Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சாமநத்தம் வரலாறு

History of Samanatham

ஊரின் வரலாற்றுப் பெயர்

சாம்பல் நத்தம்


பெயர்க் காரணம்

சாமநத்தம் என்ற ஊர் மதுரைக்கு தெற்கே சிந்தாமணி நெடுங்குளம் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு மேற்கே உள்ள திடலில் பொது ஆண்டு 7 - ஆம் நூற்றாண்டில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அச்சமயம் சமணர்களின் ரத்தம் ஆறாக ஓடியதாம் அதனால் சமண ரத்தம் என அழைக்கப்பட்டது. இவ்வூர் பின்னாளில் சாம ரத்தம் எனவும் அதற்கு பின் சாமநத்தம் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இதற்கு வரலாற்று ஆவணம் ஏதும் இல்லை. எனினும் பிற்கால இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் சடங்குகளில் இக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று 36-ஆவது திருவிளையாடல் “இரசவாதம் செய்த படலம்” திருப்பூவணத்தில் நடைபெறும். இத்திருவிளையாடலின் போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவனத்திற்கு எழுந்தருளச் செய்து, இரவு தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவனத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது. எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. சிலைமான் என்ற ஊருக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர். கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை. நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.

அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்தனர் உதவினர். மீனாட்சியும் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர். மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தார். எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவிய அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டார். உதவியோர் அனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினார். சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது.


வீடுகளின் எண்ணிக்கை

100 - 200


ஊர்

சாமநத்தம்

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
முதலியார்கள், யாதவர்கள் , ஒரே ஒரு சைவ குடும்பம் என கலந்து வாழ்கின்றனர். கிராமம் தெருக்களுக்கு செல்லும் முன்பாக இடது புறம் செல்லும் பாதையில் அய்யனார் கோவிலின் வலப்புறம் காமராசர் திறந்து வைத்த அரிஜனக் காலனி. அதன் உள்ளே ஐம்பத்து ஐந்தாயிரம் செலவில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என ஒரு கட்டுப்பாடான கிராமமாகவே திகழ்கிறது.
ஊர் வரலாறு

சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் போராட்டம் :

பொது ஆண்டு 1710-ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுவாமிகளின் பல்லக்கை சுமக்கும் சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் 64 பேருக்கு, சாமநத்தம் உள்ளிட்ட 4 கிராமங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவரது ஆட்சிக்கு பின்னால், அந்த கிராமங்கள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சீர்பாதம் தாங்கிகள் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினர். அப்போது குட்டி என்பவர் சொக்கநாதர் சன்னதிக்கு நேரே உள்ள வாயில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து இறந்தார். அதனால், அந்த வாயிலில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில், அம்மன் சன்னதிக்கு நேரே ஒரு வாயில் அமைக்கப்பட்டு, அதுவே தற்போது மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் விவரங்கள்

மதுரையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் மதுரை - அருப்புகோட்டை சாலையில் விரகனூர் பகுதியில் சாமநத்தம் கண்மாய் உள்ளது. சரித்திர காலத்தில் இருந்து மதுரைக்கும், இந்த கண்மாய்க்கும் பல்வேறு வரலாற்று தொடர்புகள் உள்ளன. அவனியாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் நீர் ஆதாரமாக திகழ்ந்தது. மதுரையில் ஆண்டு முழுவதும் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர்நிலையாக இந்த சாமநத்தம் கண்மாய் திகழ்கிறது.

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

முனைவர் கண்ணன், முனைவர் ஆத்மநாதன்