Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

முக்தீஸ்வரர் திருக்கோயில்

Muktheeswarar Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

மரகதவல்லி


தலத்தின் சிறப்பு

கோயிலின் மிகப்பெரும் சிறப்பாகக் கூறப்படுவது, அங்கு நிகழும் "சூரிய பூஜை". ஆண்டுக்கு 24 நாட்கள், தினமும் 20 நிமிடங்கள், சூரிய ஒளிக்கதிர்கள் நேராக சிவலிங்கத்தின் மீது விழுந்து, தாள்பணிந்து வணங்குவது போலக் காணப்படுகிறது. இது செப்டம்பர் 19 முதல் 30 வரை மற்றும் மார்ச் 10 முதல் 21 வரை, பத்து நிமிடங்கள் நேரடியாகவும், பிறகு மகா மண்டபத்திலுள்ள மூன்று சதுர துவாரங்கள் வழியாக கதிர்களாக வருவைதையும் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை என்பதுதான். எனினும், பக்தர்கள் சிவபெருமானை வணங்கும்போது, நவக்கோளின் வினைகளும் விலகிவிடும் என நம்பப்படுகிறது.


மூலவர் பெயர்

முக்தீஸ்வரர்


ஊர்

வண்டியூர் தெப்பக்குளம்

மாவட்டம்

மதுரை

தல மரம்
வில்வ மரம்
கோயில் குளம்/ஆறு
வண்டியூர் தெப்பக்குளம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மகா சிவராத்திரி, நவராத்திரி, ஆடி மாதம் மற்றும் தை மாத விளக்கு பூசை, மாதந்தோறும் பிரதோச பூசை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கோயிலில் நடைபெறும் விழாக்களில், நவராத்திரி பண்டிகையின்போது கோடி நாம பாராயணம், அன்னதானம் மற்றும் அன்னாபிஷேக பூசையும், திருக்கார்த்திகை தினத்தில் முக்தீஸ்வரர் வழிபாடும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும். தைப்பூச திருவிழாவின் போது அன்னை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இங்கு எழுந்தருளி, ’பதே பதே நமச்சிவாயம்’ என்ற கோஷத்தை கேட்கின்றனர். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தை மாதம் தெப்பத் திருவிழாவானது நடைபெறுகிறது. அன்று காலை தெப்பக்குளத்தை இரு முறை வலம் வந்து மாலை ஒரு முறை வலம் வரும் வைபவம் நடைபெறும்.
சிற்பங்கள்
அர்த்த மண்டபத்திற்கு மேல் ஏகபாதமூர்த்தி என்ற சிற்பமும், வீணாதார தக்‌ஷிணாமூர்த்தி சிற்பமும் உள்ளன.
கோயில் அமைப்பு
இக்கோயில் நாயகர் கால கட்டுமான அமைப்பைக் கொண்டுள்ளது.
சுருக்கம்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டில், திருமலை நாயக்கரின் அண்ணனான முத்து வீரப்ப நாயக்கர், இந்த கோயிலை ஆறு ஏக்கர் பரப்பளவில், கருவறையிலிருந்து தூபி வரை கட்டியமைத்து, மண்டபங்கள் மற்றும் சிற்பங்களால் அலங்கரித்தார். இந்த கோயிலில் இராஜகோபுரம் என்று ஒன்று இல்லாமலேயே இருந்தது. திருமலை நாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில், மதுரையில் மிகப்பெரிய தெப்பக்குளத்தை உருவாக்கினார். அக்குளத்தின் நடுவில் ஒரு விமானத்துடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் அர்த்த மண்டபத்திற்கு மேல் ஏகபாதமூர்த்தி (ஏகபாதமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒரு சேர ஒரே பாதத்தில் நிற்பதாகும்.) என்ற சிற்பம் உள்ளது. வீணாதார தக்‌ஷிணாமூர்த்தி மற்றும் சண்டிகேஷ்வரர் சிற்பங்களும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. சுவர் மற்றும் உட்கூரையில் காணப்படும் ஓவியங்களூம், ராசி மண்டலமும் அழகாக உள்ளன. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந்நிகழ்ச்சி இருபது நிமிடம் வரை நீடிக்கிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்
தல வரலாறு / கதைகள்
ஒருமுறை துர்வாச முனிவர் கைலாசத்தில் சிவனை வணங்கி, அவரிடமிருந்து ஒரு பூமாலையைப் பெற்றார். அது இந்திரனிடம் இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய முனிவர் அந்த மாலையை அவரிடம் கொடுத்தார். தான் தேவர்களின் அதிபதி என்று கர்வம் கொண்டிருந்த இந்திரனோ, தனது யானையான ஐராவதத்தின் தலையில் மாலையை வைத்தான். ஆனால் அந்த மாலை யானைக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் அதை கீழே உதறிவிட்டு மிதித்தது. இந்த நிகழ்வுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த முனிவர், இந்திரன் மற்றும் ஐராவதம் இருவரையும் சபித்தார். இதன் விளைவாக, நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானையான ஐராவதம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து சாதாரண காட்டு யானையாக மாறியது. நூறு ஆண்டுகளாக, பல சிவாலயங்களில் வழிபட்டு, பின் வில்வ மரங்கள் நிறைந்த இவ்விடத்தில் வந்து சிவனை வழிபட்டது. ஐராவதம் வருந்தியதைக் கண்ட சிவன், மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும்படி கூறினார், அங்கு ஐராவதம் இறுதியில் சாபத்திலிருந்து விடுபட்டது. எனவேதான் முன்பு இந்த சிவபெருமான் "இந்திரேஸ்சுவரர்" அல்லது "ஐராவதேஸ்வரர்" என்று அழைக்கப்பட்டார். பின்னர், "முக்தீஸ்வரர்" என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தெப்பக்குளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெப்பக்குளம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

அ. ஸ்வீட்டி

அ. ஸ்வீட்டி

அ. ஸ்வீட்டி