Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெருங்காட்டுக் கோயில் (அ) பெருங்காட்டு இராணுவம்

கோயிலின் வேறு பெயர்

பெருங்காட்டு இராணுவம்


அமைவிடம்

சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது ஒரு சிறிய கிராமம் கோட்டை வேங்கைபட்டி.இந்தக் கிராமத்தின் எல்லைக்குள், காட்டுச் சூழலில், திறந்த வெளியில் அமைந்துள்ளது


திருவிழாக்கள் விவரங்கள்

முன்னோர்கள் “பெருங்காட்டு இராணுவம்” என்ற கோயிலில் நாய் சிற்பத்தை வைத்து, கிராமக் காவலராக வழிபட்டு வருகின்றனர். இவ்வூரில் ஆண்டி, நெவிலம், எளுவன், வைரவன் கூட்டங்கள் என நான்கு கரை மக்கள் வாழ்கின்றனர்.அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் ஒரு நாள் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவிற்கு முன்னதாக, நெவிலியப்பன் கரையினர்மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் ஆடி தேரோட்டம் காணச் செல்கிறார்கள். அவர்கள் தேரோட்டம் கண்டு வந்த பின்தான், பெருங்காட்டுக் கோயிலின் விழா தொடங்கும்.
திருவிழாவுக்கான தயாரிப்புகள் சில நாள்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.ஊர்வாசிகள் சேர்ந்து வசூலித்த பணத்தைக் கொண்டு,மணியம்பட்டியில் உள்ள வேளாளர் குடும்பத்தாரிடம் நாய் சிலை செய்வதற்கு ஒப்படைப்பார்கள். ஒரு நாய் சிலை செய்ய சுமார் ஐந்நூறு ரூபாய் செலவாகும்.பிற ஊர்களிலிருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச்  சிலைகள் செய்ய நிதி வழங்குவர். சிலை செய்வது பாரம்பரிய கைவினை நுணுக்கம் நிறைந்த கலை. முதலில் களிமண் குளத்தில் இருந்து மண் எடுத்து, உலர வைப்பார்கள்.
பின்னர் நெல் கருக்கைச் சேர்த்து, காலால் மிதித்து பிசைந்து பக்குவப்படுத்துவார்கள்.
இரண்டு நாள் உலர்ந்த பிறகு, அதிலிருந்து சிலை வடிவமைக்கப்படும்.அதை சுல்லையில் வைத்து சுடச்செய்து, உறுதிப்படுத்துவர்.பின்னர் வண்ணம் பூசி அலங்கரிக்கப்படுகிறது. சிலைகள் ஊருக்குக் கொண்டுவரப்பட்டதும், மக்கள் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, பழங்கள் வைத்து வழிபட்டு, அவற்றைப் பெருங்காட்டுக் கோயிலுக்குக் கொண்டு செல்வார்கள்.
முன்னொரு காலத்தில் ஒரே நாய் சிலையே வைக்கப்பட்டது.இப்போது பக்தர்கள் அதிகரித்ததால் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.இவ்விடத்தில் ஆடு பலி கொடுக்கும் வழக்கம் இல்லை. இங்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் சூடம், சாம்பிராணி, தேங்காய், மலர் போன்ற நறுமணப் பொருள்களால் மட்டுமே நடைபெறும்.
பலியில்லா இம்மரபே, இத்திருவிழாவின் ஆன்மிகச் சிறப்பாக விளங்குகிறது. வழிபாடு முடிந்த பின், வீடுதோறும் உறவினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட சிறப்பான விருந்து வழங்கப்படும்.
அந்த இரவு, பாரம்பரியமாக “வள்ளி திருமண நாடகம்” மேடையேறும்.
இது திருவிழாவின் ஆனந்தமிகு நிறைவாகக் கருதப்படுகிறது. 

 


ஊர்

கோட்டை வேங்கைபட்டி

மாவட்டம்

சிவகங்கை

தல வரலாறு / கதைகள்

இப்பகுதி மக்களின் முன்னோர்கள் வேட்டையைத் தங்கள் முதன்மைத் தொழிலாகக் கொண்ட வேட்டைச் சமூகத்தினர்.அவர்கள் வாழ்வில் நாய்,ஒரு துணை, ஒரு காவலன், ஒரு குடும்ப உறுப்பினர்.இன்றளவும் இம்மக்கள் மாசி மாதம் சிவராத்திரி மற்றும் பாரி வேட்டை போன்ற சமயங்களில்,நாயுடன் சேர்ந்து முயல் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.இவர்களின் வாழ்க்கையில் நாய் வளர்ப்புக்கு மிக முக்கியமான பங்குள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நாட்டு நாய் இருக்கும்;அது வீட்டையும், காட்டையும் காக்கும் காவலனாகக் கருதப்படுகிறது.

சுருக்கம்
சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது ஒரு சிறிய கிராமம்  கோட்டை வேங்கைபட்டி.இந்தக் கிராமத்தின் எல்லைக்குள், காட்டுச் சூழலில், திறந்த வெளியில் அமைந்துள்ளது ஓர் அரிய வழிபாட்டுத் தலம் தான் பெருங்காட்டுக் கோயில்  என்ற பெருங்காட்டு இராணுவம். இக்கோயிலின் மைய பீடத்தில், வழக்கமான தெய்வச் சிலைகள் இல்லை.அதற்குப் பதிலாக — ஒரு நாய் சிற்பம்.அந்த நாயே இங்கு முதன்மை தெய்வமாக வழிபடப்படுகிறது.

 

தகவல்

க.த. காந்திராஜன்

மீடியா கோப்புகள் இல்லை