Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வாலாந்தூர் வரலாறு

History of Valanthur

ஊரின் வரலாற்றுப் பெயர்

காசி புளிமந்தை


பெயர்க் காரணம்

வாலாந்தூர் கண்மாயின் கீழ் உள்ள மந்தையில் மிகப்பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. இந்தப் புளியமரம் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கின்றனர் இப்பகுதி மக்கள். காசியிலிருந்து துறவி ஒருவர் வழிப்போக்கராக இந்தப் பக்கம் வந்ததாகவும், அவர் கொண்டு வந்த புளியங்கொட்டையை ஊன்றி வளர்த்ததால் இந்த மரத்துக்குக் காசிப்புளி மந்தை என்று பெயர் வந்ததாம். அங்காள ஈஸ்வரி வம்சாவளிகளின் தீர்க்க முடியாத பஞ்சாயத்துகள் இங்குத்தான் கடந்த இரு நூறாண்டுகளாகத் தீர்க்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர். சாதாரண வழக்குகள் இங்கு எடுத்துக் கொள்ளப்படாது. தீர்க்க முடியாத வழக்குகள் மட்டும்மே இங்கு எடுத்துக் கொள்ளப்படும். இங்கு வழக்கு வந்து விட்டால் அது முடிக்கப்பட்டு விடும் என்றும், அதற்குமேல் அவ்வழக்கைப் பற்றி யாரும் நடைமுறையில் பேசவோ எடுத்துக்கொள்ளவோ கூடாது என்பதும் இப்பகுதி மக்களின் கட்டுப்பாடு. புளியமரத்தின் கீழ் அம்பலக் கல் (ஊர்ப்பொது மேடைக்கல்) உள்ளது.

பொதுவாகத் தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்து அமைப்பில் பெரும்பாலும் அரசமரம், ஆலமரம் மற்றும் வேம்பு ஆகியவை தான் பஞ்சாயத்துக் கூடும் இடமாக இருக்கும். புளியமரத்தின் கீழ் இரவு உறங்கக் கூடாது, பேய்பிடித்தவரின் முடியைப் புளியமரத்தில் அறைந்து வைக்கவேண்டும், இம்மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது, போன்ற நம்பிக்கைகள் மக்களிடையே இருக்கும்போதிலும், இங்கு இந்தப் புளியமரத்தின் அடியில்தான் பஞ்சாயத்து நடைபெறுகிறது. புளியமரத்தின் முன்பு குற்றவாளி பணிகிறான். புளியமரத்தின் முன் பொய் பேசக்கூடாது என்பது இவ்வூர் விதியாகும். இன்றும் இம்மரத்தின் முன்பு சூடம் வைத்து வணங்கப்படுகிறது. தண்டனையை வழங்குவதற்கு முன்பு, இவ்வூர்ப் பஞ்சாயத்துக்காரர்கள் மக்களைக் கைதூக்கச் செய்து, அவர்கள் கருத்துக்களைக் கேட்டுத்தான் முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

1000 வீடுகளுக்கு மேல் உள்ளது


ஊர்

வாலாந்தூர்

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
7
கூடுதல் விவரங்கள்

இவ்வூர் மதுரையிலிருந்து கொச்சி செல்லும் பழைய சேர நாட்டுப் பெருவழியில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள பெரிய கண்மாய்க்கு அசுவமாநதியிலிருந்து நீர் வருகிறது. ஆகையால் பெரும்பான்மையான மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுகின்றனர். வேளாண் உற்பத்தி அதிகம் இருப்பதால் இப்பகுதியில் திருவிழாக்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் தனித்தனியே கோயில்கள் உள்ளது. இருப்பினும் அனைத்து சமூக மக்களாலும் வணங்கப்படும் அங்காள பரமேஸ்வரி கோயில் இப்பகுதியில் சிறப்புவாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது.

தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

விஜயகுமார்