Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

திருமறைநாதசுவாமி திருக்கோயில்

Thirumarainātha Swami Temple

அமைவிடம்

ஊரின் வடக்குப் புறத்தில் உள்ளது.


தலத்தின் சிறப்பு

இந்த கோயில் ஒரு தேவார வைப்புத் தலமாகும். மேலும், விஷ்ணு, பிரம்மா, அக்னி, வாயு, சனீசுவரர், பைரவர், கபிலர் ஆகியோர் இங்கு வந்து வழிபாடு செய்து அருள் பெற்றனர் என சொல்லப்படுகிறது.


மூலவர் பெயர்

திருமறைநாதர்


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

தல மரம்
மகிழ மரம்
கோயில் குளம்/ஆறு
பைரவ தீர்த்தம், புருஷாமிருக தீர்த்தம்
ஆகமம்
காரண ஆகமம்.
பூசைக்காலம்
ஐந்து கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை, ஆடி, மார்கழி, தை மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோயில் விழாவில் மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது அம்பு போடுதல் நடைபெறும். இக்கோயிலுக்கு மாணிக்கவாசகருடனான தொடர்பு காரணமாக, தமிழ் மாதமான ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தன்று இங்கு குரு பூஜை நடத்தப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
எண்ணெய்க்காப்பு போடுதல், திருத்தேர் உலா, சட்டத்தேர் உலா போன்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
முற்கால பாண்டியர் காலம் என கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயில் கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயிலுக்குக் கொடையளித்தது பற்றியவையாகும். இவற்றின் மூலம் நிலவுரிமைகள், நிலவுடமையாளர்க்கும் கோயிலுக்கும் இருந்த தொடர்புகள், பல்வேறு சமூகப்பிரிவுகள், அவற்றின் அடுக்குமுறைகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. அரசனின் பெயரால இக்கோயிலில் ஏற்படுத்தப்பட்ட சிறப்புப் பூசைகள் ’சேரனை வென்றான் சந்தி', 'வலங்கைமீகாமன் சந்தி’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

இக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது பொது ஆண்டு 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீரபாண்டியன் கல்வெட்டாகும். 'பூமருவிய திருமாதும் ' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியடன் கூடிய இவனது கல்வெட்டு இராசேந்திரசோழச் சதுர்வேதிமங்கலப் பகுதியில் இருந்த நிலங்கள் திருவாதவூர் கோயிலுக்குத் தேவதானமாக அளிக்கபட்டதை தெரிவிக்கின்றன.

திருவாதவூர் 'தென்பறப்பு நாடு’ என்றழைக்கப்பட்ட பண்டைய உள்நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. இங்கு முதலாம் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றோடு மதுரை சுல்தானியர்கள் காலத்தில் பொது ஆண்டு 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் உள்ளன.

பிற்காலப் பாண்டியர் காலத்தில் வெள்ளான்வகை ஊர்கள் பல கோயிலுக்கு வரி நீக்கித் தானமாகத் தரப்பட்டுள்ளன, இவை ’நல்லூர்’ என்ற பின்னொட்டுடன் அழைக்கப்பட்டன. வேதமநாயககல்லூர், வலங்கைமிகாமக௩ல்லூர், பள்ளிக்குறிச்சியான வோணாடு கொண்ட பெருமாள்கல்லூர், திருமறைநாயக நல்லூர், போன்ற பல நல்லூர்களின் பெயர்கள் திருவாதவூர் கல்வெட்டுகளில் அறியப்படுகின்றன.

திருவாதவூர்ப் பகுதியில் போர்த்தொழில் செய்யும் குடியினர்க்குரிய ஊர்களும் இருந்தன. இதனை மானியமாகப் பெற்றவர்கள் அரசன் வேண்டும்போது படைவீரராகப் போருக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு படைத்தொழிலுக்காக மானியமாக அளிக்கப்பட்ட ஊர்கள் ’படைப்பற்று’ என்று அழைக்கப்பட்டன. இவற்றை நிர்வகித்தவர்கள் 'படைக்காரணவர்' என்று அழைக்கப்பட்டனர். திருவாதவூர்ப் பகுதியில் இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி என்று இரண்டு 'படைப்பற்று’ ஊர்கள் இருந்துள்ளன. பிற்காலப்பாண்டியர் காலத்தில் ’நாடாள்வான்' என்ற பெயரில் அரசியல் அலுவர்களாகச் சிற்றரசர் மரபினர் உள்நாட்டுப் பிரிவுகளில் பணியாற்றி வந்ததை இக்கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

ஊர்களின் தன்மை, தொழில், நிலங்களின் தரம் மற்றும் பயிர்வகைகளுக்கு ஏற்றமுறையிலும் பல்வேறு விதமான வரிகள் வாங்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கடமை, அந்தராயம், பொன்வரி, கோயில்வினியோகம், ஊர்வினியோகம், தரவுகுழி, கார்த்திகைப் பச்சைபிள்ளையார் நோன்பு, கூற்றிலக்கை, கடைகூட்டிலக்கை, ஆனைசாலை, குதிரைப்பந்தி, சந்திவிக்கிரகம், பஞ்சுபீலி என்று இவை திருவாதவூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

அறுபத்துமூன்று நாயன்மார்களுக்காக இக்கோயில் மேற்குப்புற திருச்சுற்றில் ஆலயம் போன்ற பகுதி ஒன்று பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு சுவற்றில் இருந்த அறுபத்து மூவர் சிற்பங்கள் இன்று இல்லை. ஆனால் அச்சிற்பங்களுக்கு மேலே சுவரில் பொறிக்கப்பட்ட அறுபத்துமூவரில் ஐம்பத்தெண்பது பெயர்கள் மட்டும், பொது ஆண்டு 13.ஆம் நூற்றாண்டு எழுத்தமையில் இன்றும் கல்வெட்டாகக் காணப்படுகின்றன. பொது ஆண்டு 12-ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் இயற்றப்பட்டு மக்களிடையே நாயன்மார் கதைகள் விரிவாகச் சென்றடைந்ததின் காரணமாக நாயன்மார் வழிபாடு அடுத்த நூற்றாண்டில் சிறப்புப் பெற்றமையை இது காட்டுகிறது. எனவே, இக்கல்வெட்டுகள் மூலம் அக்கால வரலாறு, சமூகம், வணிகம் மற்றும் அரசியல் நிலையை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
சிற்பங்கள்
வேத நாயகி அம்மன், தக்‌ஷிணாமூர்தி, நவகிரகங்கள், நந்தி சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
திருமறைநாதசுவாமி கோயிலின் தலபுராணத்தில் பலதெய்வீக நகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவன், திருமாலுக்கு ’ நானே வேதங்களின் சாரம்’ என்று உபதேசித்த தலம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. தமிழில் ’மறை’ என்ற சொல் வேதத்தைக் குறிப்பதால் ’வேதபுரீஸ்வரர்’ என்பதே திருமறைநாதர் என்றழைக்கப்படுகிறது. வாயுதேவன், சிறந்த புத்திரனான அனுமனைப் பெறுவதற்காக வேண்டிய தலம் இது என சொல்லப்படுகிறது. இதனால் இத்தலத்தில் வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் இது என சொல்லப்படுவதால், இந்த தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு. ஒரு சமயம் சிவபெருமான், பைரவரின் ஆணவத்தைக் குறைக்க அவரது வாகனமான நாயினை காணாமல்போகச் செய்தார். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் காணவில்லை என வேண்டினார். சிவன், 'திருவாதவூர் சென்று வழிபட்டால் தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர், இங்குள்ள ஒரு தீர்த்தத்தில் நீராடி, திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். எனவே, அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வின் காரணமாக, இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து போன வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது கபில முனிவரின் வீரகத்தி தோசத்தை நிவர்த்தி செய்த தலம் என்றும் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் காணப்படுகிறது. சுவாமி சந்நிதிக்கு தெற்கில் அம்மன் சந்நிதி உள்ளது. இங்கு நடராசருக்கும் சனிபகவானுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளது.
சுருக்கம்
சமயச்சிறப்பு வாய்ந்த திருவாதவூர் சைவசமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த தலமாகும். திருவாதவூர் தென்பறப்பு நாடு என்றழைக்கப்பட்ட பண்டைய உள்நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் குலசேகர பாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. இவற்றோடு மதுரை சுல்தானியர்கள் காலத்தில், பொது ஆண்டு 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
திருமறைநாதர் கோயிலின் சிவன் சுயம்பு மூர்த்தி என்றும், லிங்கத்தின் தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திருவாதவூரில் அமைந்துள்ள இத்தலம் பாண்டிய நாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்று. வேத நாயகி அம்மன், சிவனுக்கு வலப்புறம், கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அமைந்துள்ளார். இந்த அம்மன், பிரம்மா நடத்திய அரண கேத யாகத்தில் இருந்து எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது. எனவே இவர் ஆரணவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலில் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது, அங்கு அவர் திருவாசகத்தின் ஓலைச்சுவடிகளை ஏந்தியவாறு காட்சியளித்தார். மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷா மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயிலுக்குக் கொடையளித்தது பற்றியவையாகும்.

ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் இறைவன் மாணிக்கவாசகருக்கு, சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. சிவாலயங்களைப் பற்றி ஞானசம்பந்தர் குறிப்பிடும் போது, ’ஸமயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி’ எனத் திருவாதவூரை குறிப்பிட்டிருப்பதால் பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டளவிலேயே இவ்வூரில் இந்த சிவாலயம் இருந்துள்ள என்பது உறுதியாகிறது. பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் இது புதுப்பிக்கபபட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 126-131.§ மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி1, பக்கம்- ix, 1-95.§
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
ஆமூர், திருவாதவூர் தமிழிக் கல்வெட்டுக்கள்
செல்லும் வழி
மதுரையிலிருந்து திருமோகூர் வழியாக திருவாதவூருக்குச் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாதவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

காணொலி

முனைவர்.மீ.மருது பாண்டியன்