Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

Madurai Meenakshi Sundareswarar Temple

கோயிலின் வேறு பெயர்

திரு ஆலவாயுடைய நாயனார் கோயில்


அமைவிடம்

மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ளது.


தலத்தின் சிறப்பு

இது திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இங்கு பாண்டியர், விசயநகரர் மற்றும் நாயக்கர் கட்டிடக் கலைப்பாணிகள் காணப்படுகின்றன.


ஊர்

பெரியார் நிலையம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
மீனாட்சி, அங்கையர்கண்ணி, திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்; சுந்தரேசுவரர், திருவாலவாயுடைய நாயனார், சொக்கர், சொக்கநாதர், ஆலவாய் அண்ணல், அதிர வீசி விளையாடுவார்.
தல மரம்
கடம்பமரம், வில்வம்
கோயில் குளம்/ஆறு
பொற்றாமரைத் தீர்த்தம், வையை தீர்த்தம், எழுகடல் தீர்த்தம், கிருதமாலை தீர்த்தம், கொண்டாழி தீர்த்தம், தெப்பகுளம், புறத்தொட்டி நின்மாலிய தீர்த்தம்
ஆகமம்
காரணாகமம்
பூசைக்காலம்
திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், பள்ளியறை ஆகிய பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத் திருவிழா, வசந்த உற்சவம், முளை கொட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், புட்டுத் திருவிழா போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13-20 ஆம் நூற்றாண்டு, பிற்காலப் பாண்டியர்கள் முதல் நகரத்தார் காலம் வரை கோயில் கட்டுமானம் நடைபெற்றது.
கல்வெட்டு / செப்பேடு
இங்குள்ள பழைமையான கல்வெட்டுகள் பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்நத கல்வெட்டுகளாகவே உள்ளன. பிற்காலப் பாண்டிய மன்னனான சடையவர்மன் குலசேகரபாண்டியன் (பொது ஆண்டு 1190-1216) காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரையிலான அறுபத்துநான்கு கல்வெட்டுகள் மத்திய அரசு தொல்லியல்துறையால் இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன. காலமுறைப்படி இவற்றின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது:

1.பிற்காலப்பாண்டியர்காலம் - 44 கல்வெட்டுகள்

2. விசயநகர மதுரை நாயக்கர் காலம் - 19 கல்வெட்டுகள்

3.ஆங்கிலேயர் காலம்-1 கல்வெட்டு என மொத்தம் 64 கல்வெட்டுகள் உள்ளன.

பிற்காலப் பாண்டிய மன்னர்களில் முதலாம் ஜடாவர்மன் குலசேகரபாண்டியன் (பொ.ஆ.1194), முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (பொ.ஆ.1216-1244), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்(பொ.ஆ. 1238-1255) இரண்டாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் (பொ.ஆ. 1250-1276), முதலாம் குலசேகரபாண்டியன் (பொ.ஆ. 1268–1318) மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (பொ.ஆ. 1316-1334), பராக்கிரமபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. பாண்டியர் கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளன. இம்மன்னன் காலத்தில் மதுரைக்கோயில் பல திருப்பணிகளைக் கண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

விசயநகர அரசர்களில் கிருஷ்ணதேவராயர் (பொ.ஆ.1509-1529) அச்சுததேவராயர் (பொ.ஆ. 1529-1542), சதாசிவராயர் (பொ.ஆ. 1542-1570) ஆகியோரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மதுரைநாயக்க மன்னர்களில் வீரப்பநாயக்கர் (பொ.ஆ. 1572-95) குமாரகிருஷ்ணப்பநாயக்கர் (பொ.ஆ. 1595-1601), முத்துவீரப்பநாயக்கர் (பொ.ஆ. 1609-23) திருமலைநாயக்கர் (பொ.ஆ. 1623–1659) விஜயரங்கசொக்கநாதநாயக்கர் (பொ.ஆ. 1706-32) ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. பொது ஆண்டு 1842ல் பொறிக்கப்பட்ட பச்சையப்பமுதலியாரின் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் உள்ளது.

கல்வெட்டுகள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பொருட்கொடைகள், நிலக்கொடைகள் பற்றிக் கூறுகின்றன. இவை கோயிலில் நடைபெறும் நாள்வழிபடு, திங்கள்வழிபாடு, ஆண்டுவழிபாடு, திருவிழாக்கள் ஆகியவற்றின் செலவினங்களுக்காக அளிக்கப்பட்டவையாகும். கோயிலில் இரவும் பகலும் புறவிருளை அகற்றத் திருவிளக்குகள் எரிப்பதற்காகத் தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாலவாயுடையாரின் கருவறை வெளிப்புற வாயிலில் இரண்டு நிலைவிளக்குள் வைத்து எரிப்பதற்காக ஜடாவர்மன் குலசேகரப்பாண்டியனின் ‘அகப்பரிவா முதலி’ என்றழைக்கப்பட்ட அதிகாரி ஒருவன் இருபது பொற்காசுகளைத் தானமாகத் தந்துள்ளான் என்று கல்வெட்டில் உள்ளது.

கோயிலில் நடைபெறும் சிறப்புப்பூசைகளின் போது இறைவன் முன்னர் திருப்பதியம் (தேவாரம்) பாடுவதற்குச் செண்டாடுவானான உத்தமபாண்டியப் பிச்சன் என்பவனுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மார்கழித்திருநாளில் திருவெம்பாவை பாடுகின்ற பரதேசி கோவனவர் என்றழைக்கப்படுவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாலவாயுடையார் திருவுலா வந்து திருக்காமகோட்டத்தில் (மீனாட்சியம்மன் சந்நிதி) ‘வாணாதிராயன் திருவாசல்’ என்றழைக்கப்பட்ட தெற்குவாசலுக்கு வந்து நிற்கும்போது இறைவன் கேட்கும்படியாக அவ்விடத்தில் ‘சதாரிப்பண்’ பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரைமாநகரில் திருவாலவாயுடையார் விறகுவெட்டியாக வந்து சேமநாதனின் இசைச்செருக்கு அழியும்படி பாணபத்திரனுக்காகப் பாடிய பாடலின் பண் சதாரிப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கருநாடக போசளர் அரச மரபைச் சார்ந்த மன்னன் வீரசோமீசுவரன் பெயரால் அவன் பிறந்தநாளான ஐப்பசித் திங்கள் மகநட்சத்திர நாளில் அவனது பெயரால் திருவாலவாயுடையார்க்குச் சிறப்புச்சந்தி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வெட்டுகளில், குலசேகர மங்கலத்து நிலங்கள் ஆலவாய் இறைவன் மீது பூசப்படும் வாசனைத் திரவியங்களின் செலவினங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று இறைவன் மேல் பூசப்படும் சந்தனத்தைக் கொண்டு வந்து தருவதற்காகவும், கோயில் மடப்பள்ளிக்கு அன்றாடம் ஆகும் செலவினங்களுக்காகவும், நிலங்கள் வரிநீக்கி அளிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் பணிசெய்த பணியாளர்களுக்கு நிலக்கொடைகள் மானியமாக வழங்கப்பட்டன என்றும், கோயிலில் திருச்சின்னப்பணி செய்த பணியாளர்களுக்கு இரண்டு பொற்காசுகள் வழங்கப்பட்டன என்றும் வழிபாட்டிற்கு பூக்களை அளிப்பதற்காக நந்தவனங்கள் தோற்றுவிப்பதற்கு நிலங்கள் தரப்பட்டன என்றும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கோயிலின் கிழக்குராஜ கோபுரம் பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நான்காம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் (பொ.ஆ.1303-25) காலத்தில் திருப்பணிசெய்ததை உறுதிபடுத்தும் விதமாக இக்கோபுரத்தின் உட்புறச் சுவரில் ‘அவனிவேந்தராமன் திருக்கோபுரம்’, ‘சுந்தரபாண்டியன் திருக்கோபுரம்’ என்று கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்கு ராஜகோபுரத்தை பராக்கிரம பாண்டியன் (பொ.ஆ. 1315-1334) கட்டினான் என்பதை கோபுரத்தின் உட்புறச் சுவரில் காணப்படும் அவன் புகழ்பாடும் பாடல் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மதுரைகோயிலைச் சூழ்ந்து பல சைவமடங்கள் இருந்ததையும் சில புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டதையும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கும், இங்கு அன்னதானம் வழங்குவதற்கும் தானங்கள் தரப்பட்டுள்ளன.
சுவரோவியம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் பெரும்பாலான ஒவியங்கள் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் மீனாட்சியின் திக் விஜயத்தையும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையும் ஓவியங்களாக தீட்டியிருக்கின்றனர். இந்தக் காட்சியை இராணி மங்கம்மாள் (பொ.ஆ. 1689-1706), தளவாய் இராமய்யப்பர் மற்றும் நரசப்பையர் முதலியோர் தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தின் வடக்கு கிழக்கு சுவர்களிலும் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் புராணக் கதைகளை அறிவதோடு அக்கால மக்களின் ஆடைவகைகள் அணிகலன்கள் போன்றவை பற்றியும் அறிய முடிகிறது.
சிற்பங்கள்
அட்டசக்தி மண்டபத்தில் எட்டு தூண்களில் எட்டு சக்தி வடிவங்கள் காணப்படுகின்றன. முதலிப்பிள்ளை மண்டபத்தில் பிட்சாடனர், தாருகாவன முனிவர்கள், மோகினி முதலியோர் சிலைகள் அமைந்துள்ளன. சங்கிலி மண்டபத்தில் பஞ்சபாண்டவர் மற்றும் திரெளபதியின் சிற்பங்கள் உள்ளன. மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக் குறிக்கும் சிற்பங்கள் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றைத் தவிர முக்குறுணி விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், காளி, அக்கினிவீரபத்திரர், அகோர வீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் சந்நிதிக்கு அருகில் உள்ள கம்பத்தடி மண்டப சிற்பங்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிறப்பு பெற்றவை ஆகும். இங்கு சிவபெருமானது 25 மூர்த்தங்களும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணக்கோல சிற்பமும், புராண நிகழ்ச்சிகளை பிரதிபலிக்கும் பல சிற்பங்களும் கருங்கல்லில் மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும், வடிக்கப்பட்டுள்ளன.

கொடிக்கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ள நந்தியின் சிலை ஒரே கல்லினால் ஆனது. கோயிலின் வளாகத்தில் சதாசிவ மூர்த்தி, காயத்ரி, சைவ சமயக்குரவர் நால்வர், மிகப்பெரிய துவாரபாலகர் திருவுருவங்கள், 32 சிங்கங்கள், 8 யானைகள், நடராஜர் மற்றும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 985 தூண்களுள், பலவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் காலப் பாணியிலேயே அமைந்துள்ளன.
தல வரலாறு / கதைகள்
மீனாட்சியம்மனின் அவதாரம் பற்றிய புராண கதை பின்வருமாறு : மலயத்துவச பாண்டியன் மற்றும் அவர் மனைவி காஞ்சனமாலை ஆகியோருக்கு குழந்தையில்லாததால் புத்திரகாமேட்டி யாகம் செய்தனர். யாகத்தின் பலனாக மூன்று தனங்களை உடைய ஒரு பெண் குழந்தை வேள்வியிலிருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது. அச்சமயம், 'இப்பெண் தன் கணவனை சந்திக்கும் போது அவளின் ஒரு தனம் மறைந்துவிடும்' என்று அசிரீரி ஒலித்தது. அக்குழந்தை தடாதகை என்று பெயர் பெற்று பல கலைகளிலும் சிறந்து விளங்கியது.

தடாதகை மணப்பருவத்தை அடைந்தார். அப்பொழுது நால்வகைப் படைகளுடன் திக்விஜயம் மேற்கொண்ட தடாதகை, பல வெற்றிகளைக் கண்டு இறுதியாக சிவபெருமானின் கைலாயத்தை அடைந்தார். சிவபெருமானை கண்டவுடன் அவரின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. சிவனே தன் கணவன் என்று புலப்பட்டதால் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பங்குனி உத்திர நாளில் சிவபெருமானுக்கும் தடாதகை பிராட்டிக்கும் திருமால், பிரம்மா மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் சூழ திருமணம் நடைபெற்றது. இத்தடாதகையே மதுரையின் மீனாட்சி அம்மன் ஆவார்.

இக்கோயில் தலவரலாறு படி, கடம்ப மரங்கள் நிறைந்த வனப் பகுதியில் இருந்த சுயம்பு லிங்கத்தை தேவர்களின் தலைவனான இந்திரன் பூசித்து தன் தோசத்திலிருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது. தெய்வத் தச்சனாகிய மயனின் உதவியுடன் லிங்கத்தின் மேல் இந்திர விமானம் அமைத்தாக சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் ஆடி வீதியில் நான்கு புறங்களிலும் ஒன்பது அடுக்குகளை கொண்ட கோபுரங்கள் காணப்படுகின்றன. சுமார் 40-50 மீடர் வரை உயரமுள்ள 12 கோபுரங்களையும், இரண்டு கருவறை விமானங்களையும் (இந்திர விமானங்கள்) கொண்டுள்ள இக்கோயில் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இக்கோயில் கட்டடக்கலை தொடக்கத்தில் பிற்கால பாண்டியர் பாணியையும் பின்னர் விசயநகரர் நாயக்கர் பாணியையும் கொண்டுள்ளது. முற்கால பாண்டியர் கலைப்பாணியின் எச்சங்கள் எதுவும் தற்போது மீனாட்சி கோயிலில் காணப்படவில்லை. எனினும் உட்புற கிழக்கு திருச்சுற்றில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சூரியன் சிற்பம் ஒன்று மட்டும் காணப்படுகிறது.

தற்போதுள்ள கோயில் கட்டட அமைப்பு பெரும்பாலும் பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே ஏற்பட்டவை ஆகும். கோயிலின் மூலவராக உள்ள சுந்தரேஸ்வரர் சந்நிதி, மண்டபத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் வெள்ளியம்பலம் எனப்படும் வலது காலை தூக்கி ஆடும் நடராஜர் சிற்பம் அமைந்துள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்புறத்தில் மீனாட்சி சந்நிதி அமைந்துள்ளது. இக்கருவரையின் வெளிப்புற சுவர்களில் 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர முக்குறுணி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை, காசி விஸ்வநாதர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர், 63 நாயன்மார்கள், பைரவர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உஷா பிரதி உஷா சமேத சூரியன், ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோயிலில் பல நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் மிக்க மண்டபங்களும் உள்ளன. இவை அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், மங்கையர்கரசி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம், முதலி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் மற்றும் வீர வசந்தராயர் மண்டபம் ஆகியவை ஆகும்.
சுருக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, மதுரை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவனின் பழமையான தமிழ் பெயர் திரு ஆலவாயுடைய நாயனார் என்று இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அரியமுடிகிறது. கிருத்துவ பாதிரியார்களின் குறிப்புகளில் இக்கோயில் சொக்கநாதர் கோயில் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே சுந்தரேஸ்வரர் என்னும் சமஸ்கிருத பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. தேவாரப் பாடல்களில் இறைவியின் பெயர் ’அங்கயற்கண்ணி’ என்றும், பாண்டியர் கால கல்வெட்டுகளில் ’திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ’அங்கயற்கண்ணி’ என்பதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பே ’மீனாட்சி’ என்பதாகும். மீனாட்சி என்றால் மீன்போன்ற விழிகளை உடையவள் என்று பொருள்.

மூலவராக உள்ள சிவன் கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் என சொல்லப்படுகிறது. பொய்யடிமை இல்லாத புலவர்கள் மதுரையைப் பற்றி நிறைய பாடியிருக்கிறார்கள். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட, 'மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தில், 'திரு ஆலவாயான் திருநீறே' என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. 'அலவாய்' என்ற சொல் மதுரை நகர் பகுதியை குறிப்பதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இறைவனை ’திரு ஆலவாயுடைய நாயனார்’ என்று குறிப்பிடுகின்றன. இதன் அடிப்படையில், சம்பந்தரின் இந்த பதிகம், மதுரை பகுதியில் இருந்த ஒரு பழமையான சிவன் கோயிலை குறிப்பிட்டிருக்கலாம் என்றும், அக்கோயில் தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆலயம் தொடக்கத்தில் சிவபெருமானுக்காக நிறுவப்பட்டு, முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் (பொது ஆண்டு 1190-1216) ஆட்சிக் காலத்தில் மீனாட்சி அம்மனுக்கென தனி கருவறை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. மதுரைத் தலவரலாறு, ஸ்தல புத்தகம், மதுரை ஸ்தானிகர் வரலாறு, மதுரை திருப்பணி மாலை ஆகியவற்றின் மூலம் கோயிலின் திருப்பணிகள், அன்னியர் படையெடுப்பால் ஏற்பட்ட சேதங்கள், தடைப்பட்ட பூசைகள் ஆகியவற்றை பற்றி அறிய முடிகிறது. அதன்படி தற்போதுள்ள கட்டிடம் முதன் முதலாகக் குலசேகர பாண்டியன் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் இது வெள்ளி சபை என்று போற்றப்படுகிறது. இங்கு நடராசர் வலது காலைத் தூக்கி நடனமாடும் சிற்பம் உள்ளது. சிவன் சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகளும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் என்பது, பல காலங்களுக்கு முன் இந்திரன் பொன் தாமரைகளால் சிவனை பூசித்த இடமாக கருதப்படுகிறது. 'நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே!' என்று சிவபெருமானிடம் வாதிட்ட புலவர் நக்கீரரை உயிர்ப்பித்த தலம் இதுதான் என சொல்லப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் உள்ள பொது ஆண்டு 12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிழக்கு கோபுரமே பழமையானதாகும். இங்குள்ள கல்வெட்டுகள் இதனை ’சுந்தரபாண்டியன் திருக்கோபுரம்’ என்று குறிப்பிடுகின்றனர். இக்கோபுரத்தின் இரண்டாம் நிலையில் உள்ள தூண்களில், மாறவர்மன் சுந்தரபாண்டியன் I மற்றும் சடையவர்மன் குலசேகரன் I ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மேற்கு கோபுரம், பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள பாடல் கல்வெட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. பொது ஆண்டு 15 ஆம் நூற்றாண்டில் தெற்கு கோபுரம் சீராமலை செவ்வந்தி செட்டியால் கட்டப்பட்டது. பொது ஆண்டு 16-ஆம் நூற்றாண்டில் வடக்கு கோபுரமும், கம்பத்தடி மண்டபமும், அதனுள் காணப்படும் சிவன் சிற்பங்களும் வீரப்ப நாயக்கரால் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசை தூண்களும் வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசை தூண்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 நாட்கள் கொண்டாடப்படும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. மாசி மாதம் நடைபெற்று வந்த மீனாட்சி திருக்கல்யாண விழாவை திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரை மாதத்திற்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டுத் தலத்தை முதன்முதல் நிறுவிய தேவேந்திரன் ஒவ்வொரு வருடமும், சித்ரா பௌர்ணமி நாளில் இங்கு வந்து வழிபடுவதாக திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படுகிறது. எனவே தான் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுவாமி சந்நிதியின் முன்பு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வீதி உலா வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன் மதுரையின் அரசியாக முடிசூட்டிக் கொள்ளும் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. மறுநாள் மீனாட்சியின் திக்குவிஜயத்தை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இவ்விழாவில் குண்டோதரனுக்கு கல்யாண சாப்பாடு வழங்கும் சடங்கு முக்கியமானதாகும். இதற்கு அடுத்தநாள் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமியின் தேரை பக்தர்களும் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவின் கடைசி நாள் அன்று தீர்த்தவாரி உத்சவம் மற்றும் தேவேந்திர பூசையுடன் சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் அழகர் கோயிலின் சித்திரை திருவிழா தொடங்குகிறது. இவ்விழாவின் போது, மீனாட்சியை சுந்தரேசுவரருக்கு மணமுடித்துக் கொடுக்க, கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜப்பெருமாள் அழகர் கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வருவார்.
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல்கையேடு, பக்கம் 84-92.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கூடலழகர் பெருமாள் கோயில், திருமலை நாயக்கர் மகால், திருவாப்புடையார் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், காஞ்சனமாலை கோயில், தென்திருவாலவாய்க் கோயில், காலபைரவர் கோயில், செல்லத்தம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம், மதுரை. ஆரப்பாளையம் பேருந்து நிலையம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்