Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சித்திரரத வல்லப பெருமாள் கோயில்

Chithira Ratha Vallaba Perumal temple

தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களில் ஒன்றான வியாழன் கிரகம் யோக குருவாக காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.


மூலவர் பெயர்

சித்திரரத வல்லப பெருமாள்


தல மரம்

வில்வ மரம்


ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
வைகை ஆறு
பூசைக்காலம்
தினமும் வழிபாடு நடைபெறுகிறது. வியாழன் என்றழைக்கப்படும் குரு பகவானே இவ்விடத்தில் தவம் புரிந்ததால் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி, குருபெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். மேலும் திருமண பாக்கியம் இல்லாதவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் தாயார் சந்நிதிக்கு முன்பு உள்ள வில்வ மரத்தில் தொட்டில், தாலி கயிறு மற்றும் வளையல் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பாண்டிய காலம்
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அதிட்டான பகுதியிலும் கோயில் சுவர்களிலும் கோயில் கொடி மரத்தின் கீழ் பகுதியிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் தற்போது சித்திர ரத வல்லவப பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்டாலும், கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருச்சக்கர தீர்த்தத்து நின்றருளிய பரமசுவாமிகள், எம்பெருமான் என்னும் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டுகளில் பாகனூர்க் கூற்றத்துப் பிரமதேயம் சோழாந்தகச் சதுர்வேதிமங்கலத்து திருச்சக்கரத்தாழ்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த ஸ்ரீ வல்லவன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை இங்கு உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு அறியலாம். இங்கு மொத்தம் 14 இடைக்காலப் பாண்டியர் ( பொது ஆண்டு 10-12ஆம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் உள்ளன. இவை இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் மற்றும் பொன் ஆகிய கொடைகள் குறித்து கூறுகின்றன. 'உய்யக் கொண்டாள்வார்' என்ற பெயரில் ஒரு செப்புத் திருமேனியை நெற்குப்பை நாட்டு கேரளாந்தகபுரத்தைச் சேர்ந்த வியாபாரி அப்பன் ஈசுரவனின் மனைவி திருவரங்கன் பெற்றதிரு என்பவர் செய்தளித்துள்ளார். இச்செப்புத் திருமேனி தற்போது இக்கோயிலில் காணப்படவில்லை.
சிற்பங்கள்
குருபகவான், சக்கரத்தாழ்வார்,செண்பகவல்லித் தாயார், 12 ஆழ்வார்கள் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையே போர் நடைபெற்ற போது அசுரர்கள் பலர் உயிரிழந்தனர். அசுர குரு சுக்கிராச்சாரியார், மருதசஞ்சீவினி மந்திரத்தின் மூலம் அவர்களை உயிர்ப்பித்து காப்பாற்றினார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், வியாழபகவானின் மகன் கசனை அழைத்து, சுக்கிராச்சாரியாரிடம் குருகுல வாசம் செய்து மந்திரத்தை கற்று வரும்படி கூறினர்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, கசன் அசுரலோகத்திற்குச் சென்றான். அங்கு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயாணியிடம் அன்பு செலுத்துவது போல் நடித்து, அவளின் வழியாக மந்திரத்தை கற்றுக்கொண்டான். இதைக் கவனித்த அசுரர்கள், கசனை கொன்று சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியாரின் பானத்தில் கலக்கி கொடுத்துவிட்டனர்.

கசன் அவரது வயிற்றில் இருப்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்த சுக்கிராச்சாரியார், தேவயாணியின் வேண்டுகோளின்படி கசனை உயிர்ப்பித்தார். உயிர் பெற்ற கசன், சுக்கிராச்சாரியார் இறந்திருப்பதை கண்டு, அவரிடம் கற்ற மந்திரத்தின் மூலம் அவரையும் உயிர்ப்பித்தான். பின் கசன், "குருவே, என் காரியம் முடிந்தது. எனக்கு விடை தாருங்கள்" எனக் கூறினான். சுக்கிராச்சாரியார், தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்றார். அதற்கு கசன், " உங்கள் வயிற்றிலிருந்து மீண்டுள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை" எனக் கூறி தேவலோகம் கிளம்பினான்.

இதைக் கேட்டு கடும்கோபம் கொண்ட தேவயாணி, சப்த மலைகளால் கசனைத் தடுத்து, தேவலோகம் செல்ல முடியாமல் அசுரலோகத்தில் தங்க வைத்தாள். கசனை மீட்க குரு பகவான் இத்தலத்தில் பெருமாளை வேண்டினார். பெருமாள் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பெருமாள் சித்திரா பௌர்ணமி அன்று சித்திர தேரில் (ரதத்தில்) எழுந்தருளியதால், இவர் ’சித்திரரத வல்லப பெருமாள்’ என அழைக்கப்படுகிறார்.

குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் செய்ததால் இவ்வூர் குருவி(ன்)த்துறை என்று அழைக்கப்பட்டு பின் குருவித்துறை ஆனது.
கோயில் அமைப்பு
கோயிலில் கோபுரம், கொடிமரம், 28 தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைப்புகள் காணப்படுகின்றன. இதைத்தவிர குரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வார் சந்நிதி, கருடன் சந்நிதி, செண்பகவல்லி தாயார் சந்நிதி ஆகியவை காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்திகளாக இங்கு அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு (வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்களும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இக்கோயிலில் வேண்டினால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கருப்பண்ணசாமி கோயில்
செல்லும் வழி
குருவித்துறை, அணைப்பட்டி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருவித்துறை பேருந்து நிறுத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சோழவந்தான் தொடர் வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

காணொலி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி