Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில்

Madurai Meenakshi Sundareswarar Temple

கோயிலின் வேறு பெயர்

மீனாட்சி அம்மன் கோயில், அரியமாணிக்கவல்லி அம்மன்கோயில்


அமைவிடம்

மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்குப்பக்க அடிவாரத்தில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

சுமார் 800 ஆண்டுகள் பழமையான இக்கோயில், சேர மன்னர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.


ஊர்

மேலத்திருமாணிக்கம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
மீனாட்சி சுந்தரேசுவரர்
பூசைக்காலம்
ஒருகால பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12 ஆம் நூற்றாண்டு, பாண்டியர்.
கல்வெட்டு / செப்பேடு
பழமையான இந்த சிவாலயத்தில் கருவறையின் அதிட்டானப் பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் இவை தற்போது மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளதாலும், கோயில் புனரமைப்பின் போது இவை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாலும் இக்கல்வெட்டுகளை தொடர்ச்சியான கல்வெட்டுகளாக வாசித்து பொருள் கொள்ள இயலவில்லை.

இத்துண்டு கல்வெட்டுகளில் தேவதான நிலங்கள், அவற்றின் வரிகள், கோயில் நிர்வாகத்தினர் பற்றிய விவரங்கள், நொந்தா விளக்கெரிப்பதற்காக கொடுக்கப்பட்ட கொடைகள், நிலதானங்கள், நிலத்தின் எல்லைகள், விற்றுக்கொடுத்தோர் பெயர், குளம் மற்றும் குளப் பகுதிகளை விற்றுக் கொடுக்கப்பட்ட விவரங்கள், திரமம் என்ற காசு, நிலமளக்கும் 18 அடிகோல், கருஞ்செய், புன்செய் முதலிய நிலங்களுக்குரிய வரிகள், கோயில் பண்டாரத்தில் செலுத்த வேண்டிய அளவு விவரங்கள் மற்றும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இக்கோயில் இறைவன் தென்முட்ட நாட்டுத் திருமணிக்கயமுடைய பரமசுவாமிகள் என்று இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். இக்கோயில் கல்வெட்டு ஒன்றில், தென்முட்ட நாட்டு மணிக்கயமுடைய பரமசுவாமிகள் கோயிலுக்குக் கருநிலக்குடி நாட்டுப் பிரமதேயம் சோழ பாண்டியச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தது குறிப்பிட்டுள்ளது.

முட்ட நாட்டு திருமணிக்கயத்து திருமூலத்தானத்து பெருமானடிகளுக்கு அருங்குளத்தினைச் சேர்ந்த பொதுமவனக்கனாயின அத்தாணி எட்டி என்பவன் விளக்கு எரிக்க 40 வெள்ளாடுகளும் 10 செம்மறியாடுகளும் கொடுத்து நாள் தோறும் உழக்கு நெய் வழங்க ஏற்பாடு செய்தான். மற்றொரு கல்வெட்டின் பிற்பகுதி நாச்சியார் கோயிலில் முன் இடிந்து போன தெய்வங்களை நவ பிரதிட்டை செய்ததைக் குறிக்கிறது. முத்திரைக் கணக்கராக (பத்திரப் பதிவாளராக இருக்கலாம்) விளங்கிய பொம்மதேவனின் நித்திய சேவையைக் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன் என்பவர் திருமணிக்கயமுடைய நாயனார் கோயிலில் திருவிளக்கு (சந்தியா தீபம்) எரிப்பதற்காக ஆறு பசுக்கள் அளித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மற்றும் பிற பிற்காலப் பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதிகள் இக்கல்வெட்டுகளில் வருகின்றன. சிறப்பு நா(ட்க)ளில் இறைவன் எழுந்தருளுவதற்கும், திருவமுது செய்வதற்கும், திருநந்தவனத்திற்கும் பாண்டியன் குலசேகரனின் பெயரால் தானம் அளித்தது தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. குலசேகர பாண்டியன் பெயரால் வைகாசி திருநாளில் அவன் பிறந்த நட்சத்திரத்தில் கோயிலில் வழிபாடு செய்ய இறையிலியாக நிலக்கொடை அளித்ததை துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நிலவரி விகிதம் கோடை, குறுவை போகங்களுக்கு ஏற்றாற்போல் வாங்க வேண்டும் என்பதும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. கல்வெட்டில் மோடனேரி, வீரபாண்டியன் குளம் முதலிய குளங்களும் குறிப்பிடப்படுகின்றன. கோயில் முன்புள்ள நுழைவாயில் மண்டபத்தினை இளையபெருமாள் பிள்ளை குமாரர் முத்துச்சாமியாபிள்ளை கட்டினார் என்றும் குறிப்படப்படுகிறது. கிருட்டின தேவனான அகம்படித் தட்டார் என்பவர் இவ்வூர் மண்டபத்தில் இருக்கும் போது, இருநூறு பழங்காசிற்கு நிலம் ஒன்றை விற்றுக் கொடுத்த ஆவணமாக ஒரு கல்வெட்டு உள்ளது. பத்துப் பழங்காசுகளுக்காக தென்னை முதலிய மரங்கள் உள்ள நிலங்களைப் புலவன் புண்ணியன் என்பவன் அம்பலவன் திருமணிக்கயமுடையான் போன்றோர்க்கு விலைக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. கோயில் நிர்வாகத்தினர், பலதரப்பட்ட அரச அலுவலர்கள் ஆகியோரது பெயர்கள் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கண்காணி செய்வார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் குறிப்பிடப்படுகின்றனர். திருமணிக்கயமுடைய நாயனார் கோயிலில் பணி செய்யும் பல மாஹேஸ்வரர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் கோயில் பணியாளர்களுக்கு உரிய பங்குகள் குறிப்பிடப்படுகின்றன.

தூண் உருவச் சிலைகளின் அடியில் உள்ள கல்வெட்டுகளில் சங்கரப்ப நாயக்கர், சீவலப்ப நாயக்கர், பொம்மன் நாயக்கர் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்படுவதால் அவர்களை அடையாளம் காணமுடிகிறது. இக்கோயில் அம்மன் சந்நிதியில் உள்ள மகாமண்டபத் தூண் ஒன்றினை 'வடமுட்ட நாட்டு ஆற்றூரான ஆயுதவீம நல்லூர் செய்வித்தது' என்று கல்வெட்டில் கூறப்படுகிறது.

சுந்தரபாண்டிய தேவன் அறங்காத்தான், தேவனம்பி சிவகலியாண நம்பி, ஹரிஹரன் பட்டன், அம்பலப் பெருமாள், நந்தன் கொண்டானான மந்தன சக்ரவர்த்திகள், நந்தபிரான் பட்டன், சாதபிரான் பட்டன், சத்தமரரான பட்டன் ஆகிய ஆட்கள் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. வீரசிங்கதேவன், தொண்டைமான், போயன், மீனவதரையன், தனஞ்செய ராயன், வாணவத்தரய்யன், ஆராதிரயன், திருப்பூவணவன், தோள்ளுடையான், சராகாயன் திருப்பூவணமுடையன், மாணாபரணன் சாத்தா பிரான், சீராளன், இராமனான குலசேகர தேவன் ஆகிய பெயர்கள் கையொப்பமிட்ட பெயர்களாக காட்டப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
அம்மன் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயில் கருவறை வெளிப்பகுதியில் அண்ணாமலையார் மற்றும் நான்முகன் சிற்பங்களும், அர்த்த மண்டப கோட்டங்களில் துர்க்கை மற்றும் நின்ற கோலத்தில் விநாயகர் சிற்பமும், திருச்சுற்றில் கணபதி மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருளும் சிற்பம் மற்றும் சப்த மாதர் சிற்பங்களும், நவக்கிரக சிற்பங்களும், மண்டபத்தூண்களில் இக்கோயிலுக்கு கொடையளித்த நபர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் இராஜகோபுரம் காணப்படவில்லை என்றாலும், சிறப்பான முகப்பு வரவேற்பு மண்டபம் அமைந்துள்ளது. அதன் பின்னர் பரந்த வெளி மதிற்சுவர் சூழ்ந்திருக்கிறது. கோயில் நுழைவில் பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் அழகிய தூண்களும் நயமிக்க சிற்பங்களும் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து சதுர வடிவில் கருவறை அமைந்துள்ளது. கருவறையின் விமானம் சுதைச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து கூரை வரை கல் கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவறை, கலைநயம் மிக்க சைவக் கோயில் கட்டிடக் கூறுகளைக் கொண்டதாகத் தோன்றுகிறது. திருச்சுற்றில் இறை சிற்பங்கள் அமைந்துள்ளன. அம்மன் சந்நிதி தெற்கு நோக்கி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
சுமார் 800 ஆண்டுகள் பழமையான இத்தலத்தின் இறைவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இது சேர மன்னர்களால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர் பாண்டிய மன்னார்களால் இக்கோயில் பராமரிப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன.

தற்போது இராஜகோபுரம் இல்லாமல் காணப்படும் இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் புனரமைக்கப்பட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோயிலாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நித்திய அன்னதானம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கோயில் ஒரு சிறப்பான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது; இதில் ஒரு சித்தர் சமாதி நிலை பெற்றதாகவும், ‘ஆதிமூர்த்தி ஐயர்’ எனும் சித்தரின் சமாதி இக்கோயிலில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோயிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக் கோயிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

மேலும், இக்கோயில் மேலத்திருமாணிக்கம் கிராமத்தின் கிராம தெய்வமாகக் கருதப்பட்டு, அப்பகுதி மக்களால் வழிபடப்படுவது, இக்கோயிலின் ஆன்மீகப் பெருமையை இன்றளவும் நிலைநிறுத்துகிறது.
தகவல்

க.த. காந்திராஜன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வீருஜக்கம்மாள் கோயில், ஸ்ரீஅங்குத்தாய் கோயில், ஸ்ரீநல்லுத்தாய் காளித்தாய் கோயில்
செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி வழியாக மேலத்திருமாணிக்கம் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலத்திருமாணிக்கம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்