Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சோலைமலை முருகன் கோயில்

Solaimalai Murugan Temple

அமைவிடம்

கள்ளழகர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

இத்தலம் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடாக திகழ்கிறது. மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் முருகர் திருவிளையாடல் புரிந்த தலம் இதுதான் என சொல்லப்படுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.


மூலவர் பெயர்

சுப்பிரமணிய சுவாமி


ஊர்

பழமுதிர்சோலை

மாவட்டம்

மதுரை

தல மரம்
நாவல் மரம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.
தல வரலாறு / கதைகள்
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த முருகன், இந்தத் தலத்தில், மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

தன்னுடைய புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற ஔவையாருக்கு ஏற்பட்ட தான் என்ற அகங்காரத்தில் இருந்து அவரை முருகப்பெருமான் விடுவிக்க எண்ணினார். எனவே முருகன் காட்டு வழியாக மதுரைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த ஔவையின் வழியில், ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றினார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் ஔவை. பசியில் இருந்த ஔவை, அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருந்ததால், அந்தச் சிறுவனிடம், "எனக்கு சில நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி ஔவைக்குப் புரியவில்லை. எனவே "சுடாத பழத்தையே கொடு" என்று கேட்டுக் கொண்டார். சிறுவனாகிய முருகப் பெருமானும், நாவல் மரத்தின் கிளைகளை உலுக்கியபடி, "சுடாத பழமாக பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். மரத்தில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்த நாவல் பழங்களில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு ஒளவையார் பழங்களை வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த முருகப்பெருமான், "என்ன பாட்டி, பழம் சூடாக உள்ளதா ?" என்று கேட்டார். சிறுவனின் கேள்வியால் வியந்து போன ஔவை, "குழந்தாய், நீ யார்? " என்று கேட்டார். அச்சிறுவன் உடனே முருகப்பெருமானாக மாறி ஔவைக்கு காட்சியளித்தார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே முருகப்பெருமான் ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்த திருத்தலம் இது தான் என நம்பப்படுகிறது.
கோயில் அமைப்பு
நுழைவாயில் கோபுர அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் கருவறையில் மூன்று சந்நிதிகள் வரிசையாக அமைந்துள்ளன. அதில் நடு சந்நிதியில் முருகன் வள்ளி மற்றும் தெய்வசேனையுடன் காட்சியளிக்கிறார். கருவறையை சுற்றி திருசுற்று அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலில் நாவல் மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் கற்சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் வித்தக விநாயகர் அமைந்துள்ளார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு அருகில் உள்ள நூபுர கங்கை தீர்த்தமும், ராக்காயி அம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

செல்லும் வழி
மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலையில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எம். ஜி. ஆர் பேருந்து நிலையம், மதுரை . மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

முனைவர். தெ. துர்கா தேவி