னதிக்கு ஓரடுக்கு விமானமும், கருவறையும், அர்த்தமண்டபமும் கட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மாயா பாண்டீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடுவில் நின்ற பெருமாள் கோயில் மற்றும்சயன பெருமாள் கோயில் உள்ளன.
செல்லும் வழி
பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள மேல்மங்கலம் என்றும் கிராமத்திற்கு வடக்கு பக்கமாக உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் தேனி.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
ஆண்டிபட்டி மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
தேனி பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

காணொலி

ம.ரேவன்