Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

காளமேகப் பெருமாள் கோயில் – திருமோகூர்

பிற தெய்வத்தின் பெயர்கள்

மோகனவல்லித் தாயார்


அமைவிடம்

மதுரையிலிருந்து, மேலூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது


தலத்தின் சிறப்பு

சங்கப் புலவர்களின் பாடல்களில் பெருமையாகப் பதிவாகியுள்ளது. நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் தங்கள் பாசுரங்களில் இத்தலத்தின் பெருமையைப் பாடியுள்ளனர். பின்னர் விசயநகரர், நாயக்கர் கால ஆசாரியர்களும் புலவர்களும் இதனைப் போற்றி எழுதியுள்ளனர். மணவாள மாமுனி, அழகிய மணவாளப் பெருமாள், சிலேடைக் கவிஞர் காளமேகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்றோர் தங்கள் படைப்புகளில் திருமோகூரின் ஆன்மிக ஒளியை வெளிப்படுத்தியுள்ளனர்.


ஊர்

திருமோகூர்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
காளமேகப் பெருமாள்
திருவிழாக்கள் விவரங்கள்
இக்கோயிலில் ஆறுகால பூஜைகள் பாஞ்சராத்ர ஆகம முறையில் சிறப்பாக நடைபெறுகின்றன. திருமோகூரில் ஆண்டெங்கும் பல திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்; அவற்றில் மாதாந்திர திருவோண உற்சவம், சித்திரைத் திருவிழா, வைகாசி நம்மாழ்வார் பிரம்மோற்சவம், ஆனி முப்பழ உற்சவம், ஆவணி திருப்பவித்ரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீப உற்சவம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, மாசி கஜேந்திரமோட்சம், பங்குனி திருக்கல்யாணம் முக்கியமானவையாகும். இவற்றில் குறிப்பிடத்தக்கது கஜேந்திரமோட்ச உற்சவம் — பெருமாள் கஜேந்திரனை மீட்கும் தெய்வீக நிகழ்வு.

 

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 8-9ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் தமிழில் பதினொரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன; வடமொழிச் சொற்கள் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. பிற்காலப் பாண்டியர் காலத்து ஐந்து கல்வெட்டுகளும், விசயநகரர் காலத்து இரண்டு கல்வெட்டுகளும் முக்கியமானவை. இவை திருப்பணிகள், பூசைகள், தானங்கள் குறித்தும், சடையவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகரபாண்டியன் வழங்கிய நிலங்கள் மற்றும் வரிவிலக்குகள் பற்றியும் தெரிவிக்கின்றன. பின்னர் விசயநகரர், நாயக்கர், மருதுபாண்டியர் காலங்களில் கோபுரம், மண்டபம், சுவர், திருக்குளம் போன்றவை தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் திருமோகூர் கோயிலின் அரசியல், சமய, மற்றும் கட்டட வரலாற்றை வெளிப்படுத்தும் புதையல்களாகும்.

 

தல வரலாறு / கதைகள்

 

மதுரையிலிருந்து, மேலூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமோகூர். சங்ககாலத்தில் வலிமையான கோட்டையுடன் பழையன் என்னும் சிற்றரசனால் ஆளப்பட்ட இவ்வூர், சங்கப் புலவர்களின் பாடல்களில் பெருமையாகப் பதிவாகியுள்ளது. சங்க காலத்திற்குப் பின் வைணவ மரபில் சிறப்புப் பெற்ற திவ்யதேசமாக விளங்கும் திருமோகூர், பாண்டிநாட்டுத் திவ்யதேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் தங்கள் பாசுரங்களில் இத்தலத்தின் பெருமையைப் பாடியுள்ளனர். பின்னர் விசயநகரர், நாயக்கர் கால ஆசாரியர்களும் புலவர்களும் இதனைப் போற்றி எழுதியுள்ளனர். மணவாள மாமுனி, அழகிய மணவாளப் பெருமாள், சிலேடைக் கவிஞர் காளமேகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்றோர் தங்கள் படைப்புகளில் திருமோகூரின் ஆன்மிக ஒளியை வெளிப்படுத்தியுள்ளனர். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தில், காளமேகமான காங்கேயராயர் என்ற பாண்டிய அரசின் அதிகாரி சக்கரத்தாழ்வாருக்குத் தனிக் கோயில் கட்டியதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்த பெரியமருது, சின்னமருது என அழைக்கப்படும் மருதுபாண்டியர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சைவ, வைணவக் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் வழங்கினர். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலுக்கும் இவர்கள் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். இவ்விரு வீரர்களின் அழகிய உருவச்சிலைகள் கோவிலின் கம்பத்தடி மண்டபத் தூண்களில் பெருமாளை நோக்கி வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளன; அவர்களின் பக்கத்தில் அவர்களது அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களின் உருவங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

கோயில் அமைப்பு
இக்கோயிலில் பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அனுமார், நவநீத கிருஷ்ணன் ஆகியோருக்குத் தனித்தனியான சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முதற்கோபுரம் அண்மைக் காலத்தது; அதற்கு அடுத்துள்ள முதல்சுற்றுக் கோபுரம் விஜயநகரர் காலத்தைச் சேர்ந்தது. கருடமண்டபத்தின் தென்புறத் தூணில் கரும்புவில், மலர்க்கணையுடன் மன்மதனும், எதிரே உள்ள தூணில் அன்னத்தில் அமர்ந்திருக்கும் ரதிதேவியும் காட்சியளிக்கின்றனர்.
மண்டபத்தின் கீழ்த்தூண்களில் இராமர், சீதை, இலக்குவனின் சிற்பங்கள் பெருமாளை நோக்கி அமைந்துள்ளன. பரமபதவாசல், முதல் திருச்சுற்று திருமதிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது.  சக்கரத்தாழ்வாரின் சந்நிதியில், முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும்  பின்புறம் நரசிங்கப் பெருமான் ஆகவும் திருவாழி ஆழ்வார் திருக்கோலம் திகழ்கிறது.  பிற்காலப் பாண்டியர் காலத்துப் பழமையான சக்கரத்தாழ்வார் சிற்பம் இரண்டாம் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் காணப்படுகிறது. இரண்டாம் திருச்சுற்றான ஆடிவீதியில் ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது.
பாண்டியர் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில், கல்லால் செதுக்கப்பட்ட திருமால் தெற்குநோக்கிப் பள்ளியெடுத்துக் கிடக்கும் நிலையில் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலின் கருவறை எளிமையான பாண்டிய கலைப்பாணியில் தேவகோட்டங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தடி மண்டபம் நாயக்கர் காலத்தின் கலைப்பாணியில் சிறப்பாகத் திகழ்கிறது.

 

கூடுதல் விவரங்கள்
8–9ஆம் நூற்றாண்டிலேயே இங்குக் கோயில் இருந்தாலும், தற்போது காணப்படும் அமைப்புகள் பிற்காலப் பாண்டியர் மற்றும் நாயக்கர் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்டவை. இக்கோயிலில் குடிகொண்டிருப்பவர் காளமேகப் பெருமாள். தாயார் மோகனவல்லித் தாயார். கருவறையில் பெருமாள் நின்ற நிலையில், தாயார் இருவரும் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கின்றனர். கோவில் விமானம் சதுர வடிவில் அமைந்துள்ளது. அதன் முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருடமண்டபம் ஆகியவற்றுடன் விளங்குகிறது. கருவறையுள்ள விமானம் உயர்ந்த உபபீடத்துடன் அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய ஆறு அங்கங்களையும் இரண்டு தளங்களையும் கொண்டுள்ளது. இவ்விமானத்தின் சிகரம் நாகர வடிவில் அமைந்துள்ளது. இவ்விமானத்தின் கலைப்பாணி விசயநகர வேந்தர் காலக் கட்டடப்பாணியில் அமைந்திருக்கிறது. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் — சங்க காலச் சுவடுகள், ஆழ்வார்களின் பக்தி, பாண்டியர்–நாயக்கர் காலக் கலை நயம் ஆகியவற்றைத் தாங்கிய புனிதத் தலம். பாண்டிய மன்னர்களின் அர்ப்பணிப்பு, நாயக்கர் கலைஞர்களின் திறமை, மருதுபாண்டியர்களின் பக்தி ஆகியவை இணைந்த இத்தலம், நம்மாழ்வார் பாடிய திவ்யதேசப் பெருமையால் இன்றும் ஒலிக்கிறது

 

தகவல்

க.த. காந்திராஜன்

மீடியா கோப்புகள் இல்லை